எரேமியா 11:1-18

எரேமியா 11:1-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தராலே எரேமியாவுக்கு உண்டான வசனம்; நீங்கள் கேட்டு யூதாவின் மனுஷருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் சொல்லவேண்டிய உடன்படிக்கையின் வார்த்தைகளாவன: என் சத்தத்தைக் கேட்டு, நான் உங்களுக்குக் கற்பிக்கிறபடியே எல்லாக் காரியங்களையும் செய்யுங்கள்; அப்பொழுது நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்; நான் உங்கள் பிதாக்களை இரும்புக்காளவாயாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாளிலே அவர்களுக்குக் கற்பித்த இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேளாதமனுஷன் சபிக்கப்பட்டவனென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறாரென்று அவர்களுக்குச் சொல்லு. இன்றையதினம் இருக்கிறபடி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களுக்கு இட்ட ஆணையை நான் திடப்படுத்தும்படி இப்படி ஆகும் என்றார்; அதற்கு நான் பிரதியுத்தரமாக, அப்படியே ஆகக்கடவது கர்த்தாவே என்றேன். அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: நீ யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் இந்த வார்த்தைகளையெல்லம் கூறி: இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நீங்கள் கேட்டு, அவைகளின்படியே செய்யுங்கள். நான் உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின நாள்முதல், இந்நாள்மட்டும் நான் அவர்களுக்குத் திடச்சாட்சியாய் என் சத்தத்தைக் கேளுங்களென்று ஏற்கெனவே சாட்சி விளங்கத்தக்கவிதமாய் எச்சரித்துவந்தேன். ஆனாலும் அவர்கள் கேளாமலும், தங்கள் செவியைச்சாயாமலும்போய், அவரவர் தம்தம் பொல்லாத இருதயக்கடினத்தின்படி நடந்தார்கள்; ஆதலால் நான் அவர்கள் செய்யும்படி கட்டளையிட்டதும். அவர்கள் செய்யாமற்போனதுமான இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குப் பலிக்கப்பண்ணுவேன் என்று சொல் என்றார். பின்னையும் கர்த்தர் என்னை நோக்கி: யூதாவின் மனுஷருக்குள்ளும் எருசலேமின் குடிகளுக்குள்ளும் ஒரு கட்டுப்பாடு காணப்படுகிறது. அவர்கள் என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோமென்று அந்நிய தேவர்களைச் சேவிக்க அவைகளைப் பின்பற்றி, தங்களுடைய முன்னோர்களின் அக்கிரமங்களுக்குத் திரும்பினார்கள்; நான் தங்கள் பிதாக்களோடே பண்ணின உடன்படிக்கையை இஸ்ரவேல் குடும்பத்தாரும் யூதா குடும்பத்தாரும் மீறிப்போட்டார்கள். ஆகையினால் இதோ, அவர்கள் தப்பித்துக்கொள்ளமாட்டாத தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்; அப்பொழுது என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் அவர்களைக் கேளாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது யூதா பட்டணங்களின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் போய்த் தாங்கள் தூபங்காட்டியிருந்த தேவர்களை நோக்கிக் கூப்பிட்டும், அவைகள் அவர்களுடைய ஆபத்துக்காலத்தில் அவர்களை இரட்சிப்பதில்லை. யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும் உன் தேவர்களின் இலக்கமும் சரி; எருசலேமுடைய வீதிகளின் இலக்கமும், நீங்கள் பாகாலுக்குத் தூபங்காட்டும்படி அந்த இலச்சையான காரியத்துக்கு ஸ்தாபித்த பீடங்களின் இலக்கமும் சரி. ஆதலால் நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம்பண்ணவேண்டாம், அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம்; அவர்கள் தங்கள் ஆபத்தினிமித்தம் என்னை நோக்கிக் கூப்பிடுங்காலத்திலே நான் அவர்களைக் கேளாதிருப்பேன். துர்ச்சனரோடு மகா தீவினை செய்யும்போது, என் பிரியமானவளுக்கு என் வீட்டில் என்ன இருக்கிறது? பரிசுத்த மாம்சத்தை உன்னைவிட்டுத் தாண்டிப்போகப்பண்ணுவார்கள்; உன் பொல்லாப்பு நடக்கும்போது நீ களிகூருகிறாயே. நல்ல கனி உண்டாயிருக்கிற நேர்த்தியும் பச்சையுமான ஒலிவமரமென்னும் பேரைக் கர்த்தர் உனக்கு இட்டார்; ஆனால் மகா அமளியின் சத்தமாய் அதைச் சுற்றிலும் நெருப்பைக் கொளுத்துகிறார், அதின் கொம்புகள் முறிக்கப்பட்டது. பாகாலுக்குத் தூபங்காட்டுகிறதினாலே எனக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் தங்களுக்குக் கேடாகச் செய்த பொல்லாப்பினிமித்தம் உன்மேல் தீங்கை வரப்பண்ணுவேன் என்று உன்னை நாட்டின சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். அதைக் கர்த்தர் எனக்கு அறிவித்ததினாலே அறிந்துகொண்டேன்; அவர்களுடைய செய்கைகளை அப்பொழுது எனக்குத் தெரியக்காட்டினீர்.

எரேமியா 11:1-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வந்த வார்த்தை இதுவே. “இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளைக் கேட்டு அவைகளை யூதா நாட்டு மக்களுக்கும், எருசலேமில் குடியிருப்பவர்களுக்கும் சொல். இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே என்று அவர்களுக்குச் சொல். ‘இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்குக் கீழ்படியாத மனிதன் சபிக்கப்பட்டவன். நான் உங்கள் முற்பிதாக்களை இரும்புச் சூளையாகிய எகிப்திலிருந்து கொண்டுவந்தபோது, இந்த நிபந்தனைகளையே அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். எனக்குக் கீழ்ப்படிந்து, நான் உங்களுக்குக் கட்டளையிடுகிற எல்லாவற்றையும் செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள்; நான் உங்கள் இறைவனாயிருப்பேன். அப்பொழுது பாலும் தேனும் நிரம்பி வழிகிற நாட்டை உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பதாக நான் ஆணையிட்ட உறுதிமொழியை நிறைவேற்றுவேன் என்று சொல்லியிருந்தேன்.’ அந்நாட்டையே இன்று நீங்கள் உரிமையாக்கியிருக்கிறீர்கள்” என்றார். அதற்கு நான், “ஆமென் யெகோவாவே” என்றேன். அப்பொழுது யெகோவா என்னிடம், “நான் கூறும் இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் வீதிகளிலும் போய் பிரசித்தப்படுத்து. அதாவது இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளைக் கவனித்துக் கேட்டு அவைகளைப் பின்பற்றுங்கள். நான் எகிப்திலிருந்து உங்கள் முற்பிதாக்களைக் கொண்டுவந்த நாளிலிருந்து இன்றுவரை எனக்குக் கீழ்ப்படியுங்கள் என்று திரும்பத்திரும்ப எச்சரித்திருந்தேன். ஆனால் அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவுமில்லை; அதைக் கவனிக்கவுமில்லை. அதற்குப் பதிலாக தங்கள் பொல்லாத இருதயங்களின் பிடிவாதத்தின்படி நடந்தார்கள். அவர்கள் அதைக் கைக்கொள்ளாததினால், நான் அவர்களுக்குக் கைக்கொள்ளும்படி கட்டளையிட்டிருந்த இந்த உடன்படிக்கையின் சாபங்களை அவர்கள்மேல் வரப்பண்ணினேன்.” மேலும் யெகோவா என்னிடம், “யூதாவின் மக்கள் மத்தியிலும், எருசலேம் குடிகளின் மத்தியிலும் ஒரு சதித்திட்டம் உண்டாயிருக்கிறது. அவர்களோ, என் வார்த்தைகளைக் கேட்க மறுத்த தங்கள் முற்பிதாக்களின் பாவங்களுக்கே திரும்பியிருக்கிறார்கள். வேறு தெய்வங்களுக்குப் பணிசெய்ய அவைகளைப் பின்பற்றினார்கள். இஸ்ரயேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் நான் அவர்களுடைய முற்பிதாக்களுடன் செய்த உடன்படிக்கையை மீறிவிட்டார்கள். ஆகையால் யெகோவா சொல்வது இதுவே: ‘அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாத பேராபத்தை அவர்கள்மேல் கொண்டுவருவேன். அவர்கள் என்னை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், அவர்களுக்கு நான் செவிகொடுக்கமாட்டேன். அப்பொழுது யூதாவின் பட்டணங்களும், எருசலேமின் மக்களும் தாங்கள் தூபங்காட்டும் தெய்வங்களிடத்திற்குப் போய், அவைகளை நோக்கி அழுது கூப்பிடுவார்கள். ஆனால் பேராபத்து அவர்கள்மேல் வரும்போது, அந்த தெய்வங்கள் அவர்களுக்கு உதவி செய்யவேமாட்டாது. யூதாவே! உன் பட்டணங்களின் எண்ணிக்கையைப் போலவே உன் தெய்வங்களின் எண்ணிக்கையும் அதிகம். நீங்கள் அந்த வெட்கக்கேடான பாகால் தெய்வத்திற்குத் தூபங்காட்டுவதற்கு அமைத்த மேடைகள், எருசலேமின் வீதிகளின் எண்ணிக்கையைப்போல் இருக்கின்றன.’ “ஆகவே எரேமியாவே, நீ இந்த மக்களுக்காக மன்றாட வேண்டாம். அவர்களுக்காக நீ வேண்டுதலோ, விண்ணப்பமோ செய்யவேண்டாம். ஏனெனில், அவர்கள் தங்கள் துன்ப வேளையில் என்னை நோக்கிக் கூப்பிடும்போது நான் அவர்களுக்குச் செவிகொடுக்கமாட்டேன். “என் அன்புக்குரிய மக்கள் என் ஆலயத்திற்குள் ஏன் வந்திருக்கிறார்கள்? அவர்கள், அநேகருடன் தங்கள் தீய திட்டங்களைத் தீட்டுகிறார்களே! பலியிடப்பட்ட மாமிசம் தண்டனையிலிருந்து உங்களைத் தப்புவிக்குமோ? நீங்கள் உங்களது கொடுமையில் ஈடுபடும்போது மகிழ்ச்சியடைகிறீர்களோ!” அழகும், செழிப்பும், பழம் நிறைந்ததுமான ஒலிவமரம் என்று யெகோவா உங்களை அழைத்தார். ஆனால் இப்போது அவர் கடும்புயலின் இரைச்சலுடன் அதை நெருப்பினால் கொளுத்துவார். அதன் கொப்புகள் முறிக்கப்படும். உங்களை நாட்டிய சேனைகளின் யெகோவா பேராபத்தை உங்களுக்கு நியமித்திருக்கிறார். ஏனெனில், இஸ்ரயேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் தீமை செய்து, பாகாலுக்குத் தூபங்காட்டியதின் மூலம் எனக்குக் கோபமூட்டினார்கள். யெகோவா எனக்கு வெளிப்படுத்தினதால், என் பகைவர்கள் எனக்கெதிராக சதி செய்ததை நான் அறிந்துகொண்டேன். அந்த வேளையில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அவர் எனக்குக் காண்பித்தார்.

எரேமியா 11:1-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வசனம்: நீங்கள் கேட்டு யூதாவின் மனிதருக்கும் எருசலேமின் குடிமக்களுக்கும் சொல்லவேண்டிய உடன்படிக்கையின் வார்த்தைகளாவன: என் சத்தத்தைக் கேட்டு, நான் உங்களுக்குக் கற்பிக்கிறபடியே எல்லாக் காரியங்களையும் செய்யுங்கள்; அப்பொழுது நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்; நான் உங்கள் முற்பிதாக்களை இரும்புச் சூளையாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த நாளில் அவர்களுக்குக் கற்பித்த இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேளாத மனிதன் சபிக்கப்பட்டவனென்று, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்கிறாரென்று அவர்களுக்குச் சொல். இன்றையதினம் இருக்கிறதுபோல, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களுக்குச் சொன்ன வாக்கை நான் உறுதிப்படுத்த இப்படி ஆகும் என்றார்; அதற்கு நான் மறுமொழியாக, அப்படியே ஆகக்கடவது யெகோவாவே என்றேன். அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: நீ யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி: இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நீங்கள் கேட்டு, அவைகளின்படியே செய்யுங்கள். நான் உங்கள் முற்பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து வரவழைத்த நாள்முதல், இந்நாள்வரை நான் அவர்களுக்கு உறுதியான சாட்சியாய் என் சத்தத்தைக் கேளுங்களென்று ஏற்கனவே சாட்சி விளங்கும்விதமாக எச்சரித்துவந்தேன். ஆனாலும் அவர்கள் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும்போய், அவரவர் தம்தம் பொல்லாத இருதயக் கடினத்தின்படி நடந்தார்கள்; ஆதலால் நான் அவர்கள் செய்யும்படி கட்டளையிட்டதும், அவர்கள் செய்யாமற்போனதுமான இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குப் பலிக்கச்செய்வேன் என்று சொல் என்றார். மேலும் யெகோவா என்னை நோக்கி: யூதாவின் மனிதருக்குள்ளும் எருசலேமின் குடிமக்களுக்குள்ளும் ஒரு கட்டுப்பாடு காணப்படுகிறது. அவர்கள் என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோமென்று அந்நிய தெய்வங்களைச் சேவிக்க அவைகளைப் பின்பற்றி, தங்களுடைய முன்னோர்களின் அக்கிரமங்களுக்குத் திரும்பினார்கள்; நான் தங்கள் பிதாக்களுடன் செய்த உடன்படிக்கையை இஸ்ரவேல் குடும்பத்தாரும் யூதா குடும்பத்தாரும் மீறிப்போட்டார்கள். ஆகையினால் இதோ, அவர்கள் தப்பித்துக்கொள்ளமாட்டாத தீங்கை அவர்கள்மேல் வரச்செய்வேன்; அப்பொழுது என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் அவர்களைக் கேளாதிருப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். அப்பொழுது யூதா பட்டணங்களின் மனிதரும், எருசலேமின் குடிகளும் போய் தாங்கள் தூபங்காட்டியிருந்த தெய்வங்களை நோக்கிக் கூப்பிட்டும், அவைகள் அவர்களுடைய ஆபத்துக்காலத்தில் அவர்களை காப்பாற்றுவதில்லை. யூதாவே, உன் பட்டணங்களின் எண்ணிக்கையும் உன் தெய்வங்களின் எண்ணிக்கையும் சரி; எருசலேமுடைய வீதிகளின் எண்ணிக்கையும், நீங்கள் பாகாலுக்குத் தூபங்காட்டும்படி அந்த வெட்கமான காரியத்திற்கு ஸ்தாபித்த பீடங்களின் எண்ணிக்கையும் சரி. ஆதலால் நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் செய்யவேண்டாம், அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம்; அவர்கள் தங்கள் ஆபத்தில் என்னை நோக்கிக் கூப்பிடும்போது நான் அவர்களைக் கேளாதிருப்பேன். தீயவருடன் மகா தீமை செய்யும்போது, என் பிரியமானவளுக்கு என் வீட்டில் என்ன இருக்கிறது? பரிசுத்த மாம்சத்தை உன்னைவிட்டுத் தாண்டிப்போகச்செய்வார்கள்; உன் பொல்லாப்பு நடக்கும்போது நீ சந்தோசப்படுகிறாயே. நல்ல பழம் இருக்கிற நேர்த்தியும் பச்சையுமான ஒலிவமரமென்னும் பெயரைக் யெகோவா உனக்குச் சூட்டினார்; ஆனால் மகா அமளியின் சத்தமாய் அதைச் சுற்றிலும் நெருப்பைக் கொளுத்துகிறார், அதின் கொம்புகள் முறிக்கப்பட்டது. பாகாலுக்குத் தூபங்காட்டுகிறதினால் எனக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் தங்களுக்குக் கேடாகச் செய்த பொல்லாப்புக்காக உன்மேல் தீங்கை வரச்செய்வேன் என்று உன்னை நாட்டின சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். அதை யெகோவா எனக்கு அறிவித்ததினால் அறிந்துகொண்டேன்; அவர்களுடைய செய்கைகளை அப்பொழுது எனக்குத் தெரிவித்தார்.

எரேமியா 11:1-18 பரிசுத்த பைபிள் (TAERV)

எரேமியாவிற்கு வந்த கர்த்தருடைய வார்த்தை இதுதான். “எரேமியா, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேள். யூதாவின் ஜனங்களிடம் இவற்றைப்பற்றி கூறு. எருசலேமில் வாழ்ந்துக்கொண்டிருக்கிற ஜனங்களிடம் இவற்றைப்பற்றி கூறு. இதைத்தான், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்: ‘இந்த உடன்படிக்கைக்கு அடிபணியாத எந்தவொரு நபருக்கும் கெட்டவை ஏற்படும். நான் உங்கள் முற்பிதாக்களோடு செய்துக்கொண்ட உடன்படிக்கையைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். நான் அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தபோது அவர்களோடு இந்த உடன்படிக்கையைச் செய்துக்கொண்டேன். எகிப்து பல துன்பங்களுக்குரிய இடமாக இருந்தது. அது இரும்பை இளகச் செய்யும் அளவிற்கு சூடான வாணலியைப்போன்று இருந்தது.’ அந்த ஜனங்களிடம், ‘எனக்குக் கீழ்ப்படியுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்றவற்றைச் செய்யுங்கள். நீங்கள் இவற்றைச் செய்தால் நீங்கள் என்னுடைய ஜனங்களாகவும், நான் உங்களது தேவனாகவும் இருப்பேன்’ என்று சொன்னேன். “நான் உங்களது முற்பிதாக்களுக்குச் செய்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காகவே இதனைச் செய்தேன். மிகவும் செழிப்பான பாலும் தேனும் ஓடுகிற பூமியைத் தருவதாக நான் அவர்களுக்கு உறுதி செய்தேன். நீங்கள் இன்று அத்தகைய நாட்டில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறீர்கள்.” நான் (எரேமியா) “ஆமென் கர்த்தாவே” என்றேன். கர்த்தர் என்னிடம், “எரேமியா எருசலேமின் தெருக்களிலும், யூதாவின் நகரங்களிலும் இச்செய்தியைப் பிரச்சாரம் செய் என்று சொன்னார். அவர், ‘இந்த உடன்படிக்கையின் வார்த்தையை கவனியுங்கள். அதன் சட்டங்களுக்கு அடிபணியுங்கள். உங்களது முற்பிதாக்களுக்கு நான் அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தபோது, ஒரு எச்சரிக்கைக் கொடுத்தேன். இந்நாள்வரை நான் அவர்களை மீண்டும், மீண்டும், எச்சரிக்கை செய்தேன், எனக்கு கீழ்ப்படியுமாறு நான் அவர்களுக்குச் சொன்னேன். ஆனால் உங்களது முற்பிதாக்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் பிடிவாதமாக இருந்து அவர்களது தீயமனம் விரும்புகிறபடி செய்தனர். அவர்கள் எனக்கு அடிபணியாவிட்டால் கெட்டவை ஏற்படும், என்று உடன்படிக்கைக் கூறுகிறது, எனவே, நான் அவர்களுக்கு அனைத்து கெட்டவற்றையும் ஏற்படும்படிச் செய்கிறேன். உடன்படிக்கைக்குக் கீழ்ப்படியும்படி நான் அவர்களுக்கு கட்டளையிட்டேன். ஆனால் அவர்கள் செய்யவில்லை.’” கர்த்தர் என்னிடம், “எரேமியா! யூதாவின் ஜனங்களும் எருசலேமில் வாழ்கிற ஜனங்களும் இரகசியமாக திட்டங்கள் போடுகிறார்கள் என்று தெரியும். அந்த ஜனங்கள் தம் முற்பிதாக்கள் செய்த அதே பாவங்களைச் செய்கிறார்கள். அவர்களின் முற்பிதாக்கள் எனது செய்தியை கேட்க மறுத்தனர். அவர்கள் அந்நிய தெய்வங்களை தொழுதுகொள்ளவும், பின்பற்றவும் செய்தனர். நான் அவர்களது முற்பிதாக்களோடு செய்த உடன்படிக்கையை இஸ்ரவேலின் குடும்பத்தாரும், யூதாவின் குடும்பத்தாரும், உடைத்துவிட்டனர்” என்று கூறினார். எனவே கர்த்தர், “யூதாவின் ஜனங்களுக்கு விரைவில் பயங்கரமான சில காரியங்கள் ஏற்படும்படி செய்வேன். அவர்களால் அவற்றிலிருந்து தப்பிக்க முடியாது. அவர்கள் வருத்தப்படுவார்கள். அவர்கள் என்னிடம் உதவிக்காக அழுவார்கள். ஆனால் நான் அவர்களை கவனிக்கமாட்டேன். யூதாவில் உள்ள ஜனங்களும், எருசலேமில் உள்ள ஜனங்களும், தங்கள் விக்கிரகங்களிடம் போய் உதவிக்காக ஜெபிப்பார்கள். அந்த விக்கிரகங்களுக்கு முன் நறுமணப் பொருட்களை எரிக்கின்றனர். அந்தப் பயங்கரமான காலம் வரும்போது அந்த விக்கிரகங்களால் யூதாவின் ஜனங்களுக்கு உதவி செய்யமுடியாது. “யூதாவின் ஜனங்களே! உங்களிடம் ஏராளமான விக்கிரகங்கள் உள்ளன, யூதாவில் உள்ள நகரங்களைப் போன்றே, உங்களிடம் பல விக்கிரகங்கள் உள்ளன. பொய்யான பாகால் தெய்வத்திற்கு நீங்கள் பல பலிபீடங்களை தொழுதுகொள்வதற்காகக் கட்டியிருக்கிறீர்கள். அவை எருசலேமிலுள்ள, தெருக்களின் எண்ணிக்கைபோன்று, அதிக எண்ணிக்கையாக உள்ளன என்று சொல்லுகிறார். “எரேமியா, யூதாவின் இந்த ஜனங்களுக்காக நீ ஜெபம் செய்யவேண்டாம். அவர்களுக்காக கெஞ்சவேண்டாம். அவர்களுக்காக ஜெபம் செய்யவேண்டாம். நான் கேட்கமாட்டேன். அந்த ஜனங்கள் துன்பப்படத் தொடங்குவார்கள். பிறகு அவர்கள் என்னை உதவிக்காக அழைப்பார்கள். ஆனால் நான் அவர்களை கவனிக்கமாட்டேன். “ஏன் எனது பிரியமானவள் (யூதா) எனது வீட்டில் (ஆலயத்தில்) இருக்கிறாள்? அங்கே இருக்க அவளுக்கு உரிமை இல்லை. அவள் பல தீய செயல்களைச் செய்திருக்கிறாள். யூதாவே, சிறப்பான வாக்குறுதிகளும் மிருகபலிகளும் உன்னை அழிவிலிருந்து காப்பாற்றும் என்று நினைக்கிறாயா? எனக்குப் பலிகள் கொடுப்பதன் மூலம் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறாயா?” கர்த்தர் உனக்கு ஒரு பெயரைக் கொடுத்தார். உன்னை அழைத்து, “பசுமையான ஒலிவமரம். பார்க்க அழகானது” என்றார். ஆனால் ஒரு பெரும் புயலுடன், கர்த்தர் அந்த மரத்தை நெருப்பில் தள்ளிவிடுவார். அதன் கிளைகள் எரிக்கப்படும். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் உன்னை நட்டுவைத்தார். அழிவு உனக்கு வருமென்று அவர் சொன்னார். ஏனென்றால், இஸ்ரவேலின் குடும்பமும், யூதாவின் குடும்பமும், கெட்ட செயல்களைச் செய்திருக்கின்றன. அவர்கள் பாகலுக்குப் பலிகளைக் கொடுத்தனர் அது அவருக்குக் கோபத்தை உண்டுப்பண்ணியது! ஆனதோத்திலுள்ள மனிதர்கள் எனக்கு எதிராக திட்டங்கள் போடுவதை, கர்த்தர் எனக்குக் காட்டினார். அவர்கள் செய்துகொண்டிருந்த செயல்களை எனக்கு கர்த்தர் காட்டினார். எனவே நான், அவர்கள் எனக்கு எதிரானவர்கள் என்பதை அறிந்தேன்.