நியாயாதிபதிகள் 6:1-15

நியாயாதிபதிகள் 6:1-15 TCV

இஸ்ரயேலர் திரும்பவும் யெகோவாவின் பார்வையில் தீமையானவற்றைச் செய்தார்கள். அவர் அவர்களை ஏழு வருடங்கள் மீதியானியர் கையில் ஒப்புக்கொடுத்தார். மீதியானியரின் வலிமையினால் இஸ்ரயேலுக்கெதிரான ஒடுக்குதல் மிகுதியாய் இருந்தது. அதனால் இஸ்ரயேலர் மலைகளின் வெடிப்புகளிலும், குகைகளிலும், அரண்களிலும் தங்களுக்கென கோட்டைகளை அமைத்துக்கொண்டனர். இஸ்ரயேலர் பயிரிடும் போதெல்லாம் மீதியானியரும், அமலேக்கியரும் மற்றும் கிழக்குத்திசை இனமக்கள் எல்லோரும் நாட்டிற்குள் படையெடுத்தார்கள். அங்கே அவர்கள் முகாமிட்டு பயிர்களை காசாவரை அழித்தனர். இஸ்ரயேலருக்கோ செம்மறியாடுகள், கால்நடைகள், கழுதைகள் உட்பட உயிர்வாழும் எவற்றையும் விட்டுவைக்கவில்லை. தங்களிடமுள்ள வளர்ப்பு மிருகங்களோடும், கூடாரங்களோடும், வெட்டுக்கிளி கூட்டங்கள்போல் வந்தார்கள். அந்த மனிதர்களையும், ஒட்டகங்களையும் எண்ண முடியாதிருந்தது. அவர்கள் நாட்டை சூறையாடி அழிக்கும்படி அதன்மேல் படையெடுத்தார்கள். இவ்வாறு மீதியானியர் இஸ்ரயேலரை மிகவும் ஏழ்மையாக்கினார்கள். இதனால் இஸ்ரயேலர் தங்களுக்கு உதவிசெய்யும்படி கேட்டு யெகோவாவிடம் அழுதார்கள். மீதியானியரின் கொடுமையால் இஸ்ரயேலர் யெகோவாவிடம் அழுதபோது, அவர் ஒரு இறைவாக்கினனை அனுப்பினார். அவன் அவர்களிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: நான் உங்களை அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து கொண்டுவந்தேன். அத்துடன் எகிப்தியரின் வல்லமையிலிருந்தும், ஒடுக்குபவர்கள் எல்லோரினது கையினின்றும் நானே உங்களைப் பிரித்தெடுத்தேன். அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு அவர்களின் நாட்டை உங்களுக்குத் தந்தேன். நான் உங்களிடம், ‘நானே யெகோவா, உங்கள் இறைவனாகிய யெகோவா. இப்பொழுது நீங்கள் வாழும் நாட்டிலுள்ள எமோரியரின் தெய்வங்களை வணங்கவேண்டாம்’ என உங்களுக்குச் சொல்லியிருந்தேன். ஆனால் நீங்களோ எனக்குச் செவிகொடுக்கவில்லை” என்றான். அதற்கு பின்பு யெகோவாவின் தூதனானவர் வந்து அபியேஸ்ரியனான யோவாசிற்கு சொந்தமான ஒப்ராவிலிருக்கும் கர்வாலி மரத்திற்குக்கீழ் உட்கார்ந்திருந்தார். அப்பொழுது அவனுடைய மகன் கிதியோன், மீதியானியருக்குத் தெரியாமல் திராட்சை இரச ஆலையில் கோதுமை அடித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது யெகோவாவின் தூதனானவர் கிதியோனின் முன்தோன்றி, “வலிமைமிக்க வீரனே! யெகோவா உன்னுடன் இருக்கிறார்” என்றார். அதற்குக் கிதியோன், “ஐயா, யெகோவா எங்களோடிருந்தால் ஏன் எங்களுக்கு இவையெல்லாம் சம்பவிக்கின்றன? எகிப்தியரின் கையினின்று யெகோவா எங்களை விடுவிக்கவில்லையா! என்று எங்கள் முற்பிதாக்கள் கூறிய அந்த அதிசயங்கள் எங்கே? இப்பொழுதோ யெகோவா எங்களைக் கைவிட்டு மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்து விட்டாரே!” என்றான். யெகோவா கிதியோனைத் திரும்பிப்பார்த்து, “உனக்கிருக்கும் பெலத்துடன் நீ போய் இஸ்ரயேல் மக்களை மீதியானியர் கையினின்று காப்பாற்று. உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா!” என்றார். அதற்கு கிதியோன், “யெகோவாவே! மனாசே கோத்திரத்தில் எனது வம்சம் வலுக்குறைந்தது; என் குடும்பத்திலும் நானே சிறியவனாயிருக்கிறேன். இஸ்ரயேலரைக் காப்பாற்ற எப்படி என்னால் முடியும்?” என்று கேட்டான்.