கலாத்தியர் 3:1-14

கலாத்தியர் 3:1-14 TCV

மூடர்களான கலாத்தியரே, உங்களை வசியப்படுத்தியது யார்? இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையுண்டது உங்கள் கண்களுக்கு முன்பாகவேத் தெளிவாக உங்களுக்கு காண்பிக்கவில்லையா? நான் உங்களிடமிருந்து ஒரு காரியத்தை அறிய விரும்புகிறேன்: நீங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டது மோசேயின் சட்டத்தின் கிரியையினாலா அல்லது நற்செய்தியைக் கேட்டு விசுவாசித்ததினாலா? நீங்கள் இவ்வளவு மூடத்தனமுள்ளவர்களாய் இருக்கிறீர்களா? ஆவியானவர் மூலமாய் தொடங்கிய நீங்கள், இப்பொழுது மாம்சத்தினால் முடிவுபெறப் போகிறீர்களா? நீங்கள் அவ்வளவு பாடுகளை அனுபவித்தீர்கள், அத்தனையும் வீண்தானா? அவை வீணாய்ப் போகலாமா? இறைவன் பரிசுத்த ஆவியானவரை உங்களுக்குக் கொடுக்கிறதும், உங்கள் மத்தியில் அற்புதங்களைச் செய்கிறதும், மோசேயின் சட்டத்தின் கிரியையினாலா, அல்லது நற்செய்தியைக் கேட்டு விசுவாசிப்பதனாலா? ஆபிரகாமைக்குறித்து சற்று யோசித்துப் பாருங்கள்: அவன் இறைவனை விசுவாசித்தான், அந்த விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது. இதிலிருந்து, விசுவாசிக்கிறவர்களே ஆபிரகாமுடைய பிள்ளைகளாய் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ளுங்கள். இறைவன் விசுவாசத்தினாலே யூதரல்லாத மக்களை நீதிமான்களாக்குவார் என்று வேதவசனத்தில் முன்னமே எழுதப்பட்டிருந்தது. அதனாலேயே, “எல்லா நாடுகளும் உன் மூலமாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள்” என்று ஏற்கெனவே ஆபிரகாமுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது. எனவே விசுவாசமுள்ளவர்கள் விசுவாசத்தின் மனிதனான ஆபிரகாமுடனேகூட ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். மோசேயின் சட்டத்தின் கிரியைகளை நம்பிக்கொண்டிருக்கும் எல்லாரும் சாபத்துக்கு உட்பட்டிருக்கிறார்கள். ஏனெனில், “மோசேயின் சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் எல்லாவற்றையும் கைக்கொள்ளாமல் இருக்கும், ஒவ்வொருவனும் சபிக்கப்பட்டவன்” என்று எழுதியிருக்கிறது. எனவே மோசேயின் சட்டத்தால் இறைவனுக்குமுன் ஒருவனும் நீதிமானாக்கப்படுவதில்லை என்பது தெளிவாகிறது. எனவேதான், “நீதிமான்கள் விசுவாசத்தினாலே வாழ்வார்கள்” என்றும் எழுதியிருக்கிறது. ஆகவே மோசேயின் சட்டமோ விசுவாசத்தைச் சார்ந்ததல்ல; வேதவசனம் சொல்கிறபடி, “மோசேயின் சட்டத்தில் சொல்லப்பட்டவைகளைச் செய்கிறவனே, அவற்றால் வாழ்வு பெறுவான். மரத்திலே தொங்கவிடப்பட்டவன் எவனும் சபிக்கப்பட்டவன்” என்று எழுதியிருக்கிறபடியே கிறிஸ்துவோ நமக்காக சாபமாகி, மோசேயின் சட்டத்தின் சாபத்திலிருந்து நம்மை மீட்டுக்கொண்டார். ஆபிரகாமின் ஆசீர்வாதம், கிறிஸ்து இயேசுவின் மூலமாய் யூதரல்லாத மக்களுக்கும் கிடைக்கும்படியாக அவர் நம்மை மீட்டுக்கொண்டு, இறைவன் வாக்குப்பண்ணிய பரிசுத்த ஆவியானவரை நாமும் விசுவாசத்தின்மூலமாய் பெற்றுக்கொள்ளும்படிச் செய்தார்.