ஓசியா 7:1-10

ஓசியா 7:1-10 TCV

நான் இஸ்ரயேலைக் குணமாக்கும்போது, எப்பிராயீமின் பாவங்களும், சமாரியாவின் குற்றங்களும் வெளிப்படும். அவர்கள் வஞ்சனையைக் கைக்கொள்கிறார்கள்; திருடர்கள் வீடுகளை உடைத்து உள்ளே போகிறார்கள், கொள்ளையர்கள் வீதிகளில் சூறையாடுகிறார்கள். அவர்களின் தீமைகள் எல்லாவற்றையும் நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்பதை அவர்கள் உணராதிருக்கிறார்கள். அவர்களின் பாவங்கள் அவர்களை மூடிப்போடுகின்றன; அவை எப்பொழுதும் என்முன் இருக்கின்றன. “தங்கள் கொடுமையினால் அரசனையும், பொய்யினால் இளவரசர்களையும் மகிழ்விக்கின்றார்கள். அவர்கள் எல்லோரும் விபசாரக்காரர். அவர்கள் அப்பம் சுடும் அடுப்பைப்போல் எரிந்துகொண்டே இருக்கிறார்கள். மாவைப் பிசையும் நேரத்திலிருந்து, அது புளித்துப் பொங்கும் நேரம்வரைக்கும், அதன் நெருப்பை ஊதவேண்டிய அவசியம் இல்லை. எங்கள் அரசனின் கொண்டாட்ட நாளில், இளவரசர்கள் திராட்சை மதுவினால் வெறிகொண்டார்கள்; அரசன் ஏளனக்காரர்களுடன் கைகோத்திருக்கிறான். அவர்களின் இருதயங்கள் சதித்திட்டங்களினால் அடுப்பைப்போல் எரிகின்றன; இரவு முழுவதும் அவர்களின் கோபம், நெருப்புத் தணலைப்போல் எரிகிறது; காலையில் அது கொழுந்து விட்டெரியும் நெருப்பைப்போல் இருக்கிறது. அவர்கள் எல்லோரும் சூடேறிய அடுப்பைப்போலாகி, அவர்கள் தங்கள் ஆளுநர்களை அழிக்கிறார்கள். அவர்களுடைய அரசர்கள் அனைவரும் விழுகிறார்கள்; ஆனால் அவர்களில் ஒருவனும் என்னைக் கூப்பிடுகிறதில்லை. “எப்பிராயீம் பிற நாடுகளுடன் கலந்துகொள்கிறான்; எப்பிராயீம் புரட்டிப் போடாததினால் ஒரு பக்கம் வேகாத அப்பம் போலிருக்கிறான். அந்நியர் அவன் பெலத்தை உறிஞ்சுகிறார்கள்; ஆனால் அவன் அதை உணர்கிறதில்லை. அவன் தலையில் நரைமயிர் தோன்றிவிட்டது, ஆயினும் அதையும் அவன் கவனிக்கவில்லை. இஸ்ரயேலின் அகந்தை அவனுக்கெதிராய்ச் சாட்சி கூறுகிறது. இவையெல்லாம் நடந்துங்கூட, அவர்கள் தனது இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பவுமில்லை, அவரைத் தேடவுமில்லை.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ஓசியா 7:1-10