அப்போஸ்தலர் 16:16-33
அப்போஸ்தலர் 16:16-33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள். அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள். இப்படி அநேகநாள் செய்து கொண்டுவந்தாள். பவுல் சினங்கொண்டு, திரும்பிப்பார்த்து: நீ இவளை விட்டுப் புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அந்நேரமே அது புறப்பட்டுப்போயிற்று. அவளுடைய எஜமான்கள் தங்கள் ஆதாயத்து நம்பிக்கை அற்றுப்போயிற்றென்று கண்டு, பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுபோனார்கள். அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்புவித்து: யூதர்களாகிய இந்த மனுஷர் நம்முடைய பட்டணத்தில் கலகம்பண்ணி, ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் அநுசரிக்கவும்தகாத முறைமைகளைப் போதிக்கிறார்கள் என்றார்கள். அப்பொழுது ஜனங்கள் கூட்டங்கூடி, அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள். அதிகாரிகள் அவர்கள் வஸ்திரங்களைக் கிழித்துப்போடவும், அவர்களை அடிக்கவும் சொல்லி; அவர்களை அநேக அடி அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டார்கள். அவன் இப்படிப்பட்ட கட்டளையைப் பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான். நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று. சிறைச்சாலைக்காரன் நித்திரைதெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக்கண்டு, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி, பட்டயத்தை உருவித் தன்னைக் கொலைசெய்து கொள்ளப்போனான். பவுல் மிகுந்த சத்தமிட்டு: நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ்செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம் என்றான். அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடி, நடுநடுங்கி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து, அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள். மேலும் இராத்திரியில் அந்நேரத்திலேதானே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
அப்போஸ்தலர் 16:16-33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஒருமுறை, நாங்கள் மன்றாடும் இடத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது, நாங்கள் ஒரு அடிமைப் பெண்ணைச் சந்தித்தோம். அவளிலே ஒரு தீய ஆவி இருந்தது. அவள் அந்த ஆவியைக் கொண்டு, எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்னறிவித்தாள். அவள் இவ்வாறு குறிசொல்வதன் மூலம் தனது எஜமானர்களுக்குப் பெருந்தொகைப் பணத்தைச் சம்பாதித்துக் கொடுத்துக்கொண்டிருந்தாள். இந்தப் பெண் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து, “இந்த மனிதர் மகா உன்னதமான இறைவனின் ஊழியர்கள்; இவர்கள் உங்களுக்கு இரட்சிக்கப்படுவதற்கான வழியை அறிவிக்கிறார்கள்” என்று சத்தமிடுவாள். அவள் இப்படி பல நாட்களாய்ச் செய்துகொண்டிருந்தாள். கடைசியாக பவுல் மிகவும் சலிப்படைந்து, அந்த தீய ஆவியிடம், “இயேசுகிறிஸ்துவின் பெயரிலே நான் உனக்குக் கட்டளையிடுகிறேன், நீ இவளை விட்டு வெளியே வா!” என்றான். அந்த வினாடியே அந்தத் தீய ஆவி அவளைவிட்டு வெளியே வந்தது. அந்த அடிமைப் பெண்ணுடைய எஜமானர், பணம் சம்பாதிக்கும் தங்கள் எதிர்பார்ப்பு போய்விட்டது என்று அறிந்தபோது, அவர்கள் பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைகூடும் இடத்தில் அதிகாரிகளிடம் இழுத்துக்கொண்டு வந்தார்கள். அவர்கள் இவர்களை தலைமை நீதிபதிகளுக்கு முன்பாகக் கொண்டுவந்து, “இவர்கள் யூதர்கள், இந்த மனிதர் நமது பட்டணத்தில் குழப்பம் உண்டாக்குகிறார்கள், ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவோ, நடைமுறைப்படுத்தவோ முடியாத, சட்டத்திற்கு முரணான முறைமைகளை இவர்கள் போதிக்கிறார்கள்” என்றார்கள். அப்பொழுது கூடியிருந்தவர்கள், பவுலையும் சீலாவையும் தாக்கத் தொடங்கினார்கள். தலைமை நீதிபதிகள் இவர்களுடைய உடைகளைக் கழற்றி, இவர்களை அடிக்கும்படி உத்தரவிட்டார்கள். அவர்கள் சவுக்கினால் கடுமையாக அடித்தபின், சிறையில் போட்டார்கள். சிறைக்காவலனிடம், இவர்களைக் கவனமாய் காவல் செய்யும்படியும் உத்தரவிட்டார்கள். இக்கட்டளைகளைப் பெற்றபோது, அந்தச் சிறைக்காவலன் இவர்களை உட்சிறையில் போட்டு, இவர்களுடைய கால்களை மர சங்கிலியினால் மாட்டிவைத்தான். கிட்டத்தட்ட நடு இரவில் பவுலும் சீலாவும் மன்றாடிக்கொண்டும், இறைவனுக்குப் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருந்தார்கள். மற்ற சிறைக் கைதிகள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். திடீரென ஒரு பெரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது. அதனால் அந்தச் சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசைந்தன. அப்பொழுது சிறைச்சாலைக் கதவுகள் எல்லாம் திறவுண்டன. சிறையிலிருந்த ஒவ்வொருவரையும் கட்டியிருந்த சங்கிலிகள் கழன்று விழுந்தன. சிறைக்காவலன் எழுந்திருந்து, சிறைச்சாலைக் கதவுகள் திறந்து கிடந்ததைக் கண்டபோது, அவன் தன் வாளை உருவித், தற்கொலைசெய்ய முயன்றான். ஏனெனில், சிறைக் கைதிகள் தப்பியோடிவிட்டார்கள் என்று அவன் நினைத்தான். ஆனால் பவுல் சத்தமிட்டு அவனிடம், “நீ உனக்குத் தீங்கு செய்யாதே! நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறோம்” என்றான். அந்தச் சிறைக்காவலன் விளக்கைக் கொண்டுவரச்செய்து, உள்ளே விரைந்து ஓடினான். அவன் நடுங்கிக்கொண்டு பவுலுக்கும், சீலாவுக்கும் முன்பாக விழுந்தான். அவன் அவர்களை வெளியே கொண்டுவந்து, “ஐயாமாரே, நான் இரட்சிக்கப்பட என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “கர்த்தராகிய இயேசுவை விசுவாசி, நீ இரட்சிக்கப்படுவாய். நீயும், உனது குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” என்றார்கள். பின்பு அவர்கள் அவனுக்கும், அவனுடைய வீட்டிலிருந்த எல்லோருக்கும் கர்த்தருடைய வார்த்தையைச் சொன்னார்கள். அந்த இரவு வேளையிலேயே அந்தச் சிறைக்காவலன் அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான்; பின்பு உடனே, அவனும் அவனுடைய குடும்பத்தார் யாவரும் திருமுழுக்குப் பெற்றார்கள்.
அப்போஸ்தலர் 16:16-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்திற்குப் போகும்போது குறிசொல்லுகிற ஆவியினால், குறிசொல்லி தன் எஜமான்களுக்கு அதிக வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் ஒரு பெண் எங்களுக்கு எதிரே வந்தாள். அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனிதர்கள் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர்கள், இரட்சிப்பின் வழியை நமக்குத் தெரிவிக்கிறவர்கள் என்று சத்தமாக சொன்னாள். அவள் பல நாட்கள் இப்படியே செய்துவந்தாள். பவுல் கோபமடைந்து, திரும்பிப்பார்த்து: நீ இவளைவிட்டு வெளியே போ என்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளைக் கொடுக்கிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அப்பொழுதே அந்த ஆவி அவளைவிட்டு வெளியேபோனது. அவளுடைய எஜமான்கள் தங்களுடைய வருமானத்திற்கான நம்பிக்கை போய்விட்டதால், பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுபோனார்கள். அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்படைத்து: யூதர்களாகிய இந்த மனிதர்கள் நம்முடைய பட்டணத்தில் குழப்பம் உண்டாக்கி, ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் கடைபிடிக்கவும் முடியாத தவறான பழக்கவழக்கங்களைப் போதிக்கிறார்கள் என்றனர். அப்பொழுது மக்கள் கூட்டம்கூடி, அவர்களுக்கு விரோதமாக வந்தார்கள். அதிகாரிகள் அவர்களுடைய ஆடைகளைக் கிழிக்கவும், அவர்களை அடிக்கவும் சொல்லி; அவர்களை அதிகமாக அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாகக் காவல்காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளைக் கொடுத்தார்கள். அவன் இப்படிப்பட்டக் கட்டளையைப் பெற்றுக்கொண்டு, அவர்களை உள்காவல் அறையிலே அடைத்து, அவர்கள் கால்களை அசைக்க முடியாதபடிக்கு தொழுமரத்தின் ஓட்டைகளில் மாட்டிவைத்தான். நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக்கேட்டுக்கொண்டிருந்தார்கள். திடீரென்று சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையத்தக்கதாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே சிறைச்சாலை கதவுகளெல்லாம் திறந்தன; எல்லோருடைய கட்டுகளும் கழன்றுபோனது. சிறைச்சாலைக்காரன் தூக்கம் தெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருப்பதைப் பார்த்து, கட்டப்பட்டு இருந்தவர்கள் ஓடிப்போனார்கள் என்று நினைத்து, வாளை எடுத்து தற்கொலை செய்துகொள்ளப்போனான். அப்பொழுது, பவுல் சத்தமிட்டு: நீ உனக்கு எந்தத் தீங்கையும் செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லோரும் இங்குதான் இருக்கிறோம் என்றான். அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடிப்போய், நடுங்கி, பவுலுக்கும் சீலாவிற்கும் முன்பாக விழுந்து, அவர்களை வெளியே கூட்டிக்கொண்டுவந்து: ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்னசெய்யவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த எல்லோருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள். மேலும் அந்த இராத்திரி நேரத்திலே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனோடுகூட இருந்தவர்களும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
அப்போஸ்தலர் 16:16-33 பரிசுத்த பைபிள் (TAERV)
ஒரு நாள் பிரார்த்தனை செய்யுமிடத்துக்கு நாங்கள் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஒரு வேலைக்காரச் சிறுமி எங்களைச் சந்தித்தாள். அவளுக்குள் ஒரு விசேஷ ஆவி இருந்தது. எதிர்காலத்தில் நடக்கவிருப்பதைப்பற்றிக் கூறும் வல்லமையை இந்த ஆவி அவளுக்குக் கொடுத்தது. அவளது உரிமையாளர்களுக்கு இதைச் செய்து மிகுந்த பணத்தை அவள் சம்பாதித்துக்கொடுத்தாள். இந்தப் பெண் பவுலையும் எங்களையும் தொடர்ந்து வந்தாள். அவள் உரத்த குரலில் “இம்மனிதர்கள் மிக உன்னதமான தேவனின் ஊழியர்கள்! உங்களுக்கு இரட்சிப்பின் வழியை அவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள்!” என்றாள். அவள் இதையே பல நாட்கள் தொடர்ந்து செய்து வந்தாள். மேலும் அதைப் பொறுக்கமுடியாத பவுல் அந்த ஆவியைப் பார்த்து, “இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் அவளிடமிருந்து வெளியே வருமாறு உனக்குக் கட்டளையிடுகிறேன்!” என்றான். உடனே ஆவி வெளியேறிற்று. அந்த வேலைக்காரப் பெண்ணின் உரிமையாளர்கள் இதைக் கண்டனர். அப்பெண்ணைப் பணம் சம்பாதிப்பதற்கு இனிமேல் பயன்படுத்த முடியாது என்பதை அம்மனிதர்கள் அறிந்தனர். எனவே அவர்கள் பவுலையும் சீலாவையும் பிடித்து வந்து நகரத்தின் சந்தியில் நிறுத்தினர். நகர அதிகாரிகள் அங்கிருந்தனர். தலைவர்களின் முன்பு அம்மனிதர்கள் பவுலையும் சீலாவையும் கொண்டு வந்தனர். அவர்கள், “இம்மனிதர்கள் யூதர்கள். நகரத்தில் துன்பத்தை விளைவிக்கிறார்கள். நமக்குத் தகாத காரியஙகளைச் செய்யும்படியாக அவர்கள் மக்களுக்குக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். நாம் ரோம மக்கள். இக்காரியங்களைச் செய்ய முடியாது” என்றார்கள். பவுலையும், சீலாவையும் கூட்டத்தினர் எதிர்த்தார்கள். பவுல், சீலா ஆகியோரின் ஆடைகளைத் தலைவர்கள் கிழித்தார்கள். பவுலையும், சீலாவையும் கழிகளால் அடிக்கும்படி அவர்கள் சில மனிதர்களுக்குச் சொன்னார்கள். அம்மனிதர்கள் பவுலையும் சீலாவையும் பல முறை அடித்தார்கள். பின் அவர்கள் பவுலையும் சீலாவையும் சிறையில் தள்ளினார்கள். தலைவர்கள் சிறை அதிகாரியை நோக்கி, “கவனமாக அவர்களைக் காவலில் வையுங்கள்!” என்றார்கள். சிறையதிகாரி இந்தச் சிறப்புக் கட்டளையைக் கேட்டான். எனவே அவன் பவுலையும் சீலாவையும் சிறையின் மிக உட்பகுதிக்கு அழைத்துச் சென்று அடைத்து காவலில் வைத்தான். பெரிய மரத்தூண்களுக்கிடையில் அவர்கள் கால்களைக் கட்டினான். நள்ளிரவில் பவுலும், சீலாவும் பிரார்த்தனை செய்துகொண்டும் தேவனை நோக்கி துதிப்பாடல்களைப் பாடிக்கொண்டுமிருந்தனர். மற்ற சிறைக் கைதிகள் அவர்களைக் கவனித்தவண்ணமிருந்தனர். திடீரென்று ஒரு பெரிய பூமியதிர்ச்சி உண்டாயிற்று. சிறையின் அஸ்திபாரத்தை அசைக்கும்படியாக அது பலமாக இருந்தது. பின் சிறைச் சாலையின் கதவுகள் எல்லாம் திறந்தன. எல்லா கைதிகளும் அவர்களது விலங்குகளிலிருந்து விடுபட்டனர். சிறையதிகாரி விழித்தெழுந்தான். சிறைக் கதவுகள் திறந்திருப்பதை அவன் கண்டான். சிறைக் கைதிகள் ஏற்கெனவே தப்பித்துப் போயிருக்க வேண்டுமென அவன் நினைத்தான். எனவே சிறையதிகாரி தன் வாளை உருவித் தற்கொலை செய்துகொள்ள இருந்தான். ஆனால் பவுல் உரக்க, “உன்னைத் துன்புறுத்திக்கொள்ளாதே. நாங்கள் எல்லோரும் இங்கு இருக்கிறோம்!” என்றான். சிறையதிகாரி விளக்குகளைக் கொண்டுவருமாறு ஒருவனுக்குப் பணித்தான். பின் அவன் உள்ளே ஓடினான். அவன் பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்தான். அவன் பவுல், சீலா ஆகியோர் முன்பாகக் கீழே விழுந்தான். பின் அவன் அவர்களை வெளியே அழைத்து வந்து அவர்களிடம், “நான் இரட்சிப்படைய என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். அவர்கள் அவனை நோக்கி, “கர்த்தராகிய இயேசுவில் விசுவாசமாயிரு. நீயும் உன் வீட்டாரும் இரட்சிப்பு அடைவீர்கள்” என்றார்கள். எனவே பவுலும் சீலாவும் கர்த்தரின் செய்தியை சிறையதிகாரிக்கும் அவன் வீட்டிலிருந்த ஒவ்வொருவருக்கும் கூறினர். சிறையதிகாரி பவுலையும் சீலாவையும் அழைத்துச் சென்று அவர்களது காயங்களைக் கழுவினான். பின் சிறையதிகாரியும் அவன் வீட்டிலிருந்த அனைவரும் ஞானஸ்நானம் பெற்றனர்.