எபிரெயர் 12

12
1எனவே இப்படிப்பட்ட பெருந்திரளான சாட்சிகள் ஒரு மேகத்தைப்போல் நம்மைச்சுற்றி இருக்கிறதினால், நம்மைத் தடைசெய்கிற எல்லா பாரத்தையும், நம்மை இலகுவாய் சிக்கவைக்கிற பாவத்தையும் அகற்றிவிட்டு, நமக்காக நியமிக்கப்பட்டிருக்கிற இந்த ஓட்டப் பந்தயத்தில், விடாமுயற்சியுடன் ஓடுவோம். 2விசுவாசத்தைத் தொடங்குகிறவரும், அதை நிறைவு செய்பவருமாகிய இயேசுவின்மேல் நமது கண்களை பதிய வைப்போம். அவர் தமக்கு முன்பாக இருந்த மகிழ்ச்சியை நினைத்து, அவமானத்தை பொருட்படுத்தாமல் சிலுவையை சகித்து இறைவனுடைய அரியணையின், வலதுபக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார். 3நீங்கள் மனந்தளர்ந்து சோர்ந்துபோகாதபடிக்கு பாவிகளிலிருந்து வந்த இப்படிப்பட்ட எதிர்ப்பைச் சகித்தவரான இயேசுவைக்குறித்துச் சிந்தியுங்கள்.
இறைவன் தமது மக்களைத் திருத்துகிறார்
4பாவத்தை எதிர்த்துப் போராடுவதில் இரத்தம் சிந்தும் அளவுக்கு, நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை. 5ஒரு தந்தை தனது மகனைக் கூப்பிடுவதைப்போல, உங்களைக் கூப்பிட்டு உற்சாகப்படுத்தும் வார்த்தையை நீங்கள் முழுமையாக மறந்துவிட்டீர்களா? அவர்:
“என் மகனே, கர்த்தர் உன்னைத் தண்டித்துத் திருத்தும்போது,
அதை அலட்சியப்படுத்தாதே;
அவர் உன்னைக் கண்டிக்கும்போது, மனந்தளர்ந்து போகாதே.
6ஏனெனில் கர்த்தர் தாம் நேசிக்கிறவர்களையே தண்டித்துத் திருத்துகிறார்.
தாம் மகனாக ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவனையும் அவர் தண்டிக்கிறார்.”#12:6 நீதி. 3:11,12 (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்)
7கஷ்டங்கள் வரும்போது அவை உங்களைத் திருத்துவதற்காகவே வருகின்றன என்று அறிந்து, சகித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் இறைவன் உங்களைத் தமது பிள்ளைகளாக நடத்துகிறார். தனது தந்தையினால் தண்டித்துத் திருத்தப்படாத மகன் எங்கே இருக்கிறான்? 8பிள்ளைகள் தண்டித்துத் திருத்தப்படுகிறார்கள். எனவே நீங்கள் அவ்விதம் தண்டித்துத் திருத்தப்படாவிட்டால், அவருடைய உண்மையான பிள்ளைகளாயிராமல், முறைகேடாய் பிறந்த பிள்ளைகளாய் இருப்பீர்கள். 9மேலும், நம்மைத் தண்டித்துத் திருத்திய சரீரத்தின் தந்தைமார்கள் நம் எல்லோருக்கும் இருந்திருக்கிறார்கள். நாம் அவர்களை மதித்து நடந்தோம். அப்படியானால் நம் ஆவிகளுக்குத் தந்தையாய் இருக்கிறவருக்கு நாம் பணிந்து நடந்து வாழ்வைப் பெறுவது எவ்வளவு அவசியம்? 10நம்முடைய சரீரத்தின் தந்தையர் சிறிது காலத்திற்குத் தமக்கு நலமாய்த் தோன்றியபடி, நம்மைத் தண்டித்துத் திருத்தினார்கள்; ஆனால் இறைவனோ, நாம் அவருடைய பரிசுத்தத்தில் பங்குகொள்ளும்படியாக, நம்முடைய நன்மைக்கென்றே நம்மைத் தண்டித்துத் திருத்துகிறார். 11நாம் தண்டித்துத் திருத்தப்படும்போது அது அவ்வேளையில் சந்தோஷமாயிருக்காமல், வேதனையுடையதாகவே இருக்கிறது. ஆனால் அது, பின்பு திருத்தப்பட்டவர்களுக்கு நீதிநிறைந்த சமாதான அறுவடையை தரும்.
12ஆகவே, தளர்ந்துபோன உங்கள் கைகளையும் பலவீனமான உங்கள் முழங்கால்களையும் பெலப்படுத்துங்கள். 13முடமானவர்கள் முற்றும் ஊனமடைந்து போகாமல் குணமடையும்படி, உங்கள் பாதைகளை சரியான நிலைக்குக் கொண்டுசெல்லுங்கள்.#12:13 நீதி. 4:26
எச்சரிப்பும் உற்சாகமும்
14எல்லோருடனும் சமாதானமாய் வாழவும், உங்கள் நடத்தையில் பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கவும் எல்லா முயற்சியையும் செய்யுங்கள். பரிசுத்தமில்லாமல் ஒருவரும் கர்த்தரைக் காணமுடியாது. 15இறைவனுடைய கிருபையை ஒருவரும் இழந்து போகாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்குள் குழப்பத்தை விளைவித்து, பலரைக் கறைப்படுத்தும் கசப்புணர்வு வேரூன்றி முளைக்க இடங்கொடாதேயுங்கள். 16உங்களில் யாரும் முறைகேடான பாலுறவில் ஈடுபடாதபடி கவனமாயிருங்கள். ஒருவேளைச் சாப்பாட்டிற்காக மூத்த மகனுக்குரிய தன் பிறப்புரிமையை விற்றுவிட்ட ஏசாவைப்போல், பக்தியில்லாதவனாய் இராதபடியும் பார்த்துக்கொள்ளுங்கள். 17நீங்கள் அறிந்திருக்கிறபடி, அவன் இந்த ஆசீர்வாதத்தைத் திரும்பவும் பெற்றுக்கொள்ள விரும்பியபோதும், அவன் புறக்கணிக்கப்பட்டான். இந்த ஆசீர்வாதத்தை அவன் கண்ணீருடன் தேடியபோதும், அவனுக்கு அந்நிலையை மாற்றமுடியவில்லை.
பயமலையும் மகிழ்மலையும்
18நீங்கள் இப்பொழுது வந்திருப்பது தொடக்கூடியதும், நெருப்பு பற்றி எரிகிறதும், இருளும், மந்தாரமும், புயலும் சூழ்ந்துள்ள அந்த மலையின் பக்கம் அல்ல. 19அங்கே எக்காளம் முழங்கியது, ஒரு குரல் வார்த்தைகளைப் பேசியது. கேட்டவர்கள் இன்னொருமுறை அந்தக் குரலைத் தாங்கள் கேட்கக்கூடாது என்று, மன்றாடிக் கேட்டுக்கொண்டார்கள். 20ஏனெனில், “அந்த மலையை ஒரு மிருகம் தொட்டாலும், அந்த மிருகம் கல்லெறிந்து கொல்லப்படவேண்டும்”#12:20 யாத். 19:12,13 என்று சொல்லப்பட்டக் கட்டளையை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாமலிருந்தது. 21அந்தக் காட்சி மிகவும் பயங்கரமாக இருந்ததினாலே மோசே, “நான் பயத்தினால் நடுங்குகிறேன்”#12:21 உபா. 9:19. என்று சொன்னான்.
22ஆனால் நீங்களோ, இப்பொழுது ஜீவனுள்ள இறைவனின் நகரமாயிருக்கிற பரலோக எருசலேமாகிய சீயோன் மலைக்கே வந்திருக்கிறீர்கள். ஆயிரம் ஆயிரமான இறைத்தூதர்கள் மகிழ்ச்சியாய் சபை கூடுதலுக்கும், 23பரலோகத்தில் பெயர்கள் எழுதப்பட்டிருக்கின்ற முதற்பேறானவர்களின் திருச்சபைக்கும், எல்லா மனிதருக்கும் நீதிபதியாய் இருக்கிற இறைவனிடத்திற்கும், முழு நிறைவடைந்த நீதிமான்களின் ஆவிகளினிடத்திற்கும், 24புதிய உடன்படிக்கையின் நடுவரான இயேசுவினிடத்திற்கும், ஆபேலின் இரத்தத்தைவிட மேன்மையான வார்த்தையைப்பேசும் இயேசுவின் தெளிக்கப்பட்ட இரத்தத்தினிடத்திற்குமே நீங்கள் வந்திருக்கிறீர்கள்.
25ஆகவே உங்களிடம் பேசுகிற இறைவனை மறுக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் பூமியிலே அவர்களை எச்சரித்த, மோசேயுடைய வார்த்தைகளைக் கேட்க மறுத்தவர்கள் தப்பிப் போகவில்லை. அப்படியானால், பரலோகத்திலிருந்து எச்சரிக்கிறவருக்கு செவிகொடுக்க மறுத்தால், நாம் எப்படித் தப்பமுடியும்? 26அக்காலத்தில் இறைவனுடைய குரல் பூமியை அசைத்தது. இப்பொழுதோ அவர், “நான் இன்னும் ஒருமுறை பூமியை மட்டுமல்ல, வானத்தையும் சேர்த்து அசைப்பேன்”#12:26 ஆகா. 2:6 என்று இறைவன் வாக்களித்துள்ளார். 27“இன்னொருமுறை” என்ற வார்த்தை, அசைக்கப்படக் கூடிய படைப்புகள் அகற்றப்படும் என்பதையே தெளிவுபடுத்துகிறது. இதனால், அசைக்கப்பட முடியாதவை தொடர்ந்து நிலைத்திருக்கும்.
28ஆகவே, அசைக்கப்படாத ஒரு அரசையே பெறுகிறவர்களாகிய நாம் நன்றியுடையவர்களாய், இறைவன் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில், பயபக்தியுடன், ஆராதிப்போம். 29ஏனெனில், நமது இறைவனோ சுட்டெரிக்கும் நெருப்பாய் இருக்கிறார்.#12:29 உபா. 4:24

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

எபிரெயர் 12: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்