நியாயாதிபதிகள் 15:9-20

நியாயாதிபதிகள் 15:9-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது பெலிஸ்தர் போய், யூதாவிலே பாளயமிறங்கி, லேகி என்கிற வெளியிலே பரவியிருந்தார்கள். நீங்கள் எங்களுக்கு விரோதமாக வந்தது என்ன என்று யூதா மனுஷர் கேட்டதற்கு, அவர்கள்: சிம்சோன் எங்களுக்குச் செய்ததுபோல, நாங்களும் அவனுக்குச் செய்யும்படி அவனைக் கட்டுகிறதற்காக வந்தோம் என்றார்கள். அப்பொழுது யூதாவிலே மூவாயிரம்பேர் ஏத்தாம் ஊர்க் கன்மலைச் சந்திற்குப் போய்: பெலிஸ்தர் நம்மை ஆளுகிறார்கள் என்று தெரியாதா? பின்னை ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் என்று சிம்சோனிடத்தில் சொன்னார்கள். அதற்கு அவன்: அவர்கள் எனக்குச் செய்தபடியே நானும் அவர்களுக்குச் செய்தேன் என்றான். அப்பொழுது அவர்கள்: உன்னைக்கட்டி, பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுக்க வந்திருக்கிறோம் என்றார்கள். அதற்குச் சிம்சோன்: நீங்களே என்மேல் விழுகிறதில்லை என்று எனக்கு ஆணையிடுங்கள் என்றான். அதற்கு அவர்கள்: நாங்கள் உன்னை இறுகக்கட்டி, அவர்கள் கையில் ஒப்புக்கொடுப்போமே அல்லாமல், உன்னைக் கொன்றுபோடமாட்டோம் என்று சொல்லி, இரண்டு புதுக் கயிறுகளாலே அவனைக் கட்டி, கன்மலையிலிருந்து கொண்டுபோனார்கள். அவன் லேகிவரைக்கும் வந்து சேர்ந்தபோது, பெலிஸ்தர் அவனுக்கு விரோதமாய் ஆரவாரம் பண்ணினார்கள். அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவன் கட்டுகள் அவன் கைகளை விட்டு அறுந்துபோயிற்று. உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடையெலும்பைக் கண்டு, தன் கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே ஆயிரம்பேரைக் கொன்றுபோட்டான். அப்பொழுது சிம்சோன்: கழுதையின் தாடையெலும்பினால் குவியல் குவியலாகப் பட்டுக்கிடக்கிறார்கள், கழுதையின் தாடையெலும்பினால் ஆயிரம்பேரைக் கொன்றேன் என்றான். அப்படிச் சொல்லித் தீர்ந்தபின்பு, தன் கையில் இருந்த தாடையெலும்பை எறிந்துவிட்டு, அவ்விடத்திற்கு ராமாத்லேகி என்று பேரிட்டான். அவன் மிகவும் தாகமடைந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: தேவரீர் உமது அடியேன் கையினால் இந்தப் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டிருக்க, இப்பொழுது நான் தாகத்தினால் செத்து, விருத்தசேதனம் இல்லாதவர்கள் கையிலே விழவேண்டுமோ என்றான். அப்பொழுது தேவன் லேகியிலுள்ள பள்ளத்தைப் பிளக்கப்பண்ணினார்; அதிலிருந்து தண்ணீர் ஓடிவந்தது; அவன் குடித்தபோது அவன் உயிர் திரும்ப வந்தது, அவன் பிழைத்தான்; ஆனபடியால் அதற்கு எந்நக்கோரி என்று பேரிட்டான்; அது இந்நாள்வரையும் லேகியில் இருக்கிறது. அவன் பெலிஸ்தரின் நாட்களில் இஸ்ரவேலை இருபது வருஷம் நியாயம் விசாரித்தான்.

நியாயாதிபதிகள் 15:9-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பெலிஸ்தியர் யூதாவிலே முகாமிட்டு லேகிக்கு அருகில் பரவியிருந்தார்கள். அப்பொழுது யூதாவின் மனிதர், “ஏன் எங்களுடன் சண்டையிட வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “சிம்சோன் எங்களுக்குச் செய்ததுபோல அவனுக்கும் நாங்கள் செய்வதற்காக, சிம்சோனைக் கைதுசெய்து கொண்டுபோக வந்தோம்” என்றார்கள். அப்பொழுது யூதாவின் மனிதர்களில் மூவாயிரம்பேர் சிம்சோன் இருந்த ஏத்தாமின் பாதையிலிருந்த குகைக்குச் சென்று அவனிடம், “பெலிஸ்தியரே எங்கள்மேல் ஆளுநர்களாக இருக்கிறார்கள் என்பதை நீ உணரவில்லையா? நீ எங்களுக்குச் செய்தது என்ன?” என்றார்கள். அதற்கு அவன், “அவர்கள் எனக்குச் செய்ததையே நான் அவர்களுக்குச் செய்தேன்” என்றான். அதற்கு அவர்கள், “நாங்கள் இப்பொழுது உன்னைக் கட்டி பெலிஸ்தியரிடம் ஒப்படைக்கவே வந்திருக்கிறோம்” என்றார்கள். சிம்சோன் அவர்களிடம், “நீங்கள் என்னைக் கொலைசெய்யப் போவதில்லை என்று எனக்கு ஆணையிட்டுக் கொடுங்கள்” என்றான். அதற்கு அவர்கள், “சரி; உன்னைக் கொலைசெய்யமாட்டோம். ஆனால் கட்டி அவர்களிடம் ஒப்படைப்போம்” எனப் பதிலளித்தனர். பின் அவர்கள் அவனை சுற்றிவளைத்து இரண்டு புதிய கயிறுகளால் கட்டி கற்பாறையிலிருந்து வெளியே கொண்டுசென்றனர். அவன் லேகிக்கு சமீபமாய் வருகையில் பெலிஸ்தியர் அவனை நெருங்கி வந்தார்கள். அந்த நேரத்தில் யெகோவாவின் ஆவியானவர் அவன்மேல் வல்லமையுடன் இறங்கினார். அதனால் அவனைக் கட்டியிருந்த கயிறுகள் திடீரென நெருப்பில் எரிந்த சணல்நூல் போலாகி கட்டுகள் அவன் கையிலிருந்து அறுந்து விழுந்தன. அப்பொழுது அவன் கழுதையின் பழுதடையாத தாடை எலும்பைக் கண்டெடுத்து, அதைக்கொண்டு ஆயிரம்பேரைக் குத்திக் கொன்றான். அப்பொழுது சிம்சோன் சொன்னான்: “கழுதையின் தாடை எலும்பினால் ஒரு பிணக்குவியலை ஏற்படுத்தினேன். கழுதையின் ஒரு தாடை எலும்பினாலேயே, நான் ஆயிரம்பேரைக் கொலைசெய்தேன்.” அவன் இவ்வாறு சொல்லி முடிந்தவுடன் தாடை எலும்பை எறிந்துவிட்டான். அந்த இடம் ராமாத் லேகி என அழைக்கப்பட்டது. அவன் மிகவும் தாகமாக இருந்ததினால் யெகோவாவை நோக்கி, “உமது அடியானாகிய எனக்கு இந்தப் பெரிய வெற்றியைத் தந்திருக்கிறீர்; இப்பொழுது நான் தாகத்தினால் இந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் கையிலே அகப்பட்டு சாகவேண்டுமா?” என அழுதான். அப்பொழுது இறைவன் லேகியின் பள்ளத்தைப் பிளந்தார். அதிலிருந்து தண்ணீர் வந்தது. அதைச் சிம்சோன் குடித்தவுடன் பெலனடைந்து, புத்துயிர் பெற்றான். அந்த நீரூற்று என்ஹக்கோரே என அழைக்கப்பட்டது. அந்நீரூற்று இந்நாள்வரை லேகியில் இருக்கிறது. பெலிஸ்தியரின் காலத்தில் சிம்சோன் இஸ்ரயேலில் இருபது வருடங்கள் நீதிபதியாய் இருந்தான்.

நியாயாதிபதிகள் 15:9-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது பெலிஸ்தர்கள் போய், யூதாவிலே முகாமிட்டு, லேகி என்கிற வெளியிலே பரவியிருந்தார்கள். நீங்கள் எங்களுக்கு விரோதமாக வந்தது என்ன என்று யூதா மனிதர்கள் கேட்டதற்கு, அவர்கள்: சிம்சோன் எங்களுக்குச் செய்ததுபோல, நாங்களும் அவனுக்குச் செய்யும்படி அவனைக் கட்டுகிறதற்காக வந்தோம் என்றார்கள். அப்பொழுது யூதாவிலே மூவாயிரம்பேர் ஏத்தாம் ஊர்க் கன்மலைக் குகைக்குப் போய்: பெலிஸ்தர்கள் நம்மை ஆளுகிறார்கள் என்று தெரியாதா? பின்னை ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் என்று சிம்சோனிடத்தில் சொன்னார்கள். அதற்கு அவன்: அவர்கள் எனக்குச் செய்தபடியே நானும் அவர்களுக்குச் செய்தேன் என்றான். அப்பொழுது அவர்கள்: உன்னைக் கட்டி, பெலிஸ்தர்கள் கையில் ஒப்புக்கொடுக்க வந்திருக்கிறோம் என்றார்கள். அதற்குச் சிம்சோன்: நீங்கள் என்னைக் கொன்றுபோடமாட்டோம் என்று எனக்கு சத்தியம் செய்யுங்கள் என்றான். அதற்கு அவர்கள்: நாங்கள் உன்னை இறுகக்கட்டி, அவர்களுடைய கையில் ஒப்புக்கொடுப்போமே அல்லாமல், உன்னைக் கொன்றுபோடமாட்டோம் என்று சொல்லி, இரண்டு புதுக் கயிறுகளாலே அவனைக் கட்டி, கன்மலையிலிருந்து கொண்டுபோனார்கள். அவன் லேகிவரைக்கும் வந்து சேர்ந்தபோது, பெலிஸ்தர்கள் அவனுக்கு எதிராக ஆரவாரம் செய்தார்கள். அப்பொழுது யெகோவாவுடைய ஆவி அவன்மேல் பலமாக இறங்கினதால், அவனுடைய புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவன் கட்டுகள் அவனுடைய கைகளைவிட்டு அறுந்துபோயின. உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடை எலும்பைக் கண்டு, தன்னுடைய கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே 1,000 பேரைக் கொன்றுபோட்டான். அப்பொழுது சிம்சோன்: கழுதையின் தாடை எலும்பினால் குவியல் குவியலாக மடிந்து கிடக்கிறார்கள், கழுதையின் தாடையெலும்பினால் 1,000 பேரைக் கொன்றேன் என்றான். அப்படிச் சொல்லிமுடிந்தபின்பு, தன்னுடைய கையில் இருந்த தாடை எலும்பை எறிந்துவிட்டு, அந்த இடத்திற்கு ராமாத்லேகி என்று பெயரிட்டான். அவன் மிகவும் தாகமடைந்து, யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: தேவரீர் உமது அடியேன் கையினால் இந்தப் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டிருக்க, இப்பொழுது நான் தாகத்தினால் செத்து, விருந்தசேதனம் பண்ணப்படாதவர்களின் கைகளினால் சாகவேண்டுமோ என்றான். அப்பொழுது தேவன் லேகியிலுள்ள பள்ளத்தைப் பிளக்கச்செய்தார்; அதிலிருந்து தண்ணீர் ஓடிவந்தது; அவன் குடித்தபோது அவனுடைய உயிர் திரும்ப வந்தது, அவன் பிழைத்தான்; ஆனபடியால் அதற்கு எந்நக்கோரி என்று பெயரிட்டான்; அது இந்த நாள்வரையும் லேகியில் இருக்கிறது. அவன் பெலிஸ்தர்களின் நாட்களில் இஸ்ரவேலை 20 வருடங்கள் நியாயம் விசாரித்தான்.

நியாயாதிபதிகள் 15:9-20 பரிசுத்த பைபிள் (TAERV)

பின்பு பெலிஸ்தியர் யூதாவின் தேசத்திற்குச் சென்று, லேகி என்னுமிடத்திற்கருகில் தங்கினார்கள். அவர்களின் சேனையும் அங்கேயே தங்கிப் போருக்குத் தயாரானது. யூதா கோத்திரத்தினர் அவர்களிடம், “பெலிஸ்தியராகிய நீங்கள் ஏன் எங்களோடு போரிட வந்துள்ளீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு பெலிஸ்தியர், “நாங்கள் சிம்சோனைக் கைது செய்ய வந்துள்ளோம். எங்கள் ஜனங்களுக் கெதிராக அவன் செய்த செயல்களுக்கு அவனைத் தண்டிக்க விரும்புகிறோம்” என்றனர். பின்பு 3,000 யூதா கோத்திரத்தினர் சேர்ந்து ஏத்தாம் பாறைக்கு அருகில் இருந்த குகைக்கு சிம்சோனிடம் சென்றனர். அவர்கள், “நீ எங்களுக்கு என்ன செய்தாய் என்பதை அறிவாயா? பெலிஸ்தியர் நம்மை ஆட்சி வலிமை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாதா?” என்று கேட்டனர். அதற்கு சிம்சோன், “அவர்கள் எனக்குத் தீங்கு செய்ததால் அவர்களைத் தண்டித்தேன்” என்றான். பின்பு அவர்கள், “உன்னைக் கட்டி, பெலிஸ்தியரிடம் கொடுப்பதற்காக வந்துள்ளோம்” என்றனர். சிம்சோன் யூதா ஜனங்களிடம், “நீங்களாகவே என்னை காயப்படுத்தமாட்டீர்கள் என்று எனக்கு வாக்குக் கொடுங்கள்” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “அதற்கு நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். உன்னைக் கட்டி பெலிஸ்தியரிடம் நாங்கள் கொடுப்போமேயன்றி, உன்னைக் கொல்லமாட்டோம்” என்றனர். அவ்வாறே அவர்கள் அவனை இரண்டு புதிய கயிறுகளால் கட்டி, குகைக்கு வெளியே கொண்டு வந்தனர். லேகி என்னுமிடத்திற்குச் சிம்சோன் வந்தபோது, பெலிஸ்தியர்கள் அங்கு வந்தனர். அவர்கள் மகிழ்ச்சியால் துள்ளினார்கள். அப்போது கர்த்தருடைய ஆவியானவர் வல்லமையோடு சிம்சோன் மீது வந்தார். சிம்சோன் கயிறுகளை அறுத்தான். அந்த கயிறுகள் எரிந்துபோன நூலைப் போல காணப்பட்டன. உருகின கயிறுகள் போல அவன் கரங்களிலிருந்து அவை நழுவின. அவ்விடத்தில் மரித்த ஒரு கழுதையின் தாடையெலும்பு அவனுக்குக் கிடைத்தது. அத்தாடையெலும்பால் அவன் 1,000 பெலிஸ்தியர்களைக் கொன்றான். பின்பு சிம்சோன், “ஒரு கழுதையின் தாடையெலும்பால் 1,000 பேரைக் கொன்றேன்! கழுதையின் தாடையெலும்பால் ஒன்றின் மேலொன்றாக பெரும் குவியலாக குவித்தேன்” என்றான். இவ்வாறு சொல்லி அத்தாடையெலும்பை கீழே எறிந்தான். அந்த இடம் அதனால் ராமாத்லேகி என்று அழைக்கப்பட்டது. சிம்சோன் மிகவும் தாகமாயிருந்தான். அவன் கர்த்தரை நோக்கி, “நான் உமது ஊழியன், நீர் எனக்குப் பெரும் வெற்றியைத் தந்தீர். நான் தாகத்தால் மரிக்கும்படி தயவு செய்துவிடாதிரும். விருத்தசேதனம் இல்லாத மனிதர்கள் என்னைப் பிடிக்க அனுமதியாதிரும்” என்று அழுது முறையிட்டான். லேகியின் தரையில் ஒரு துவாரம் இருந்தது. தேவன் அந்தத் துவாரத்தின் வழி வெடித்து தண்ணீர் வரும்படியாகச் செய்தார். சிம்சோன் அந்தத் தண்ணீரைக் குடித்து மறுபடியும் வலிமைபெற்றான். அந்த நீரூற்றுக்கு எந்நக்கோரி என்று பெயரிட்டான். அது இன்னும் லேகி நகரில் உள்ளது. இவ்வாறு சிம்சோன் இஸ்ரவேலருக்கு இருபது ஆண்டுகள் நியாயாதிபதியாக இருந்தான். இது பெலிஸ்தியரின் காலத்தில் நடந்தது.