கலாத்தியர் 3:1-14

கலாத்தியர் 3:1-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

புத்தியில்லாத கலாத்தியரே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்டவராக உங்கள் கண்களுக்குமுன் பிரத்தியட்சமாய் உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே. ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறிய விரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்? ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவு பெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா? இத்தனை பாடுகளையும் வீணாய்ப்பட்டீர்களோ? அவைகள் வீணாய்ப்போயிற்றே. அன்றியும் உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்? அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக. மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது. அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே. நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே. நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான். மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று.

கலாத்தியர் 3:1-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மூடர்களான கலாத்தியரே, உங்களை வசியப்படுத்தியது யார்? இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையுண்டது உங்கள் கண்களுக்கு முன்பாகவேத் தெளிவாக உங்களுக்கு காண்பிக்கவில்லையா? நான் உங்களிடமிருந்து ஒரு காரியத்தை அறிய விரும்புகிறேன்: நீங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டது மோசேயின் சட்டத்தின் கிரியையினாலா அல்லது நற்செய்தியைக் கேட்டு விசுவாசித்ததினாலா? நீங்கள் இவ்வளவு மூடத்தனமுள்ளவர்களாய் இருக்கிறீர்களா? ஆவியானவர் மூலமாய் தொடங்கிய நீங்கள், இப்பொழுது மாம்சத்தினால் முடிவுபெறப் போகிறீர்களா? நீங்கள் அவ்வளவு பாடுகளை அனுபவித்தீர்கள், அத்தனையும் வீண்தானா? அவை வீணாய்ப் போகலாமா? இறைவன் பரிசுத்த ஆவியானவரை உங்களுக்குக் கொடுக்கிறதும், உங்கள் மத்தியில் அற்புதங்களைச் செய்கிறதும், மோசேயின் சட்டத்தின் கிரியையினாலா, அல்லது நற்செய்தியைக் கேட்டு விசுவாசிப்பதனாலா? ஆபிரகாமைக்குறித்து சற்று யோசித்துப் பாருங்கள்: அவன் இறைவனை விசுவாசித்தான், அந்த விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது. இதிலிருந்து, விசுவாசிக்கிறவர்களே ஆபிரகாமுடைய பிள்ளைகளாய் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ளுங்கள். இறைவன் விசுவாசத்தினாலே யூதரல்லாத மக்களை நீதிமான்களாக்குவார் என்று வேதவசனத்தில் முன்னமே எழுதப்பட்டிருந்தது. அதனாலேயே, “எல்லா நாடுகளும் உன் மூலமாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள்” என்று ஏற்கெனவே ஆபிரகாமுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது. எனவே விசுவாசமுள்ளவர்கள் விசுவாசத்தின் மனிதனான ஆபிரகாமுடனேகூட ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். மோசேயின் சட்டத்தின் கிரியைகளை நம்பிக்கொண்டிருக்கும் எல்லாரும் சாபத்துக்கு உட்பட்டிருக்கிறார்கள். ஏனெனில், “மோசேயின் சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் எல்லாவற்றையும் கைக்கொள்ளாமல் இருக்கும், ஒவ்வொருவனும் சபிக்கப்பட்டவன்” என்று எழுதியிருக்கிறது. எனவே மோசேயின் சட்டத்தால் இறைவனுக்குமுன் ஒருவனும் நீதிமானாக்கப்படுவதில்லை என்பது தெளிவாகிறது. எனவேதான், “நீதிமான்கள் விசுவாசத்தினாலே வாழ்வார்கள்” என்றும் எழுதியிருக்கிறது. ஆகவே மோசேயின் சட்டமோ விசுவாசத்தைச் சார்ந்ததல்ல; வேதவசனம் சொல்கிறபடி, “மோசேயின் சட்டத்தில் சொல்லப்பட்டவைகளைச் செய்கிறவனே, அவற்றால் வாழ்வு பெறுவான். மரத்திலே தொங்கவிடப்பட்டவன் எவனும் சபிக்கப்பட்டவன்” என்று எழுதியிருக்கிறபடியே கிறிஸ்துவோ நமக்காக சாபமாகி, மோசேயின் சட்டத்தின் சாபத்திலிருந்து நம்மை மீட்டுக்கொண்டார். ஆபிரகாமின் ஆசீர்வாதம், கிறிஸ்து இயேசுவின் மூலமாய் யூதரல்லாத மக்களுக்கும் கிடைக்கும்படியாக அவர் நம்மை மீட்டுக்கொண்டு, இறைவன் வாக்குப்பண்ணிய பரிசுத்த ஆவியானவரை நாமும் விசுவாசத்தின்மூலமாய் பெற்றுக்கொள்ளும்படிச் செய்தார்.

கலாத்தியர் 3:1-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

புத்தியில்லாத கலாத்தியர்களே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமலிருக்க உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டவராக உங்களுடைய கண்களுக்குமுன் தெளிவாக உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே. ஒன்றைமட்டும் உங்களிடமிருந்து தெரிந்துகொள்ள விரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலோ, விசுவாசக் கேள்வியினாலோ, எதினாலே ஆவியானவரைப் பெற்றுக்கொண்டீர்கள்? ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது சரீரத்தினாலே முடிவு பெறப்போகிறீர்களோ? நீங்கள் இவ்வளவு புத்தி இல்லாதவர்களா? இத்தனை பாடுகளையும் வீணாக அனுபவித்தீர்களோ? அவைகள் வீணாகப்போய்விட்டதே. அன்றியும் உங்களுக்கு ஆவியானவரைக் கொடுத்து, உங்களுக்குள்ளே அற்புதங்களைச் செய்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலோ, விசுவாசக் கேள்வியினாலோ, எதினாலே செய்கிறார்? அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக நினைக்கப்பட்டது. ஆகவே, விசுவாசிக்கிறவர்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகள் என்று தெரிந்துகொள்ளுங்கள். மேலும் தேவன் விசுவாசத்தினாலே யூதரல்லாத மக்களை நீதிமான்களாக்குகிறார் என்று வேதம் முன்னமே கண்டு: உனக்குள் எல்லா தேசங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்கு நற்செய்தியாக முன்னறிவித்தது. அப்படியே விசுவாசம் உள்ளவர்கள் விசுவாசமுள்ள ஆபிரகாமோடு ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். நியாயப்பிரமாணத்தின் செய்கைக்காரர்களாகிய எல்லோரும் சாபத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள்; ஏனென்றால் நியாயப்பிரமாணப் புத்தகத்தில் எழுதப்பட்டவைகள்‌ எல்லாவற்றையும் தொடர்ந்து செய்யாதவன்‌ எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே. நியாயப்பிரமாணத்தினாலே தேவன் ஒருவனையும் நீதிமானாக்குகிறதில்லை என்பது வெளிப்படையாக இருக்கிறது. ஏனென்றால், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே. நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியது இல்லை; அவைகளைச் செய்கிற மனிதனே அவைகளால் பிழைப்பான். மரத்திலே தொங்கவிடப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீக்கி மீட்டுக்கொண்டார். ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் யூதரல்லாத மக்களுக்கு வருவதற்காகவும், ஆவியானவரைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெற்றுக்கொள்வதற்காகவும் இப்படி ஆனது.

கலாத்தியர் 3:1-14 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணம் அடைந்தார் என்பது பற்றி மிகத் தெளிவாகக் கலாத்திய மக்களாகிய உங்களுக்குச் சொல்லப்பட்டது. ஆனால் நீங்களோ புத்தியற்றவர்களாய் இருந்தீர்கள். எவரையோ உங்களிடம் தந்திரம் செய்ய அனுமதித்துவிட்டீர்கள். இதைப்பற்றி எனக்குக் கூறுங்கள், பரிசுத்த ஆவியானவரை நீங்கள் எப்படிப் பெற்றுக்கொண்டீர்கள்? சட்டங்களைப் பின்பற்றுவதன் மூலம் ஆவியானவரை ஏற்றுக்கொண்டீர்களா? இல்லை. நீங்கள் ஆவியைப் பெற்றீர்கள். ஏனென்றால் நீங்கள் நற்செய்தியைக் கேள்விப்பட்டு நம்பினீர்கள். ஆவியானவரால் நீங்கள் கிறிஸ்துவில் உங்கள் வாழ்க்கையைத் தொடங்கினீர்கள். இப்பொழுது உங்கள் சொந்த மாம்சீக பலத்தால் தொடர முயற்சி செய்கிறீர்களா? எவ்வளவு புத்தியற்றவர்கள் நீங்கள்? பல வகையிலும் அனுபவங்களை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அவை எல்லாம் வீணாக வேண்டுமா? அவை வீணாகாது என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் சட்டங்களைப் பின்பற்றுவதால் தேவன் உங்களுக்கு ஆவியைக் கொடுக்கிறாரா? இல்லை. நீங்கள் சட்டங்களைப் பின்பற்றுவதால் தேவன் உங்களிடம் அற்புதங்களைச் செய்கிறாரா? இல்லை. உங்களுக்கு அவர் ஆவியைக் கொடுத்ததும், அற்புதங்களை நடப்பித்ததும் நீங்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பினீர்கள் என்பதால்தான். ஆபிரகாமைப் பற்றியும், வேதவாக்கியங்கள் அதையே கூறுகிறது. “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தார். அவரது விசுவாசத்தை தேவன் ஏற்றுக்கொண்டார். இது அவரை தேவனுக்கு முன்பு நீதிமானாக்கியது.” ஆகவே ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். தேவன் மீது விசுவாசம் வைக்கிறவர்களே ஆபிரகாமின் உண்மையான பிள்ளைகள். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது பற்றியும் வேதவாக்கியங்கள் கூறியது. யூதர் அல்லாத மக்களைச் சரியான வழியில் அவர்களின் விசுவாசத்தின் மூலமே தேவன் வழிநடத்துவார். “பூமியில் உள்ள மக்களையெல்லாம் ஆசீர்வதிக்க, ஆபிரகாமே, தேவன் உன்னைப் பயன்படுத்துவார்” என்று சுவிசேஷமாய் முன் அறிவித்தது. ஆபிரகாம் இதை நம்பினார். நம்பியதால், அவர் ஆசீர்வதிக்கப்பட்டது போலவே, நம்பிக்கையுள்ள அனைவரும் ஆசீர்வதிக்கப்படுவர். ஆனால் சட்டத்தின்படி வாழ்பவர்கள் எவரும் சாபத்துக்குள்ளாவார்கள். ஏனென்றால் “ஒருவன் சட்டங்களைத் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் சபிக்கப்படுவான்” என்று சட்டங்களின் நூலில் எழுதப்பட்டுள்ளது. ஆகவே எவனும், சட்டத்தின் மூலம் தேவனுக்கு வேண்டியவனாவதில்லை என்பது தெளிவாக உள்ளது. ஏனெனில் வேதவாக்கிவங்களில், “விசுவாசத்தினாலே தேவனுக்கு வேண்டியவனாக இருக்கிறவன் எப்போதும் வாழ்வான்” என்று சொல்லி இருப்பதே இதன் காரணம். விசுவாசம் சட்டம் அடிப்படையில் இயங்குவது அல்ல. அது வேறுபட்ட வழியைப் பயன்படுத்துகிறது. “எவனொருவன் சட்டங்களைக் கடைப்பிடிக்கிறானோ அவனே வாழ்வான்” என்று சட்டங்கள் கூறும். நம் மீது சட்டங்களானது சாபம் போட்டுள்ளது. ஆனால் கிறிஸ்து அச்சாபத்தை விலக்கிவிட்டார். தன்னையே அவர் சாபத்துக்கு உள்ளாக்கிக்கொண்டார். “எப்பொழுது ஒருவனது சரீரம் மரத்திலே தொங்க விடப்படுகிறதோ அவனே சாபத்துக்கு உள்ளாகிறான்” என்று எழுதப்பட்டிருக்கிறது. கிறிஸ்து இதனைச் செய்தார். அதனால் தேவனுடைய ஆசீர்வாதம் அனைத்து மக்களுக்கும் கிடைக்கிறது. தேவன் ஆபிரகாமையும் ஆசீர்வதிப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். இந்த ஆசீர்வாதம் இயேசு கிறிஸ்துவின் மூலமாய்த்தான் வருகிறது. இயேசு மரித்தார். அதனால் தேவனுடைய வாக்குறுதிப்படி பரிசுத்த ஆவியைப் பெற்றோம். விசுவாசத்தின் மூலம், நாம் அவ்வாக்குறுதிகளைப் பெறுகிறோம்.