தீயவை என்று கர்த்தர் கூறிய காரியங்களை மீண்டும் இஸ்ரவேலர் செய்தனர். இஸ்ரவேலரை மீதியானியர் 7 ஆண்டுகள் தோற்கடிப்பதற்கு கர்த்தர் அனுமதித்தார். மீதியானியர் மிக வல்லமையுடையவர்களாய் இஸ்ரவேலரைக் கொடுமைப்படுத்தினார்கள். எனவே இஸ்ரவேலர், மலைகளில் ஒளிந்துகொள்வதற்கான இடங்கள் பலவற்றை அமைத்தனர். பார்க்க இயலாத இடங்களிலும், குகைகளிலும் இஸ்ரவேலர் உணவுப்பொருட்களை மறைத்து வைத்தனர். மீதியானியரும், கிழக்கிலுள்ள அமலேக்கியரும் வந்து அவர்கள் பயிர்களை அழித்ததால் இஸ்ரவேலர் அவ்வாறு செய்தனர். அவர்கள் தேசத்தில் முகாமிட்டுத் தங்கி, இஸ்ரவேலர் பயிரிட்ட தானியங்களை அழித்தனர். காசா நகரம் வரைக்கும் உள்ள நிலங்களில் இஸ்ரவேலர் பயிரிட்ட பயிர்களை அந்த ஜனங்கள் பாழாக்கினர். இஸ்ரவேலர் உண்பதற்கு அவர்கள் ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. அவர்களது ஆடுகள், பசுக்கள், கழுதைகள் ஆகியவற்றையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. மீதியானின் ஜனங்கள் வந்து தேசத்தில் முகாமிட்டுத் தங்கினார்கள். அவர்கள் குடும்பத்தினரையும் அவர்களின் விலங்குகளையும் அழைத்து வந்தனர். வெட்டுக்கிளிகளின் கூட்டத்தைப் போல் அவர்கள் மிகுதியாக வந்தனர். எண்ணக் கூடாத அளவிற்கு ஜனங்களையும் ஒட்டகங்களையும் பார்க்க முடிந்தது. அந்த ஜனங்கள் எல்லோரும் தேசத்திற்குள் நுழைந்து அதனைப் பாழாக்கினர். மீதியானியரின் வருகையால் இஸ்ரவேலர் மிக ஏழைகளாயினர். எனவே இஸ்ரவேலர் கர்த்தரிடம் உதவிக்காக வேண்டினார்கள். மீதியானியர் எல்லாத் தீயகாரியங்களையும் செய்தனர். எனவே இஸ்ரவேலர் கர்த்தரிடம் உதவிக்காக வேண்டினார்கள். எனவே கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்பினார். அத்தீர்க்கதரிசி இஸ்ரவேலரிடம், “இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் கூறுவது இதுவே: ‘நீங்கள் எகிப்தில் அடிமைகளாயிருந்தீர்கள். நான் உங்களை விடுவித்து அந்தத் தேசத்திலிருந்து அழைத்து வந்தேன். நான் எகிப்தின் பலமுள்ள ஜனங்களிடமிருந்து உங்களை மீட்டேன். பின்னர் கானானியர் உங்களைத் துன்புறுத்தினார்கள். நான் மீண்டும் உங்களைக் காப்பாற்றினேன். அத்தேசத்தில் இருந்தே அவர்களைப் போகும்படி செய்தேன். அவர்கள் தேசத்தை நான் உங்களுக்குக் கொடுத்தேன்.’ பின் உங்களிடம், ‘நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், எமோரியரின் தேசத்தில் வாழ்வீர்கள். ஆனால் அவர்களின் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ளாதீர்கள்’ என்றேன். ஆனால் நீங்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை” என்றார். அப்போது கர்த்தருடைய தூதன் கிதியோன் என்னும் பெயருள்ளவனிடம் வந்தான். ஓப்ரா என்னுமிடத்தில் ஒரு கர்வாலி மரத்தின் கீழே கர்த்தருடைய தூதன் வந்து உட்கார்ந்தான். அந்த கர்வாலி மரம் யோவாஸ் என்பவனுக்குச் சொந்தமாயிருந்தது. யோவாஸ் அபியேசேரின் குடும்பத்தைச் சேர்ந்தவன். யோவாஸ் என்பவன் கிதியோனின் தந்தை. திராட்சை ஆலையில் கிதியோன் கோதுமையை அடித்துக்கொண்டிருந்தான். கர்த்தருடைய தூதன், கிதியோனுக்கருகே உட்கார்ந்தான். மீதியானியர் கோதுமையைப் பார்த்துவிடக் கூடாதென்று கிதியோன் மறைத்துவைக்க முயன்றான். கர்த்தருடைய தூதன் கிதியோனுக்குக் காட்சி தந்து, அவனிடம், “பெரும் வீரனே! கர்த்தர் உன்னோடிருக்கிறார்!” என்றான். அப்போது கிதியோன், “கர்த்தர் எங்களோடிருந்தால் எங்களுக்கு ஏன் இத்தனைத் துன்பங்கள் நேருகின்றன? எங்கள் முற்பிதாக்களுக்கு அவர் அற்புதமானக் காரியங்களைச் செய்தார் என்று நாங்கள் கேள்விப்பட்டோம். கர்த்தர், தங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்ததாக எங்கள் முற்பிதாக்கள் கூறினார்கள். ஆனால் கர்த்தர் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார். மீதியானியர் எங்களைத் தோற்கடிப்பதற்கு கர்த்தர் அனுமதித்தார்” என்றான். கர்த்தர் கிதியோனைப் பார்த்து, “உனது வல்லமையைப் பயன்படுத்து, மீதியானியரிடமிருந்து இஸ்ரவேலரைக் காப்பாற்று. அவர்களைக் காப்பாற்ற நான் உன்னை அனுப்புகிறேன்!” என்றார். ஆனால் கிதியோன் அவருக்குப் பதிலாக, “என்னை மன்னித்துவிடுங்கள் ஐயா, நான் எவ்வாறு இஸ்ரவேலரை காப்பாற்றுவேன். மனாசே கோத்திரத்தில் எங்கள் குடும்பமே மிகவும் எளியது. எங்கள் குடும்பத்தில் நான் இளையவன்” என்றான்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: நியாயாதிபதிகளின் புத்தகம் 6:1-15
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்