தானியேல் 4:34-37
தானியேல் 4:34-37 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அந்த ஏழு காலம் முடிந்தபின் நேபுகாத்நேச்சாராகிய நான் வானத்தை நோக்கிப் பார்த்தேன். அந்நேரம் எனது சுயபுத்தி எனக்குத் திரும்பவும் கொடுக்கப்பட்டது. அப்பொழுது நான் மகா உன்னதமானவரைத் துதித்தேன். என்றென்றும் வாழ்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன். அவருடைய ஆளுகை நித்தியமான ஆளுகை. அவரது அரசு தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கிறது. அவர் பூமியின் மக்கள் கூட்டங்களை ஒரு பொருட்டாய் எண்ணவில்லை. அவர் வானத்தின் அதிகாரங்களுக்கும், பூமியின் மக்களுக்கும் தாம் விரும்புகிறபடியே செய்கிறார். அவரது கையைத் தடுக்க வல்லவனோ, “ஏன் இப்படிச் செய்தீர்?” என்று கேட்கக் கூடியவனோ ஒருவனும் இல்லை. எனக்கு சுயபுத்தி திரும்பவும் வந்தது. அதே நேரத்தில் எனது அரசின் மேன்மைக்காக, எனது கனமும், மகிமையும் எனக்கு மீண்டும் கிடைத்தன. என் ஆலோசகர்களும், உயர்குடி மக்களும் திரும்பவும் என்னைத் தேடிவந்தார்கள். நான் திரும்பவும் அரண்மனையில் அமர்த்தப்பட்டு, முன்பைவிட மேன்மையடைந்தேன். இப்பொழுது நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோக அரசரைத் துதித்து மேன்மைப்படுத்தி, மகிமைப்படுத்துகிறேன். ஏனெனில் அவர் செய்வதெல்லாம் நியாயமும், அவர் வழிகளெல்லாம் நீதியுமானவை; அவர் பெருமையில் நடப்பவர்களைத் தாழ்த்த வல்லவராயிருக்கிறார்.
தானியேல் 4:34-37 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அந்த நாட்கள் சென்றபின்பு, நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்திற்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; அப்பொழுது நான் உன்னதமான தேவனை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் உயிரோடிருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்ஜியமே தலைமுறை தலைமுறையாக நிற்கும். பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிமக்களையும் நடத்துகிறார்; அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன். அவ்வேளையில் என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; என் அரசாட்சியின் மேன்மைக்காக என் மகிமையும் என் முகக்களையும் எனக்குத் திரும்பி வந்தது; என் மந்திரிகளும் என் பிரபுக்களும் என்னைத் தேடிவந்தார்கள்; என் ராஜ்ஜியத்திலே நான் பலப்படுத்தப்பட்டேன்; அதிக மகத்துவமும் எனக்குக் கிடைத்தது. ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்துகிறேன்; அவருடைய செயல்களெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள்; பெருமையாக நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான்.
தானியேல் 4:34-37 பரிசுத்த பைபிள் (TAERV)
பிறகு காலத்தின் முடிவில், நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தை நோக்கிப் பார்த்தேன். என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது. பிறகு நான் உன்னதமான தேவனைப் போற்றினேன். நான் அவருக்கு மதிப்பையும் மகிமையையும் என்றென்றும் கொடுத்தேன். தேவன் என்றென்றும் ஆளுகிறார். அவரது இராஜ்யம் எல்லா தலைமுறைகளுக்கும் தொடருகிறது. பூமியிலுள்ள ஜனங்கள் உண்மையிலேயே முக்கியமானவர்களல்ல. பரலோகத்தின் வல்லமைகளோடும், பூமியின் ஜனங்களோடும் தேவன் என்ன செய்ய விரும்புகிறாரோ அதைச் செய்கிறார். எவராலும் அவரது அதிகாரமுள்ள கையை நிறுத்தமுடியாது. எவராலும் அவரது செயல்களைக் கேள்விக் கேட்க்கமுடியாது. எனவே, அந்த நேரத்தில், தேவன் எனது சரியான புத்தியை எனக்குக் கொடுத்தார். அவர் எனக்கு சிறந்த மதிப்பையும், ராஜா என்ற வல்லமையையும் திரும்பக் கொடுத்தார். எனது ஆலோசகர்களும், பிரபுக்களும் மீண்டும் எனது ஆலோசனைகளைக் கேட்கத் தொடங்கினார்கள். நான் மீண்டும் ராஜாவானேன். நான் முன்பைவிட இன்னும் சிறந்தவனாகவும் மிகுந்த வல்லமையுள்ளவனாகவும் ஆனேன். இப்பொழுது, நேபுகாத்நேச்சாரகிய நான் பரலோக அரசருக்கு புகழ்ச்சி, கனம், மகிமை ஆகியவற்றைக் கொடுக்கிறேன். அவர் செய்கிறவை எல்லாம் சரியானது. அவர் எப்பொழுதும் நேர்மையானவர். அவரால் அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்தமுடியும்.
தானியேல் 4:34-37 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அந்த நாட்கள் சென்றபின்பு, நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும். பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்; அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன். அவ்வேளையில் என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; என் ராஜ்யபாரத்தின் மேன்மைக்காக என் மகிமையும் என் முகக்களையும் எனக்குத் திரும்பி வந்தது; என் மந்திரிமாரும் என் பிரபுக்களும் என்னைத் தேடிவந்தார்கள்; என் ராஜ்யத்திலே நான் ஸ்திரப்படுத்தப்பட்டேன்; அதிக மகத்துவமும் எனக்குக் கிடைத்தது. ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்துகிறேன்; அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள்; அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான்.