தானியேல் 4:34-37

தானியேல் 4:34-37 TCV

அந்த ஏழு காலம் முடிந்தபின் நேபுகாத்நேச்சாராகிய நான் வானத்தை நோக்கிப் பார்த்தேன். அந்நேரம் எனது சுயபுத்தி எனக்குத் திரும்பவும் கொடுக்கப்பட்டது. அப்பொழுது நான் மகா உன்னதமானவரைத் துதித்தேன். என்றென்றும் வாழ்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன். அவருடைய ஆளுகை நித்தியமான ஆளுகை. அவரது அரசு தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கிறது. அவர் பூமியின் மக்கள் கூட்டங்களை ஒரு பொருட்டாய் எண்ணவில்லை. அவர் வானத்தின் அதிகாரங்களுக்கும், பூமியின் மக்களுக்கும் தாம் விரும்புகிறபடியே செய்கிறார். அவரது கையைத் தடுக்க வல்லவனோ, “ஏன் இப்படிச் செய்தீர்?” என்று கேட்கக் கூடியவனோ ஒருவனும் இல்லை. எனக்கு சுயபுத்தி திரும்பவும் வந்தது. அதே நேரத்தில் எனது அரசின் மேன்மைக்காக, எனது கனமும், மகிமையும் எனக்கு மீண்டும் கிடைத்தன. என் ஆலோசகர்களும், உயர்குடி மக்களும் திரும்பவும் என்னைத் தேடிவந்தார்கள். நான் திரும்பவும் அரண்மனையில் அமர்த்தப்பட்டு, முன்பைவிட மேன்மையடைந்தேன். இப்பொழுது நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோக அரசரைத் துதித்து மேன்மைப்படுத்தி, மகிமைப்படுத்துகிறேன். ஏனெனில் அவர் செய்வதெல்லாம் நியாயமும், அவர் வழிகளெல்லாம் நீதியுமானவை; அவர் பெருமையில் நடப்பவர்களைத் தாழ்த்த வல்லவராயிருக்கிறார்.