2 இராஜாக்கள் 9:30-37

2 இராஜாக்கள் 9:30-37 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

யெகூ யெஸ்ரயேலுக்கு வந்தான்; அதை யேசபேல் கேட்டபோது, தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையைச் சிங்காரித்துக்கொண்டு, ஜன்னல் வழியாய் எட்டிப்பார்த்து, யெகூ ஒலிமுகவாசலில் வந்தபோது, அவள்: தன் ஆண்டவனைக் கொன்ற சிம்ரி ஷேமம் அடைந்தானா என்றாள். அப்பொழுது அவன் தன் முகத்தை அந்த ஜன்னலுக்கு நேராக ஏறெடுத்து: என் பட்சத்தில் இருக்கிறது யார்? யார்? என்று கேட்டதற்கு, இரண்டு மூன்று பிரதானிகள் அவனை எட்டிப்பார்த்தார்கள். அப்பொழுது அவன்: அவளைக் கீழே தள்ளுங்கள் என்றான்; அப்படியே அவளைக் கீழே தள்ளினதினால், அவளுடைய இரத்தம் சுவரிலும் குதிரைகளிலும் தெறித்தது; அவன் அவளை மிதித்துக்கொண்டு, உள்ளேபோய், புசித்துக் குடித்த பின்பு: நீங்கள் போய் சபிக்கப்பட்ட அந்த ஸ்திரீயைப் பார்த்து, அவளை அடக்கம்பண்ணுங்கள்; அவள் ஒரு ராஜகுமாரத்தி என்றான். அவர்கள் அவளை அடக்கம்பண்ணப்போகிறபோது, அவளுடைய தலையோட்டையும் கால்களையும் உள்ளங்கைகளையுமே அல்லாமல் வேறொன்றையும் காணவில்லை. ஆகையால் அவர்கள் திரும்பவந்து அவனுக்கு அறிவித்தார்கள்; அப்பொழுது அவன்: இது கர்த்தர் திஸ்பியனாகிய எலியா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு சொன்ன வார்த்தை; யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் யேசபேலின் மாம்சத்தைத் தின்னும் என்றும், இன்னது யேசபேலென்று சொல்லக்கூடாதபடிக்கு, யேசபேலின் பிரேதம் யெஸ்ரயேலின் நிலத்திலே வயல்வெளியின்மேல் போடும் எருவைப்போல் ஆகும் என்றும் சொன்னாரே என்றான்.

2 இராஜாக்கள் 9:30-37 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகூ யெஸ்ரயேலுக்குப் போனான். யேசபேல் அதைக் கேள்விப்பட்டபோது, அவள் தன் கண்களுக்கு மை பூசி தன் தலையை அலங்கரித்துக்கொண்டு, ஜன்னலருகே பார்த்துக்கொண்டு நின்றாள். யெகூ வாசலுக்கு வந்தபோது யேசபேல் அவனைப் பார்த்து, “கொலைகாரனே! தன் எஜமானைக் கொலைசெய்த சிம்ரியைப் போன்றவனே! சமாதானத்துடன் வருகிறாயா” என்று கேட்டாள். யெகூ மேலே நிமிர்ந்து ஜன்னலைப் பார்த்து, “எனக்குச் சார்பாக இருப்பவர்கள் யார்?” என்றான். இரண்டு மூன்று அதிகாரிகள் வெளியே அவனை எட்டிப் பார்த்தார்கள். அப்பொழுது யெகூ அவர்களிடம், “அவளைத் தூக்கி கீழே எறிந்துவிடுங்கள்” என்றான். அவர்கள் அவளைக் கீழே எறிந்தார்கள். அவளுடைய இரத்தம் சுவரிலும், குதிரைகளிலும் தெறித்தது. யெகூ அவளுக்கு மேலாக தேரைச் செலுத்தினான். அவன் உள்ளே போய் சாப்பிட்டுக் குடித்து, “இந்தச் சபிக்கப்பட்ட பெண்ணை எடுத்துக்கொண்டுபோய் அடக்கம்பண்ணுங்கள். அவள் ஒரு அரசனின் மகள்” என்று கூறினான். ஆனால் அவளை அடக்கம்பண்ணுவதற்குப் போனபோது அவளுடைய மண்டையோட்டையும், கால்களையும், கைகளையும் தவிர வேறெதையும் காணவில்லை. அவர்கள் திரும்பிப்போய் அதை யெகூவுக்கு அறிவித்தபோது அவன் பதிலாக, “திஸ்பிய ஊரைச்சேர்ந்த யெகோவாவின் பணியாளன் எலியாவின் மூலம் யெகோவா கூறிய வார்த்தை இதுவே: யெஸ்ரயேலின் வெளிநிலத்தில் யேசபேலின் சதையை நாய்கள் தின்னும். யேசபேலின் உடல் யெஸ்ரயேல் நிலத்தின் வயல்வெளியின் எருவைப்போல கிடக்கும். அதைப் பார்க்கும் யாரும், ‘அது யேசபேல்’ என்று கூற முடியாமலிருக்கும் என்று சொல்லியிருந்தாரே” என்றான்.

2 இராஜாக்கள் 9:30-37 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகூ யெஸ்ரயேலுக்கு வந்தான்; அதை யேசபேல் கேட்டபோது, தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையை அலங்கரித்துக்கொண்டு, ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து, யெகூ பட்டணத்து நுழைவாயிலுக்கு வந்தபோது, அவள்: தன் ஆண்டவனைக் கொன்ற சிம்ரி பாதுகாக்கப்பட்டானா என்றாள். அப்பொழுது அவன் தன் முகத்தை அந்த ஜன்னலுக்கு நேராக ஏறெடுத்து: என்னுடன் இருக்கிறது யார் யார் என்று கேட்டதற்கு, இரண்டு மூன்று அதிகாரிகள் அவனை எட்டிப்பார்த்தார்கள். அப்பொழுது அவன்: அவளைக் கீழே தள்ளுங்கள் என்றான்; அப்படியே அவளைக் கீழே தள்ளினதால், அவளுடைய இரத்தம் சுவரிலும் குதிரைகளிலும் தெறித்தது; அவன் அவளை மிதித்துக்கொண்டு, உள்ளேபோய், சாப்பிட்டுக் குடித்த பின்பு: நீங்கள் போய் சபிக்கப்பட்ட அந்த பெண்ணைப் பார்த்து, அவளை அடக்கம் செய்யுங்கள்; அவள் ஒரு ராஜகுமாரத்தி என்றான். அவர்கள் அவளை அடக்கம்செய்யப்போகிறபோது, அவளுடைய தலையோட்டையும் கால்களையும் உள்ளங்கைகளையும் தவிர வேறொன்றையும் காணவில்லை. ஆகையால் அவர்கள் திரும்பிவந்து அவனுக்கு அறிவித்தார்கள்; அப்பொழுது அவன்: இது யெகோவா திஸ்பியனாகிய எலியா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு சொன்ன வார்த்தை; யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் யேசபேலின் மாம்சத்தைத் தின்னும் என்றும், இதுதான் யேசபேலென்று சொல்லமுடியாத அளவிற்கு, யேசபேலின் பிரேதம் யெஸ்ரயேலின் நிலத்திலே வயல்வெளியின்மேல் போடும் எருவைப்போல் ஆகும் என்றும் சொன்னாரே என்றான்.

2 இராஜாக்கள் 9:30-37 பரிசுத்த பைபிள் (TAERV)

யெகூ யெஸ்ரயேலுக்குப் போனான். இச்செய்தியை யேசபேல் அறிந்தாள். தலையைச் சிங்காரித்து அலங்காரம் செய்து கொண்டு பிறகு ஜன்னல் வழியாகப் பார்த்தாள். யெகூ நகரத்து வாசலில் நுழைந்ததும் அவள், “சிம்ரி! அவனை போல நீயும் உன் எஜமானனைக் கொன்றிருக்கிறாய்” என்றாள். யெகூ மேலே ஜன்னலைப் பார்த்து, “என் பக்கத்தில் இருப்பது யார்?” என்று கேட்டான். மேலிருந்து இரண்டு மூன்று அலிகள் அவனைப் பார்த்தார்கள். அவர்களிடம் யெகூ, “யேசபேலைக் கீழே தள்ளுங்கள்” என்றான். அவர்களும் அவ்வாறே கீழே அவளைத் தள்ளினார்கள். அவளது இரத்தத்தில் கொஞ்சம் சுவர் மீதும் குதிரைகள் மீதும் தெளித்தது. குதிரைகள் அவள் மேலே நடந்துச் சென்றன. யெகூ, வீட்டிற்குள் போய் உண்டு குடித்தான். அவன், “இப்போது சபிக்கப்பட்ட இந்தப் பெண்ணைப் பாருங்கள். ராஜாவின் குமாரத்தியாகையால் அவளை அடக்கம் செய்யுங்கள்” என்றான். அந்த ஆட்கள் அவளை அடக்கம்பண்ணச் சென்றனர். ஆனால் அவளது உடலைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அவர்கள் அவளது கபாலம், கால்கள், கைகள், ஆகியவற்றையே கண்டுபிடித்தனர். அவர்கள் யெகூவிடம் திரும்பிவந்தனர். பிறகு யெகூ, “இது கர்த்தர் திஸ்பியனாகிய எலியா என்னும் தமது தொண்டனைக் கொண்டு சொன்ன வார்த்தை: ‘யெஸ்ரயேலின் நிலத்தில் யேசபேலின் மாமிசத்தை நாய்கள் தின்னும், என்றும் இதுதான் யேசபேல் என்று சொல்ல முடியாதபடி அவளது பிணம் வயல் வெளியில் போடப்படும் எருவைப் போன்று ஆகும்’” என்றான்.