எரேமியா 11:1-18

எரேமியா 11:1-18 TCV

யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வந்த வார்த்தை இதுவே. “இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளைக் கேட்டு அவைகளை யூதா நாட்டு மக்களுக்கும், எருசலேமில் குடியிருப்பவர்களுக்கும் சொல். இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே என்று அவர்களுக்குச் சொல். ‘இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்குக் கீழ்படியாத மனிதன் சபிக்கப்பட்டவன். நான் உங்கள் முற்பிதாக்களை இரும்புச் சூளையாகிய எகிப்திலிருந்து கொண்டுவந்தபோது, இந்த நிபந்தனைகளையே அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். எனக்குக் கீழ்ப்படிந்து, நான் உங்களுக்குக் கட்டளையிடுகிற எல்லாவற்றையும் செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள்; நான் உங்கள் இறைவனாயிருப்பேன். அப்பொழுது பாலும் தேனும் நிரம்பி வழிகிற நாட்டை உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பதாக நான் ஆணையிட்ட உறுதிமொழியை நிறைவேற்றுவேன் என்று சொல்லியிருந்தேன்.’ அந்நாட்டையே இன்று நீங்கள் உரிமையாக்கியிருக்கிறீர்கள்” என்றார். அதற்கு நான், “ஆமென் யெகோவாவே” என்றேன். அப்பொழுது யெகோவா என்னிடம், “நான் கூறும் இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் வீதிகளிலும் போய் பிரசித்தப்படுத்து. அதாவது இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளைக் கவனித்துக் கேட்டு அவைகளைப் பின்பற்றுங்கள். நான் எகிப்திலிருந்து உங்கள் முற்பிதாக்களைக் கொண்டுவந்த நாளிலிருந்து இன்றுவரை எனக்குக் கீழ்ப்படியுங்கள் என்று திரும்பத்திரும்ப எச்சரித்திருந்தேன். ஆனால் அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவுமில்லை; அதைக் கவனிக்கவுமில்லை. அதற்குப் பதிலாக தங்கள் பொல்லாத இருதயங்களின் பிடிவாதத்தின்படி நடந்தார்கள். அவர்கள் அதைக் கைக்கொள்ளாததினால், நான் அவர்களுக்குக் கைக்கொள்ளும்படி கட்டளையிட்டிருந்த இந்த உடன்படிக்கையின் சாபங்களை அவர்கள்மேல் வரப்பண்ணினேன்.” மேலும் யெகோவா என்னிடம், “யூதாவின் மக்கள் மத்தியிலும், எருசலேம் குடிகளின் மத்தியிலும் ஒரு சதித்திட்டம் உண்டாயிருக்கிறது. அவர்களோ, என் வார்த்தைகளைக் கேட்க மறுத்த தங்கள் முற்பிதாக்களின் பாவங்களுக்கே திரும்பியிருக்கிறார்கள். வேறு தெய்வங்களுக்குப் பணிசெய்ய அவைகளைப் பின்பற்றினார்கள். இஸ்ரயேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் நான் அவர்களுடைய முற்பிதாக்களுடன் செய்த உடன்படிக்கையை மீறிவிட்டார்கள். ஆகையால் யெகோவா சொல்வது இதுவே: ‘அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாத பேராபத்தை அவர்கள்மேல் கொண்டுவருவேன். அவர்கள் என்னை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், அவர்களுக்கு நான் செவிகொடுக்கமாட்டேன். அப்பொழுது யூதாவின் பட்டணங்களும், எருசலேமின் மக்களும் தாங்கள் தூபங்காட்டும் தெய்வங்களிடத்திற்குப் போய், அவைகளை நோக்கி அழுது கூப்பிடுவார்கள். ஆனால் பேராபத்து அவர்கள்மேல் வரும்போது, அந்த தெய்வங்கள் அவர்களுக்கு உதவி செய்யவேமாட்டாது. யூதாவே! உன் பட்டணங்களின் எண்ணிக்கையைப் போலவே உன் தெய்வங்களின் எண்ணிக்கையும் அதிகம். நீங்கள் அந்த வெட்கக்கேடான பாகால் தெய்வத்திற்குத் தூபங்காட்டுவதற்கு அமைத்த மேடைகள், எருசலேமின் வீதிகளின் எண்ணிக்கையைப்போல் இருக்கின்றன.’ “ஆகவே எரேமியாவே, நீ இந்த மக்களுக்காக மன்றாட வேண்டாம். அவர்களுக்காக நீ வேண்டுதலோ, விண்ணப்பமோ செய்யவேண்டாம். ஏனெனில், அவர்கள் தங்கள் துன்ப வேளையில் என்னை நோக்கிக் கூப்பிடும்போது நான் அவர்களுக்குச் செவிகொடுக்கமாட்டேன். “என் அன்புக்குரிய மக்கள் என் ஆலயத்திற்குள் ஏன் வந்திருக்கிறார்கள்? அவர்கள், அநேகருடன் தங்கள் தீய திட்டங்களைத் தீட்டுகிறார்களே! பலியிடப்பட்ட மாமிசம் தண்டனையிலிருந்து உங்களைத் தப்புவிக்குமோ? நீங்கள் உங்களது கொடுமையில் ஈடுபடும்போது மகிழ்ச்சியடைகிறீர்களோ!” அழகும், செழிப்பும், பழம் நிறைந்ததுமான ஒலிவமரம் என்று யெகோவா உங்களை அழைத்தார். ஆனால் இப்போது அவர் கடும்புயலின் இரைச்சலுடன் அதை நெருப்பினால் கொளுத்துவார். அதன் கொப்புகள் முறிக்கப்படும். உங்களை நாட்டிய சேனைகளின் யெகோவா பேராபத்தை உங்களுக்கு நியமித்திருக்கிறார். ஏனெனில், இஸ்ரயேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் தீமை செய்து, பாகாலுக்குத் தூபங்காட்டியதின் மூலம் எனக்குக் கோபமூட்டினார்கள். யெகோவா எனக்கு வெளிப்படுத்தினதால், என் பகைவர்கள் எனக்கெதிராக சதி செய்ததை நான் அறிந்துகொண்டேன். அந்த வேளையில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அவர் எனக்குக் காண்பித்தார்.