கலாத்தியருக்கு எழுதிய கடிதம் 3:1-14

கலாத்தியருக்கு எழுதிய கடிதம் 3:1-14 TAERV

இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணம் அடைந்தார் என்பது பற்றி மிகத் தெளிவாகக் கலாத்திய மக்களாகிய உங்களுக்குச் சொல்லப்பட்டது. ஆனால் நீங்களோ புத்தியற்றவர்களாய் இருந்தீர்கள். எவரையோ உங்களிடம் தந்திரம் செய்ய அனுமதித்துவிட்டீர்கள். இதைப்பற்றி எனக்குக் கூறுங்கள், பரிசுத்த ஆவியானவரை நீங்கள் எப்படிப் பெற்றுக்கொண்டீர்கள்? சட்டங்களைப் பின்பற்றுவதன் மூலம் ஆவியானவரை ஏற்றுக்கொண்டீர்களா? இல்லை. நீங்கள் ஆவியைப் பெற்றீர்கள். ஏனென்றால் நீங்கள் நற்செய்தியைக் கேள்விப்பட்டு நம்பினீர்கள். ஆவியானவரால் நீங்கள் கிறிஸ்துவில் உங்கள் வாழ்க்கையைத் தொடங்கினீர்கள். இப்பொழுது உங்கள் சொந்த மாம்சீக பலத்தால் தொடர முயற்சி செய்கிறீர்களா? எவ்வளவு புத்தியற்றவர்கள் நீங்கள்? பல வகையிலும் அனுபவங்களை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அவை எல்லாம் வீணாக வேண்டுமா? அவை வீணாகாது என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் சட்டங்களைப் பின்பற்றுவதால் தேவன் உங்களுக்கு ஆவியைக் கொடுக்கிறாரா? இல்லை. நீங்கள் சட்டங்களைப் பின்பற்றுவதால் தேவன் உங்களிடம் அற்புதங்களைச் செய்கிறாரா? இல்லை. உங்களுக்கு அவர் ஆவியைக் கொடுத்ததும், அற்புதங்களை நடப்பித்ததும் நீங்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பினீர்கள் என்பதால்தான். ஆபிரகாமைப் பற்றியும், வேதவாக்கியங்கள் அதையே கூறுகிறது. “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தார். அவரது விசுவாசத்தை தேவன் ஏற்றுக்கொண்டார். இது அவரை தேவனுக்கு முன்பு நீதிமானாக்கியது.” ஆகவே ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். தேவன் மீது விசுவாசம் வைக்கிறவர்களே ஆபிரகாமின் உண்மையான பிள்ளைகள். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது பற்றியும் வேதவாக்கியங்கள் கூறியது. யூதர் அல்லாத மக்களைச் சரியான வழியில் அவர்களின் விசுவாசத்தின் மூலமே தேவன் வழிநடத்துவார். “பூமியில் உள்ள மக்களையெல்லாம் ஆசீர்வதிக்க, ஆபிரகாமே, தேவன் உன்னைப் பயன்படுத்துவார்” என்று சுவிசேஷமாய் முன் அறிவித்தது. ஆபிரகாம் இதை நம்பினார். நம்பியதால், அவர் ஆசீர்வதிக்கப்பட்டது போலவே, நம்பிக்கையுள்ள அனைவரும் ஆசீர்வதிக்கப்படுவர். ஆனால் சட்டத்தின்படி வாழ்பவர்கள் எவரும் சாபத்துக்குள்ளாவார்கள். ஏனென்றால் “ஒருவன் சட்டங்களைத் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் சபிக்கப்படுவான்” என்று சட்டங்களின் நூலில் எழுதப்பட்டுள்ளது. ஆகவே எவனும், சட்டத்தின் மூலம் தேவனுக்கு வேண்டியவனாவதில்லை என்பது தெளிவாக உள்ளது. ஏனெனில் வேதவாக்கிவங்களில், “விசுவாசத்தினாலே தேவனுக்கு வேண்டியவனாக இருக்கிறவன் எப்போதும் வாழ்வான்” என்று சொல்லி இருப்பதே இதன் காரணம். விசுவாசம் சட்டம் அடிப்படையில் இயங்குவது அல்ல. அது வேறுபட்ட வழியைப் பயன்படுத்துகிறது. “எவனொருவன் சட்டங்களைக் கடைப்பிடிக்கிறானோ அவனே வாழ்வான்” என்று சட்டங்கள் கூறும். நம் மீது சட்டங்களானது சாபம் போட்டுள்ளது. ஆனால் கிறிஸ்து அச்சாபத்தை விலக்கிவிட்டார். தன்னையே அவர் சாபத்துக்கு உள்ளாக்கிக்கொண்டார். “எப்பொழுது ஒருவனது சரீரம் மரத்திலே தொங்க விடப்படுகிறதோ அவனே சாபத்துக்கு உள்ளாகிறான்” என்று எழுதப்பட்டிருக்கிறது. கிறிஸ்து இதனைச் செய்தார். அதனால் தேவனுடைய ஆசீர்வாதம் அனைத்து மக்களுக்கும் கிடைக்கிறது. தேவன் ஆபிரகாமையும் ஆசீர்வதிப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். இந்த ஆசீர்வாதம் இயேசு கிறிஸ்துவின் மூலமாய்த்தான் வருகிறது. இயேசு மரித்தார். அதனால் தேவனுடைய வாக்குறுதிப்படி பரிசுத்த ஆவியைப் பெற்றோம். விசுவாசத்தின் மூலம், நாம் அவ்வாக்குறுதிகளைப் பெறுகிறோம்.