ஏசாயா 53:3-10

ஏசாயா 53:3-10 TCV

அவர் மனிதரால் இகழப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் இருந்தார்; அவர் துன்பத்தின் மனிதனாய் வேதனையில் பங்குகொண்டவராய் இருந்தார். அருவருப்புள்ள ஒருவனைக் கண்டு மனிதர் தம் முகத்தை மறைத்துக்கொள்வதுபோல், அவர் இகழப்பட்டார், நாமும் அவரை மதிக்கவில்லை. உண்மையாகவே அவர் நமது வேதனைகளை ஏற்றுக்கொண்டு, நமது நோய்களையும் குறைகளையும் சுமந்தார். அப்படியிருக்க, நாமோ அவர் தமக்காகவே இறைவனால் அடிக்கப்பட்டு, அவரால் தாக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டார் என எண்ணினோம். ஆனால், அவரோ எங்கள் மீறுதல்களினிமித்தம் ஊடுருவக் குத்தப்பட்டார், எங்கள் அக்கிரமங்களுக்காகவே அவர் நொறுக்கப்பட்டார்; நமக்கு சமாதானத்தைக் கொண்டுவந்த தண்டனை அவர்மேல் வந்தது, அவருடைய காயங்களினால் நாம் குணமாகிறோம். நாமெல்லோரும் ஆடுகளைப்போல, வழிதவறி அலைந்தோம்; நம்முடைய சொந்த வழிக்கே திரும்பினோம். யெகோவாவோ நம் எல்லோருடைய அநியாயத்தையும் அவர்மேல் சுமத்தினார். அவர் ஒடுக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார், அப்படியிருந்தும் அவர் தனது வாயைத் திறக்கவில்லை; அவர் கொல்லப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் ஆட்டுக்குட்டியைப் போலவும், மயிர்க்கத்தரிப்பவனுக்கு முன்பாக மவுனமாயிருக்கும் ஆட்டைப்போலவும் அவர் தமது வாயைத் திறவாதிருந்தார். ஒடுக்கப்பட்டு நியாயமான தீர்ப்பின்றி அவர் கொண்டுசெல்லப்பட்டார். அவரது தலைமுறையினரைக் குறித்து யாரால் என்ன சொல்லமுடியும்? ஏனெனில் ஜீவனுள்ளோரின் நாட்டிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்; எனது மக்களின் மீறுதல்களுக்காக அவர் வாதிக்கப்பட்டார். அவரிடம் வன்முறை எதுவும் இருந்ததில்லை, அவருடைய வாயில் வஞ்சனை எதுவும் காணப்பட்டதுமில்லை. ஆனாலும் கொடியவர்களோடு அவருக்கு ஒரு கல்லறை நியமிக்கப்பட்டது; தம் மரணத்தில் செல்வந்தரோடு அவர் இருந்தார். ஆயினும் அவரை நொறுக்கி, வேதனைக்கு உள்ளாக்குவதே யெகோவாவின் திட்டமாய் இருந்தது, அவர் தமது உயிரைக் குற்றநிவாரண பலியாக ஆக்கியிருக்கிற போதிலும், அவர் நீடித்த நாட்களாய் இருந்து, தம் சந்ததியைக் காண்பார். யெகோவாவினுடைய திட்டம் அவரது கரத்தால் நிறைவேறும்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ஏசாயா 53:3-10