அப்போஸ்தலர் 16:16-33

அப்போஸ்தலர் 16:16-33 TCV

ஒருமுறை, நாங்கள் மன்றாடும் இடத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது, நாங்கள் ஒரு அடிமைப் பெண்ணைச் சந்தித்தோம். அவளிலே ஒரு தீய ஆவி இருந்தது. அவள் அந்த ஆவியைக் கொண்டு, எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்னறிவித்தாள். அவள் இவ்வாறு குறிசொல்வதன் மூலம் தனது எஜமானர்களுக்குப் பெருந்தொகைப் பணத்தைச் சம்பாதித்துக் கொடுத்துக்கொண்டிருந்தாள். இந்தப் பெண் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து, “இந்த மனிதர் மகா உன்னதமான இறைவனின் ஊழியர்கள்; இவர்கள் உங்களுக்கு இரட்சிக்கப்படுவதற்கான வழியை அறிவிக்கிறார்கள்” என்று சத்தமிடுவாள். அவள் இப்படி பல நாட்களாய்ச் செய்துகொண்டிருந்தாள். கடைசியாக பவுல் மிகவும் சலிப்படைந்து, அந்த தீய ஆவியிடம், “இயேசுகிறிஸ்துவின் பெயரிலே நான் உனக்குக் கட்டளையிடுகிறேன், நீ இவளை விட்டு வெளியே வா!” என்றான். அந்த வினாடியே அந்தத் தீய ஆவி அவளைவிட்டு வெளியே வந்தது. அந்த அடிமைப் பெண்ணுடைய எஜமானர், பணம் சம்பாதிக்கும் தங்கள் எதிர்பார்ப்பு போய்விட்டது என்று அறிந்தபோது, அவர்கள் பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைகூடும் இடத்தில் அதிகாரிகளிடம் இழுத்துக்கொண்டு வந்தார்கள். அவர்கள் இவர்களை தலைமை நீதிபதிகளுக்கு முன்பாகக் கொண்டுவந்து, “இவர்கள் யூதர்கள், இந்த மனிதர் நமது பட்டணத்தில் குழப்பம் உண்டாக்குகிறார்கள், ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவோ, நடைமுறைப்படுத்தவோ முடியாத, சட்டத்திற்கு முரணான முறைமைகளை இவர்கள் போதிக்கிறார்கள்” என்றார்கள். அப்பொழுது கூடியிருந்தவர்கள், பவுலையும் சீலாவையும் தாக்கத் தொடங்கினார்கள். தலைமை நீதிபதிகள் இவர்களுடைய உடைகளைக் கழற்றி, இவர்களை அடிக்கும்படி உத்தரவிட்டார்கள். அவர்கள் சவுக்கினால் கடுமையாக அடித்தபின், சிறையில் போட்டார்கள். சிறைக்காவலனிடம், இவர்களைக் கவனமாய் காவல் செய்யும்படியும் உத்தரவிட்டார்கள். இக்கட்டளைகளைப் பெற்றபோது, அந்தச் சிறைக்காவலன் இவர்களை உட்சிறையில் போட்டு, இவர்களுடைய கால்களை மர சங்கிலியினால் மாட்டிவைத்தான். கிட்டத்தட்ட நடு இரவில் பவுலும் சீலாவும் மன்றாடிக்கொண்டும், இறைவனுக்குப் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருந்தார்கள். மற்ற சிறைக் கைதிகள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். திடீரென ஒரு பெரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது. அதனால் அந்தச் சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசைந்தன. அப்பொழுது சிறைச்சாலைக் கதவுகள் எல்லாம் திறவுண்டன. சிறையிலிருந்த ஒவ்வொருவரையும் கட்டியிருந்த சங்கிலிகள் கழன்று விழுந்தன. சிறைக்காவலன் எழுந்திருந்து, சிறைச்சாலைக் கதவுகள் திறந்து கிடந்ததைக் கண்டபோது, அவன் தன் வாளை உருவித், தற்கொலைசெய்ய முயன்றான். ஏனெனில், சிறைக் கைதிகள் தப்பியோடிவிட்டார்கள் என்று அவன் நினைத்தான். ஆனால் பவுல் சத்தமிட்டு அவனிடம், “நீ உனக்குத் தீங்கு செய்யாதே! நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறோம்” என்றான். அந்தச் சிறைக்காவலன் விளக்கைக் கொண்டுவரச்செய்து, உள்ளே விரைந்து ஓடினான். அவன் நடுங்கிக்கொண்டு பவுலுக்கும், சீலாவுக்கும் முன்பாக விழுந்தான். அவன் அவர்களை வெளியே கொண்டுவந்து, “ஐயாமாரே, நான் இரட்சிக்கப்பட என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “கர்த்தராகிய இயேசுவை விசுவாசி, நீ இரட்சிக்கப்படுவாய். நீயும், உனது குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” என்றார்கள். பின்பு அவர்கள் அவனுக்கும், அவனுடைய வீட்டிலிருந்த எல்லோருக்கும் கர்த்தருடைய வார்த்தையைச் சொன்னார்கள். அந்த இரவு வேளையிலேயே அந்தச் சிறைக்காவலன் அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான்; பின்பு உடனே, அவனும் அவனுடைய குடும்பத்தார் யாவரும் திருமுழுக்குப் பெற்றார்கள்.