நியாயாதிபதிகள் 6:1-15
நியாயாதிபதிகள் 6:1-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இஸ்ரயேலர் திரும்பவும் யெகோவாவின் பார்வையில் தீமையானவற்றைச் செய்தார்கள். அவர் அவர்களை ஏழு வருடங்கள் மீதியானியர் கையில் ஒப்புக்கொடுத்தார். மீதியானியரின் வலிமையினால் இஸ்ரயேலுக்கெதிரான ஒடுக்குதல் மிகுதியாய் இருந்தது. அதனால் இஸ்ரயேலர் மலைகளின் வெடிப்புகளிலும், குகைகளிலும், அரண்களிலும் தங்களுக்கென கோட்டைகளை அமைத்துக்கொண்டனர். இஸ்ரயேலர் பயிரிடும் போதெல்லாம் மீதியானியரும், அமலேக்கியரும் மற்றும் கிழக்குத்திசை இனமக்கள் எல்லோரும் நாட்டிற்குள் படையெடுத்தார்கள். அங்கே அவர்கள் முகாமிட்டு பயிர்களை காசாவரை அழித்தனர். இஸ்ரயேலருக்கோ செம்மறியாடுகள், கால்நடைகள், கழுதைகள் உட்பட உயிர்வாழும் எவற்றையும் விட்டுவைக்கவில்லை. தங்களிடமுள்ள வளர்ப்பு மிருகங்களோடும், கூடாரங்களோடும், வெட்டுக்கிளி கூட்டங்கள்போல் வந்தார்கள். அந்த மனிதர்களையும், ஒட்டகங்களையும் எண்ண முடியாதிருந்தது. அவர்கள் நாட்டை சூறையாடி அழிக்கும்படி அதன்மேல் படையெடுத்தார்கள். இவ்வாறு மீதியானியர் இஸ்ரயேலரை மிகவும் ஏழ்மையாக்கினார்கள். இதனால் இஸ்ரயேலர் தங்களுக்கு உதவிசெய்யும்படி கேட்டு யெகோவாவிடம் அழுதார்கள். மீதியானியரின் கொடுமையால் இஸ்ரயேலர் யெகோவாவிடம் அழுதபோது, அவர் ஒரு இறைவாக்கினனை அனுப்பினார். அவன் அவர்களிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: நான் உங்களை அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து கொண்டுவந்தேன். அத்துடன் எகிப்தியரின் வல்லமையிலிருந்தும், ஒடுக்குபவர்கள் எல்லோரினது கையினின்றும் நானே உங்களைப் பிரித்தெடுத்தேன். அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு அவர்களின் நாட்டை உங்களுக்குத் தந்தேன். நான் உங்களிடம், ‘நானே யெகோவா, உங்கள் இறைவனாகிய யெகோவா. இப்பொழுது நீங்கள் வாழும் நாட்டிலுள்ள எமோரியரின் தெய்வங்களை வணங்கவேண்டாம்’ என உங்களுக்குச் சொல்லியிருந்தேன். ஆனால் நீங்களோ எனக்குச் செவிகொடுக்கவில்லை” என்றான். அதற்கு பின்பு யெகோவாவின் தூதனானவர் வந்து அபியேஸ்ரியனான யோவாசிற்கு சொந்தமான ஒப்ராவிலிருக்கும் கர்வாலி மரத்திற்குக்கீழ் உட்கார்ந்திருந்தார். அப்பொழுது அவனுடைய மகன் கிதியோன், மீதியானியருக்குத் தெரியாமல் திராட்சை இரச ஆலையில் கோதுமை அடித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது யெகோவாவின் தூதனானவர் கிதியோனின் முன்தோன்றி, “வலிமைமிக்க வீரனே! யெகோவா உன்னுடன் இருக்கிறார்” என்றார். அதற்குக் கிதியோன், “ஐயா, யெகோவா எங்களோடிருந்தால் ஏன் எங்களுக்கு இவையெல்லாம் சம்பவிக்கின்றன? எகிப்தியரின் கையினின்று யெகோவா எங்களை விடுவிக்கவில்லையா! என்று எங்கள் முற்பிதாக்கள் கூறிய அந்த அதிசயங்கள் எங்கே? இப்பொழுதோ யெகோவா எங்களைக் கைவிட்டு மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்து விட்டாரே!” என்றான். யெகோவா கிதியோனைத் திரும்பிப்பார்த்து, “உனக்கிருக்கும் பெலத்துடன் நீ போய் இஸ்ரயேல் மக்களை மீதியானியர் கையினின்று காப்பாற்று. உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா!” என்றார். அதற்கு கிதியோன், “யெகோவாவே! மனாசே கோத்திரத்தில் எனது வம்சம் வலுக்குறைந்தது; என் குடும்பத்திலும் நானே சிறியவனாயிருக்கிறேன். இஸ்ரயேலரைக் காப்பாற்ற எப்படி என்னால் முடியும்?” என்று கேட்டான்.
நியாயாதிபதிகள் 6:1-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்னும் இஸ்ரவேல் மக்கள் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானதைச் செய்தார்கள்; அப்பொழுது யெகோவா அவர்களை ஏழு வருடங்கள் மீதியானியர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார். மீதியானியர்களின் கை இஸ்ரவேலின்மேல் பெலமாக இருந்தபடியால், இஸ்ரவேல் மக்கள் மீதியானியர்களினால் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் பாதுகாப்பான இடங்களையும் அடைக்கலங்களாக்கிக்கொண்டார்கள். இஸ்ரவேலர்கள் விதை விதைத்திருக்கும்போது, மீதியானியர்களும் அமலேக்கியர்களும் கிழக்குப்பகுதி மக்களும் அவர்களுக்கு எதிராக எழுந்து வந்து; அவர்களுக்கு எதிரே முகாமிட்டு, காசாவின் எல்லைவரை நிலத்தின் விளைச்சலைக் கெடுத்து, இஸ்ரவேலிலே ஆகாரத்தையும், ஆடுமாடுகள் கழுதைகளையும்கூட வைக்காமல் போவார்கள். அவர்கள் தங்களுடைய மிருகஜீவன்களோடும், தங்களுடைய கூடாரங்களோடும், வெட்டுக்கிளிகளைப்போல திரளாக வருவார்கள்; அவர்களும் அவர்களுடைய ஒட்டகங்களும் எண்ணமுடியாததாக இருக்கும்; இப்படியாக தேசத்தைக் கெடுத்துவிட அதிலே வருவார்கள். இப்படியாக மீதியானியர்களாலே இஸ்ரவேலர்கள் மிகவும் பெலவீனப்பட்டார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி முறையிட்டார்கள். இஸ்ரவேல் மக்கள் மீதியானியர்களினாலே யெகோவாவை நோக்கி முறையிட்டபோது, யெகோவா ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்பினார்; அவன் அவர்களை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நான் உங்களை எகிப்திலிருந்து வரவும், அடிமையாக இருந்த வீட்டிலிருந்து புறப்படவும் செய்து, எகிப்தியர்கள் கைகளிலிருந்தும், உங்களை ஒடுக்கின எல்லோருடைய கைகளிலிருந்தும் உங்களை இரட்சித்து, அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, அவர்கள் தேசத்தை உங்களுக்குக் கொடுத்து, நான் உங்கள் தேவனாகிய யெகோவா என்றும், நீங்கள் குடியிருக்கும் அவர்கள் தேசத்திலுள்ள எமோரியர்களுடைய தெய்வங்களுக்குப் பயப்படாமல் இருங்கள் என்றும், உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ என்னுடைய சொல்லைக் கேட்காமல் போனீர்கள் என்கிறார் என்று சொன்னான். அதற்குப்பின்பு யெகோவாவுடைய தூதனானவர் வந்து, அபியேஸ்ரியனான யோவாசின் ஊராகிய ஒப்ராவிலிருக்கும் ஒரு கர்வாலிமரத்தின்கீழ் உட்கார்ந்தார்; அப்பொழுது அவனுடைய மகன் கிதியோன் கோதுமையை மீதியானியர்களின் கைக்குத் தப்புவிக்க, ஆலைக்கு அருகில் அதைப் போரடித்தான். யெகோவாவுடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பெலசாலியே யெகோவா உன்னோடு இருக்கிறார் என்றார். அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவரே, யெகோவா எங்களோடு இருந்தால், இவைகளெல்லாம் எங்களுக்கு ஏன் சம்பவித்தது? யெகோவா எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்களுடைய பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது யெகோவா எங்களைக் கைவிட்டு, மீதியானியர்களின் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான். அப்பொழுது யெகோவா அவனை நோக்கிப் பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பெலத்தோடு போ; நீ இஸ்ரவேலை மீதியானியர்களின் கைக்கு விலக்கிக் காப்பாற்றுவாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார். அதற்கு அவன்: ஆ என்னுடைய ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே காப்பாற்றுவேன்; இதோ, மனாசேயில் என்னுடைய குடும்பம் மிகவும் எளியது; என்னுடைய தகப்பன் வீட்டில் நான் எல்லோரிலும் சிறியவன் என்றான்.
நியாயாதிபதிகள் 6:1-15 பரிசுத்த பைபிள் (TAERV)
தீயவை என்று கர்த்தர் கூறிய காரியங்களை மீண்டும் இஸ்ரவேலர் செய்தனர். இஸ்ரவேலரை மீதியானியர் 7 ஆண்டுகள் தோற்கடிப்பதற்கு கர்த்தர் அனுமதித்தார். மீதியானியர் மிக வல்லமையுடையவர்களாய் இஸ்ரவேலரைக் கொடுமைப்படுத்தினார்கள். எனவே இஸ்ரவேலர், மலைகளில் ஒளிந்துகொள்வதற்கான இடங்கள் பலவற்றை அமைத்தனர். பார்க்க இயலாத இடங்களிலும், குகைகளிலும் இஸ்ரவேலர் உணவுப்பொருட்களை மறைத்து வைத்தனர். மீதியானியரும், கிழக்கிலுள்ள அமலேக்கியரும் வந்து அவர்கள் பயிர்களை அழித்ததால் இஸ்ரவேலர் அவ்வாறு செய்தனர். அவர்கள் தேசத்தில் முகாமிட்டுத் தங்கி, இஸ்ரவேலர் பயிரிட்ட தானியங்களை அழித்தனர். காசா நகரம் வரைக்கும் உள்ள நிலங்களில் இஸ்ரவேலர் பயிரிட்ட பயிர்களை அந்த ஜனங்கள் பாழாக்கினர். இஸ்ரவேலர் உண்பதற்கு அவர்கள் ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. அவர்களது ஆடுகள், பசுக்கள், கழுதைகள் ஆகியவற்றையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. மீதியானின் ஜனங்கள் வந்து தேசத்தில் முகாமிட்டுத் தங்கினார்கள். அவர்கள் குடும்பத்தினரையும் அவர்களின் விலங்குகளையும் அழைத்து வந்தனர். வெட்டுக்கிளிகளின் கூட்டத்தைப் போல் அவர்கள் மிகுதியாக வந்தனர். எண்ணக் கூடாத அளவிற்கு ஜனங்களையும் ஒட்டகங்களையும் பார்க்க முடிந்தது. அந்த ஜனங்கள் எல்லோரும் தேசத்திற்குள் நுழைந்து அதனைப் பாழாக்கினர். மீதியானியரின் வருகையால் இஸ்ரவேலர் மிக ஏழைகளாயினர். எனவே இஸ்ரவேலர் கர்த்தரிடம் உதவிக்காக வேண்டினார்கள். மீதியானியர் எல்லாத் தீயகாரியங்களையும் செய்தனர். எனவே இஸ்ரவேலர் கர்த்தரிடம் உதவிக்காக வேண்டினார்கள். எனவே கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்பினார். அத்தீர்க்கதரிசி இஸ்ரவேலரிடம், “இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் கூறுவது இதுவே: ‘நீங்கள் எகிப்தில் அடிமைகளாயிருந்தீர்கள். நான் உங்களை விடுவித்து அந்தத் தேசத்திலிருந்து அழைத்து வந்தேன். நான் எகிப்தின் பலமுள்ள ஜனங்களிடமிருந்து உங்களை மீட்டேன். பின்னர் கானானியர் உங்களைத் துன்புறுத்தினார்கள். நான் மீண்டும் உங்களைக் காப்பாற்றினேன். அத்தேசத்தில் இருந்தே அவர்களைப் போகும்படி செய்தேன். அவர்கள் தேசத்தை நான் உங்களுக்குக் கொடுத்தேன்.’ பின் உங்களிடம், ‘நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், எமோரியரின் தேசத்தில் வாழ்வீர்கள். ஆனால் அவர்களின் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ளாதீர்கள்’ என்றேன். ஆனால் நீங்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை” என்றார். அப்போது கர்த்தருடைய தூதன் கிதியோன் என்னும் பெயருள்ளவனிடம் வந்தான். ஓப்ரா என்னுமிடத்தில் ஒரு கர்வாலி மரத்தின் கீழே கர்த்தருடைய தூதன் வந்து உட்கார்ந்தான். அந்த கர்வாலி மரம் யோவாஸ் என்பவனுக்குச் சொந்தமாயிருந்தது. யோவாஸ் அபியேசேரின் குடும்பத்தைச் சேர்ந்தவன். யோவாஸ் என்பவன் கிதியோனின் தந்தை. திராட்சை ஆலையில் கிதியோன் கோதுமையை அடித்துக்கொண்டிருந்தான். கர்த்தருடைய தூதன், கிதியோனுக்கருகே உட்கார்ந்தான். மீதியானியர் கோதுமையைப் பார்த்துவிடக் கூடாதென்று கிதியோன் மறைத்துவைக்க முயன்றான். கர்த்தருடைய தூதன் கிதியோனுக்குக் காட்சி தந்து, அவனிடம், “பெரும் வீரனே! கர்த்தர் உன்னோடிருக்கிறார்!” என்றான். அப்போது கிதியோன், “கர்த்தர் எங்களோடிருந்தால் எங்களுக்கு ஏன் இத்தனைத் துன்பங்கள் நேருகின்றன? எங்கள் முற்பிதாக்களுக்கு அவர் அற்புதமானக் காரியங்களைச் செய்தார் என்று நாங்கள் கேள்விப்பட்டோம். கர்த்தர், தங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்ததாக எங்கள் முற்பிதாக்கள் கூறினார்கள். ஆனால் கர்த்தர் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார். மீதியானியர் எங்களைத் தோற்கடிப்பதற்கு கர்த்தர் அனுமதித்தார்” என்றான். கர்த்தர் கிதியோனைப் பார்த்து, “உனது வல்லமையைப் பயன்படுத்து, மீதியானியரிடமிருந்து இஸ்ரவேலரைக் காப்பாற்று. அவர்களைக் காப்பாற்ற நான் உன்னை அனுப்புகிறேன்!” என்றார். ஆனால் கிதியோன் அவருக்குப் பதிலாக, “என்னை மன்னித்துவிடுங்கள் ஐயா, நான் எவ்வாறு இஸ்ரவேலரை காப்பாற்றுவேன். மனாசே கோத்திரத்தில் எங்கள் குடும்பமே மிகவும் எளியது. எங்கள் குடும்பத்தில் நான் இளையவன்” என்றான்.
நியாயாதிபதிகள் 6:1-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்னும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார். மீதியானியரின் கை இஸ்ரவேலின்மேல் பலத்துக்கொண்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் அரணான ஸ்தலங்களையும் அடைக்கலங்களாக்கிக்கொண்டார்கள். இஸ்ரவேலர் விதை விதைத்திருக்கும்போது, மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரரும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பி வந்து; அவர்களுக்கு எதிரே பாளயமிறங்கி, காசாவின் எல்லைமட்டும் நிலத்தின் விளைச்சலைக் கெடுத்து, இஸ்ரவேலிலே ஆகாரத்தையாகிலும், ஆடுமாடுகள் கழுதைகளையாகிலும் வைக்காதே போவார்கள். அவர்கள் தங்கள் மிருகஜீவன்களோடும், தங்கள் கூடாரங்களோடும், வெட்டுக்கிளிகளைப்போல் திரளாய் வருவார்கள்; அவர்களும் அவர்கள் ஒட்டகங்களும் எண்ணிமுடியாததாயிருக்கும்; இந்தப்பிரகாரமாக தேசத்தைக் கெடுத்துவிட அதிலே வருவார்கள். இப்படி மீதியானியராலே இஸ்ரவேலர் மிகவும் சிறுமைப்பட்டார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள். இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் கர்த்தரை நோக்கி முறையிட்டபோது, கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடத்திற்கு அனுப்பினார்; அவன் அவர்களை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் உங்களை எகிப்திலிருந்து வரவும், அடிமைத்தன வீட்டிலிருந்து புறப்படவும் செய்து, எகிப்தியர் கையினின்றும், உங்களை ஒடுக்கின யாவருடைய கையினின்றும் உங்களை இரட்சித்து, அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, அவர்கள் தேசத்தை உங்களுக்குக் கொடுத்து, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றும், நீங்கள் குடியிருக்கும் அவர்கள் தேசத்திலுள்ள எமோரியருடைய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள் என்றும், உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ என் சொல்லைக் கேளாதேபோனீர்கள் என்கிறார் என்று சொன்னான். அதற்குப்பின்பு கர்த்தருடைய தூதனானவர் வந்து, அபியேஸ்ரியனான யோவாசின் ஊராகிய ஒப்ராவிலிருக்கும் ஒரு கர்வாலிமரத்தின்கீழ் உட்கார்ந்தார்; அப்பொழுது அவனுடைய குமாரன் கிதியோன் கோதுமையை மீதியானியரின் கைக்குத் தப்புவிக்கிறதற்காக, ஆலைக்குச் சமீபமாய் அதைப் போரடித்தான். கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான். அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப் பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார். அதற்கு அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே இரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்.