ஓசியா 7:1-10

ஓசியா 7:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நான் என் ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போதும், நான் இஸ்ரவேலை குணமாக்க விரும்பும்போதும், எப்பிராயீமின் அக்கிரமமும் சமாரியாவின் பொல்லாப்புகளும் வெளிப்படுத்தப்படும்; அவர்கள் வஞ்சனை செய்கிறார்கள்; திருடன் உள்ளே வருகிறான்; வெளியே பறிகாரரின் கூட்டத்தார் கொள்ளையிடுகிறார்கள். அவர்கள் பொல்லாப்பையெல்லாம் நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்று அவர்கள் தங்கள் இருதயத்தில் சிந்திக்கிறதில்லை; இப்போதும் அவர்களுடைய கிரியைகள் அவர்களைச் சூழ்ந்துகொண்டது; அவைகள் என் முகத்துக்கு முன் இருக்கிறது. ராஜாவைத் தங்கள் பொல்லாப்பினாலும், அதிபதிகளைத் தங்கள் பொய்களினாலும் சந்தோஷப்படுத்துகிறார்கள். அவர்கள் எல்லாரும் விபசாரக்கள்ளர்; அப்பஞ்சுடுகிறவன் எரிக்கும் அடுப்பைப்போல் இருக்கிறார்கள்; அவன் மாவைப் பிசைந்ததுமுதல் அது உப்பிப்போகுமட்டும், அனலை மூட்டாமல் ஓய்ந்திருக்கிறான். நம்முடைய ராஜாவின் நாளென்று சொல்லி, அதிபதிகள் திராட்சரசத்துருத்திகளால் அவனுக்கு வியாதியுண்டாக்குகிறார்கள்; சரசக்காரரோடேகூட அவன் தன் கையை நீட்டுகிறான். அவர்கள் பதிவிருக்கும்போது, தங்கள் இருதயத்தை அடுப்பைப்போல் ஆயத்தப்படுத்துகிறார்கள்; அவர்களில் அடுப்புமூட்டுகிறவன் இராமுழுதும் தூங்கினாலும், காலமேயோவென்றால் அது ஜூவாலிக்கிற அக்கினியாய் எரியும். அவர்கள் எல்லாரும் அடுப்பைப்போல அனலாகி, தங்கள் நியாயாதிபதிகளைப் பட்சித்தார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் எல்லாரும் விழுந்தார்கள்; அவர்களில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறவன் ஒருவனும் இல்லை. எப்பிராயீம் அந்நியஜனங்களோடே கலந்திருக்கிறான்; எப்பிராயீம் திருப்பிப்போடாத அப்பம். அந்நியர் அவனுடைய பலத்தைத் தின்கிறார்கள்; அவனோ அதை அறியான்; நரைமயிரும் அவனில் தெளித்திருக்கிறது, அவனோ அதை அறியாதிருக்கிறான். இஸ்ரவேலின் அகந்தை அவர்கள் முகத்துக்கு முன்பாகச் சாட்சியிட்டாலும், அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பாமலும், இவை எல்லாவற்றிலும் அவரைத் தேடாமலும் இருக்கிறார்கள்.

ஓசியா 7:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நான் இஸ்ரயேலைக் குணமாக்கும்போது, எப்பிராயீமின் பாவங்களும், சமாரியாவின் குற்றங்களும் வெளிப்படும். அவர்கள் வஞ்சனையைக் கைக்கொள்கிறார்கள்; திருடர்கள் வீடுகளை உடைத்து உள்ளே போகிறார்கள், கொள்ளையர்கள் வீதிகளில் சூறையாடுகிறார்கள். அவர்களின் தீமைகள் எல்லாவற்றையும் நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்பதை அவர்கள் உணராதிருக்கிறார்கள். அவர்களின் பாவங்கள் அவர்களை மூடிப்போடுகின்றன; அவை எப்பொழுதும் என்முன் இருக்கின்றன. “தங்கள் கொடுமையினால் அரசனையும், பொய்யினால் இளவரசர்களையும் மகிழ்விக்கின்றார்கள். அவர்கள் எல்லோரும் விபசாரக்காரர். அவர்கள் அப்பம் சுடும் அடுப்பைப்போல் எரிந்துகொண்டே இருக்கிறார்கள். மாவைப் பிசையும் நேரத்திலிருந்து, அது புளித்துப் பொங்கும் நேரம்வரைக்கும், அதன் நெருப்பை ஊதவேண்டிய அவசியம் இல்லை. எங்கள் அரசனின் கொண்டாட்ட நாளில், இளவரசர்கள் திராட்சை மதுவினால் வெறிகொண்டார்கள்; அரசன் ஏளனக்காரர்களுடன் கைகோத்திருக்கிறான். அவர்களின் இருதயங்கள் சதித்திட்டங்களினால் அடுப்பைப்போல் எரிகின்றன; இரவு முழுவதும் அவர்களின் கோபம், நெருப்புத் தணலைப்போல் எரிகிறது; காலையில் அது கொழுந்து விட்டெரியும் நெருப்பைப்போல் இருக்கிறது. அவர்கள் எல்லோரும் சூடேறிய அடுப்பைப்போலாகி, அவர்கள் தங்கள் ஆளுநர்களை அழிக்கிறார்கள். அவர்களுடைய அரசர்கள் அனைவரும் விழுகிறார்கள்; ஆனால் அவர்களில் ஒருவனும் என்னைக் கூப்பிடுகிறதில்லை. “எப்பிராயீம் பிற நாடுகளுடன் கலந்துகொள்கிறான்; எப்பிராயீம் புரட்டிப் போடாததினால் ஒரு பக்கம் வேகாத அப்பம் போலிருக்கிறான். அந்நியர் அவன் பெலத்தை உறிஞ்சுகிறார்கள்; ஆனால் அவன் அதை உணர்கிறதில்லை. அவன் தலையில் நரைமயிர் தோன்றிவிட்டது, ஆயினும் அதையும் அவன் கவனிக்கவில்லை. இஸ்ரயேலின் அகந்தை அவனுக்கெதிராய்ச் சாட்சி கூறுகிறது. இவையெல்லாம் நடந்துங்கூட, அவர்கள் தனது இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பவுமில்லை, அவரைத் தேடவுமில்லை.

ஓசியா 7:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நான் என் மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போதும், நான் இஸ்ரவேலை குணமாக்க விரும்பும்போதும், எப்பிராயீமின் அக்கிரமமும் சமாரியாவின் பொல்லாப்புகளும் வெளிப்படுத்தப்படும்; அவர்கள் வஞ்சனை செய்கிறார்கள்; திருடன் உள்ளே வருகிறான்; வெளியே கொள்ளைக்காரர்களின் கூட்டத்தார் கொள்ளையிடுகிறார்கள். அவர்கள் பொல்லாப்பையெல்லாம் நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்று அவர்கள் தங்கள் இருதயத்தில் சிந்திக்கிறதில்லை; இப்போதும் அவர்களுடைய செயல்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டது; அவைகள் என் முகத்திற்கு முன்பாக இருக்கிறது. ராஜாவைத் தங்கள் பொல்லாப்பினாலும், அதிபதிகளைத் தங்கள் பொய்களினாலும் சந்தோஷப்படுத்துகிறார்கள். அவர்கள் எல்லோரும் விபசாரக்கள்ளர்; அப்பம் சுடுகிறவன் எரிக்கும் அடுப்பைப்போல் இருக்கிறார்கள்; அவன் மாவைப் பிசைந்ததுமுதல் அது புளித்துப்போகும்வரை, நெருப்பை மூட்டாமல் ஓய்ந்திருக்கிறான். நம்முடைய ராஜாவின் நாளென்று சொல்லி, அதிபதிகள் திராட்சைரச தோல்பைகளால் அவனுக்கு வியாதியுண்டாக்குகிறார்கள்; பரிகாசம் செய்கிறவர்களுடன்கூட அவன் தன் கையை நீட்டுகிறான். அவர்கள் பதிவிருக்கும்போது, தங்கள் இருதயத்தை அடுப்பைப்போல் ஆயத்தப்படுத்துகிறார்கள்; அவர்களில் அடுப்புமூட்டுகிறவன் இரவுமுழுவதும் தூங்கினாலும், காலையிலோவென்றால் அது ஜூவாலிக்கிற அக்கினியாக எரியும். அவர்கள் எல்லோரும் அடுப்பைப்போல சூடாகி, தங்கள் நியாயாதிபதிகளை அழித்தார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் எல்லோரும் விழுந்தார்கள்; அவர்களில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறவன் ஒருவனும் இல்லை. எப்பிராயீம் அந்நியமக்களோடே கலந்திருக்கிறான்; எப்பிராயீம் திருப்பிப்போடாத அப்பம். அந்நியர்கள் அவனுடைய பலத்தைத் தின்கிறார்கள்; அவனோ அதை அறியான்; நரைமுடியும் அவனில் தெளித்திருக்கிறது, அவனோ அதை அறியாமல் இருக்கிறான். இஸ்ரவேலின் பெருமை அவர்கள் முகத்திற்கு முன்பாகச் சாட்சியிட்டாலும், அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்பாமலும், இவை எல்லாவற்றிலும் அவரைத் தேடாமலும் இருக்கிறார்கள்.

ஓசியா 7:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

“நான் இஸ்ரவேலைக் குணப்படுத்துவேன். பிறகு ஜனங்கள் எப்பிராயீம் பாவம் செய்ததை அறிவார்கள். ஜனங்கள் சமாரியாவின் பொய்களை அறிவார்கள். ஜனங்கள் நகரத்திற்குள் வந்துபோகிற திருடர்களைப் பற்றி அறிவார்கள். அந்த ஜனங்கள் நான் அவர்களின் குற்றங்களை நினைப்பேன் என்பதை நம்பமாட்டார்கள். அவர்கள் செய்த கெட்டவைகளெல்லாம் சுற்றிலும் உள்ளன. நான் அவர்களது பாவங்களைத் தெளிவாகப் பார்க்கமுடியும். அவர்களது தீமை அவர்களின் ராஜாவை மகிழ்ச்சிப்படுத்துகிறது. அவர்களது அந்நியத் தெய்வங்கள் அவர்களின் தலைவர்களை மகிழ்ச்சிப்படுத்தும். அப்பம் சுடுகிறவன் அப்பம் சுடுவதற்காக அடுப்பை எரிக்கிறான். அவன் அடுப்பில் அப்பத்தை வைக்கிறான். அப்பத்தின் மாவு புளித்துகொண்டிருக்கும்போது அப்பம் சுடுபவன் அடுப்பில் அளவுக்கு அதிகமான நெருப்பைப் போடமாட்டான். ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் அவ்வாறு இல்லை. இஸ்ரவேல் ஜனங்கள் எப்பொழுதும் தம் நெருப்பை மேலும் சூடாக்குகின்றனர். நம்முடைய ராஜாவின் நாளில் அவர்கள் தம் நெருப்பை மேலும் சூடாக்குகின்றனர். அவர்கள் குடி விருந்துகளைக் கொடுக்கிறார்கள். தலைவர்கள் திராட்சைரசத்தின் சூட்டால் நோயடைகின்றனர். எனவே ராஜாக்கள் தேவனைப் பரிகாசம் செய்யும் ஜனங்களோடு சேருகின்றார்கள். ஜனங்கள் தமது இரகசிய திட்டங்களைப் போடுகிறார்கள். அவர்களது இதயங்கள் சூட்டடுப்பைப் போன்று கிளர்ச்சியடைகின்றன. அவர்களின் ஆர்வம் இரவு முழுவதும் எரியும். காலையில் அது நெருப்பாய் எரியும். அவர்கள் அனைவரும் எரியும் சூட்டடுப்பாய் இருக்கிறார்கள். அவர்கள் தமது ஆட்சியாளர்களை அழித்தார்கள். அவர்களின் ராஜாக்கள் அனைவரும் விழுந்தார்கள். அவர்களில் ஒருவரும் என்னை உதவிக்கு அழைக்கவில்லை.” “எப்பிராயீம் மற்ற தேசங்களோடு கலந்திருக்கிறான். எப்பிராயீம் இரண்டு பக்கமும் வேகாத அப்பத்தைப் போன்று இருக்கிறான். அந்நியர்கள் எப்பிராயீமின் பலத்தை அழிக்கிறார்கள். ஆனால் எப்பிராயீம் இதை அறியவில்லை எப்பிராயீம் மேல் நரை மயிர்கள் தெளிக்கப்பட்டுள்ளன. ஆனால் எப்பிராயீம் இதனை அறியவில்லை. எப்பிராயீமின் பெருமை அவனுக்கு எதிராகப் பேசுகிறது. ஜனங்களுக்குப் பற்பல தொல்லைகள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் இன்னும் தமது தேவனாகிய கர்த்தரிடம் திரும்பிப் போகவில்லை. ஜனங்கள் உதவிக்கு அவரை நோக்கிப் பாக்கவில்லை.