நியாயாதிபதிகள் 15:9-20

நியாயாதிபதிகள் 15:9-20 TCV

பெலிஸ்தியர் யூதாவிலே முகாமிட்டு லேகிக்கு அருகில் பரவியிருந்தார்கள். அப்பொழுது யூதாவின் மனிதர், “ஏன் எங்களுடன் சண்டையிட வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “சிம்சோன் எங்களுக்குச் செய்ததுபோல அவனுக்கும் நாங்கள் செய்வதற்காக, சிம்சோனைக் கைதுசெய்து கொண்டுபோக வந்தோம்” என்றார்கள். அப்பொழுது யூதாவின் மனிதர்களில் மூவாயிரம்பேர் சிம்சோன் இருந்த ஏத்தாமின் பாதையிலிருந்த குகைக்குச் சென்று அவனிடம், “பெலிஸ்தியரே எங்கள்மேல் ஆளுநர்களாக இருக்கிறார்கள் என்பதை நீ உணரவில்லையா? நீ எங்களுக்குச் செய்தது என்ன?” என்றார்கள். அதற்கு அவன், “அவர்கள் எனக்குச் செய்ததையே நான் அவர்களுக்குச் செய்தேன்” என்றான். அதற்கு அவர்கள், “நாங்கள் இப்பொழுது உன்னைக் கட்டி பெலிஸ்தியரிடம் ஒப்படைக்கவே வந்திருக்கிறோம்” என்றார்கள். சிம்சோன் அவர்களிடம், “நீங்கள் என்னைக் கொலைசெய்யப் போவதில்லை என்று எனக்கு ஆணையிட்டுக் கொடுங்கள்” என்றான். அதற்கு அவர்கள், “சரி; உன்னைக் கொலைசெய்யமாட்டோம். ஆனால் கட்டி அவர்களிடம் ஒப்படைப்போம்” எனப் பதிலளித்தனர். பின் அவர்கள் அவனை சுற்றிவளைத்து இரண்டு புதிய கயிறுகளால் கட்டி கற்பாறையிலிருந்து வெளியே கொண்டுசென்றனர். அவன் லேகிக்கு சமீபமாய் வருகையில் பெலிஸ்தியர் அவனை நெருங்கி வந்தார்கள். அந்த நேரத்தில் யெகோவாவின் ஆவியானவர் அவன்மேல் வல்லமையுடன் இறங்கினார். அதனால் அவனைக் கட்டியிருந்த கயிறுகள் திடீரென நெருப்பில் எரிந்த சணல்நூல் போலாகி கட்டுகள் அவன் கையிலிருந்து அறுந்து விழுந்தன. அப்பொழுது அவன் கழுதையின் பழுதடையாத தாடை எலும்பைக் கண்டெடுத்து, அதைக்கொண்டு ஆயிரம்பேரைக் குத்திக் கொன்றான். அப்பொழுது சிம்சோன் சொன்னான்: “கழுதையின் தாடை எலும்பினால் ஒரு பிணக்குவியலை ஏற்படுத்தினேன். கழுதையின் ஒரு தாடை எலும்பினாலேயே, நான் ஆயிரம்பேரைக் கொலைசெய்தேன்.” அவன் இவ்வாறு சொல்லி முடிந்தவுடன் தாடை எலும்பை எறிந்துவிட்டான். அந்த இடம் ராமாத் லேகி என அழைக்கப்பட்டது. அவன் மிகவும் தாகமாக இருந்ததினால் யெகோவாவை நோக்கி, “உமது அடியானாகிய எனக்கு இந்தப் பெரிய வெற்றியைத் தந்திருக்கிறீர்; இப்பொழுது நான் தாகத்தினால் இந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் கையிலே அகப்பட்டு சாகவேண்டுமா?” என அழுதான். அப்பொழுது இறைவன் லேகியின் பள்ளத்தைப் பிளந்தார். அதிலிருந்து தண்ணீர் வந்தது. அதைச் சிம்சோன் குடித்தவுடன் பெலனடைந்து, புத்துயிர் பெற்றான். அந்த நீரூற்று என்ஹக்கோரே என அழைக்கப்பட்டது. அந்நீரூற்று இந்நாள்வரை லேகியில் இருக்கிறது. பெலிஸ்தியரின் காலத்தில் சிம்சோன் இஸ்ரயேலில் இருபது வருடங்கள் நீதிபதியாய் இருந்தான்.