எரேமியா 25:1-14

எரேமியா 25:1-14 TCV

யூதாவின் அரசன் யோசியாவின் மகன் யோயாக்கீம் அரசாண்ட நான்காம் வருடத்தில், யூதா மக்கள் எல்லோரையும் குறித்து எரேமியாவுக்கு வார்த்தை வந்தது. இது பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாரின் ஆட்சியின் முதலாம் வருடமாகும். இறைவாக்கினன் எரேமியா, எல்லா யூதா மக்களுக்கும், எருசலேமில் வாழும் எல்லோருக்கும் சொன்னதாவது: யூதாவின் அரசன், ஆமோனின் மகன் யோசியா அரசாண்ட பதிமூன்றாம் வருடத்திலிருந்து, இந்நாள்வரை இந்த இருபத்துமூன்று வருடங்களாக யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. அதைக்குறித்து நான் மீண்டும், மீண்டும் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் அவற்றிக்குச் செவிகொடுக்கவில்லை. மேலும் யெகோவா இறைவாக்கினர்களான எல்லா ஊழியக்காரரையும் மீண்டும், மீண்டும் உங்களிடம் அனுப்பியும், நீங்கள் செவிகொடுக்கவோ, கவனிக்கவோ இல்லை. அவர்கள் உங்களிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தீமையான வழியிலிருந்தும், தீமையான உங்கள் வழக்கங்களிலிருந்தும் திரும்புங்கள், அப்பொழுது நீங்கள் உங்கள் முற்பிதாக்களுக்கு என்றென்றைக்குமென யெகோவா கொடுத்த நாட்டில் வாழலாம். நீங்கள் அந்நிய தெய்வங்களுக்குப் பணிவிடை செய்யவோ, அவைகளை வணங்குவதற்காக அவைகளைப் பின்பற்றவோ வேண்டாம். உங்கள் கைகளினால் செய்தவற்றால் எனக்குக் கோபமூட்ட வேண்டாம். அப்பொழுது நான் உங்களுக்குத் தீமைசெய்யமாட்டேன்” என்று உங்களுக்குச் சொல்லியிருந்தார்கள். “ஆனால் நீங்களோ எனக்குச் செவிகொடுக்கவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார். “உங்கள் கைகள் செய்தவற்றைக் கொண்டு எனக்குக் கோபமூட்டியிருக்கிறீர்கள். நீங்களே உங்கள்மேல் தீங்கைக் கொண்டுவந்திருக்கிறீர்கள்.” சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “என் வார்த்தைகளுக்கு நீங்கள் செவிகொடுக்காதபடியால், நான் வடக்கேயிருக்கும் எல்லா மக்கள் கூட்டங்களையும், என் பணியாளனாகிய பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரையும் வரவழைப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அவர்களை இந்த நாட்டிற்கும், அதன் குடிகளுக்கும், அவர்களைச் சுற்றியுள்ள எல்லா மக்கள்கூட்டங்களுக்கும் விரோதமாகவே நான் கொண்டுவருவேன். நான் அவர்களை முழுவதும் அழித்து, அவர்களை வெறுப்புக்குரியவர்களாகவும், பழிப்புக்குரியவர்களாகவும், நித்திய அழிவுக்குரியவர்களாகவும் ஆக்குவேன். நான் அவர்களிடமிருந்து ஆனந்த சத்தத்தையும், மகிழ்ச்சியையும் நீக்கிவிடுவேன். மணமகனின் குரலையும், மணமகளின் குரலையும் நீக்கிவிடுவேன். இயந்திரங்களின் சத்தத்தையும் விளக்கின் வெளிச்சத்தையும் எடுத்துப்போடுவேன். இந்த நாடு முழுவதும் கைவிடப்பட்ட பாழ்நிலமாகும். இந்த நாடுகள் பாபிலோன் அரசனுக்கு எழுபது வருடங்களுக்குப் பணிசெய்வார்கள். “ஆனால் எழுபது வருடங்கள் நிறைவேறிய பின்னரோ, பாபிலோன் அரசனையும், அவர்களுடைய நாட்டையும், கல்தேயருடைய தேசத்தையும் அவர்களுடைய குற்றத்திற்காகத் தண்டிப்பேன். அவர்களுடைய நாட்டையும் என்றென்றும் பாழாக்குவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அந்த நாட்டிற்கு எதிராய் நான் பேசிய எல்லாவற்றையும் அதன்மேல் கொண்டுவருவேன். இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள யாவற்றையும், எல்லா நாடுகளுக்கும் விரோதமாக எரேமியாவினால் இறைவாக்காகக் கூறப்பட்டவற்றையும் கொண்டுவருவேன். அவர்களும் அநேக நாட்டினராலும், பெரிய அரசர்களாலும் அடிமைகளாக்கப்படுவார்கள். இவ்வாறு அவர்களின் செயல்களுக்கு ஏற்றதாகவும், அவர்களின் கைகளின் வேலைக்கு ஏற்றதாகவும் நான் அவர்களுக்குப் பதில் செய்வேன்.”