எபேசியர் 3
3
யூதரல்லாதவர்களின் பிரசங்கியாளனான பவுல்
1இதனாலேயே, யூதரல்லாதவர்களான உங்களுக்காக பவுலாகிய நான் கிறிஸ்து இயேசுவின் கைதியாய் இருக்கிறேன்.
2இறைவன் உங்களுக்காக தமது கிருபையை நிர்வாகிக்கும் வேலையை எனக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை நீங்கள் நிச்சயமாய் கேள்விப்பட்டிருப்பீர்கள். 3இந்த இரகசியத்தை இறைவன், தனது வெளிப்படுத்துதலினால் எனக்குத் தெரிவித்திருக்கிறார். நான் இதைக்குறித்து ஏற்கெனவே சுருக்கமாய் எழுதியிருக்கிறேன். 4நான் உங்களுக்கு எழுதியதை நீங்கள் வாசிப்பீர்களானால், கிறிஸ்துவினுடைய இரகசியத்தைக்குறித்து எனக்குள் உண்டாயிருக்கிற நுண்ணறிவை, நீங்களும் விளங்கிக்கொள்ளக்கூடியதாய் இருக்கும். 5இறைவன் இந்த இரகசியத்தை முன்னிருந்த தலைமுறையினருக்குச் சொல்லவில்லை. ஆனால் இப்பொழுதோ, இறைவனின் பரிசுத்த அப்போஸ்தலருக்கும், இறைவாக்கினர்களுக்கும் பரிசுத்த ஆவியானவராலே அது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 6அந்த இரகசியம் என்னவென்றால், நற்செய்தியின் மூலமாய் யூதரல்லாத மக்களும், இஸ்ரயேலருடன் உரிமைப் பங்கு உடையவர்களாயும், அவர்களுடன் கிறிஸ்து இயேசுவின் ஒரே உடலின் அங்கத்தினர்களாயும், அவரது வாக்குத்தத்தத்தில் பங்குள்ளவர்களாயும் இருக்கிறார்கள் என்பதாகும்.
7இறைவனுடைய வல்லமை எனக்குள் செயலாற்றுவதன் மூலம், எனக்குக் கொடுக்கப்பட்ட அவருடைய கிருபையின் கொடையினால், நான் இந்த நற்செய்தியின் ஊழியனானேன். 8நான் இறைவனுடைய எல்லா மக்களையும்விட குறைவுள்ளவனாய் இருந்தும், கிறிஸ்துவின் அளவற்ற நிறைவை யூதரல்லாதவர்களுக்குப் பிரசங்கிக்க இந்தக் கிருபை எனக்குக் கொடுக்கப்பட்டது. 9அது செயல்படுவதை எல்லோருக்கும் தெளிவுபடுத்தவுமே, எனக்கு இந்த ஊழியம் கொடுக்கப்பட்டது. ஏனெனில், எல்லாவற்றையும் படைத்த இறைவனால் கடந்த காலங்களில் இந்த இரகசியம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. 10இப்பொழுது இறைவனின் மகத்துவமான ஞானம் வானமண்டலங்களில் ஆளுகை செய்யும் தூதர்களுக்கும் அதிகாரங்களுக்கும் திருச்சபையின் மூலமாய் அறிவிக்கப்பட வேண்டும் என்பதே அவரின் நோக்கமாகும். 11இவ்விதமாக அவர் தமது நித்திய நோக்கத்தை நமது கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவில் நிறைவேற்றினார். 12நாம் அவரில் இருப்பதினாலும், அவரில் கொண்டிருக்கும் விசுவாசத்தினாலும், நாங்கள் சுதந்தரமாய் மனவுறுதியுடன் இறைவனுக்கு முன்பாக வரக்கூடியவர்களாய் இருக்கிறோம். 13எனவே நான் துன்பம் அனுபவிப்பதால், நீங்கள் மனசோர்வடையக் கூடாது என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அவைகள் உங்களுக்கு மகிமையாக இருக்கிறது என்பதால் உற்சாகமடையுங்கள்.
எபேசியருக்கான மன்றாட்டு
14நான் அவருடைய ஞானத்தையும் திட்டத்தையும் நினைக்கும்போது, பிதாவுக்கு முன்பாக முழங்காற்படியிடுகிறேன். 15அவரிடமிருந்து பரலோகத்திலும் பூமியிலும் இருக்கும், அவருடைய முழுக் குடும்பமும் சிறப்பியல்பைப் பெறுகின்றன. 16நீங்கள் உங்கள் உள்ளத்தில் உறுதியுடையவர்களாய் இருப்பதற்கு, இறைவன் தமது மகிமையான நிறைவிலிருந்து, தமது ஆவியானவரினாலே வல்லமையினால் உங்களைப் பெலப்படுத்தவேண்டும் என்று நான் அவரிடம் மன்றாடுகிறேன். 17அதனால் விசுவாசத்தின் மூலமாக கிறிஸ்து உங்கள் இருதயங்களில் குடியிருப்பார். நீங்கள் அன்பிலே வேரூன்றியவர்களாகவும், அதில் அஸ்திபாரம் இடப்பட்டவர்களாகவும் இருக்கவேண்டும் என்றும் மன்றாடுகிறேன். 18இவ்விதம் நீங்கள் மற்றெல்லாப் பரிசுத்தவான்களோடுங்கூட, கிறிஸ்துவின் அன்பு எவ்வளவு விசாலமானதாயும், நீளமானதாயும், உயரமானதாயும், ஆழமானதாயும் இருக்கிறது என்பதை, விளங்கிக்கொள்ளும் வல்லமையைப் பெற்றுக்கொள்வீர்களாக, 19உங்கள் அறிவாற்றலுக்கு அப்பாற்பட்ட கிறிஸ்துவின் அன்பை நீங்கள் அறியவேண்டும் என்றும், நீங்கள் இறைவனின் முழுநிறைவினால் முழுவதும் நிரப்பப்பட வேண்டும் என்றும் மன்றாடுகிறேன்.
20நமக்குள் செயலாற்றுகிறவரும் தம்முடைய வல்லமையின் மூலமாய், நாம் கேட்பதையும் நாம் நினைத்துப் பார்ப்பதைவிட, மிக அதிகமாக செய்வதற்கு வல்லமையுடையவராய் இருக்கிறவருக்கே, 21கிறிஸ்து இயேசுவின் மூலமாக, திருச்சபையில் எல்லாத் தலைமுறை தலைமுறையாக, என்றென்றைக்குமாக மகிமை உண்டாவதாக. ஆமென்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
எபேசியர் 3: TCV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.