எரேமியா 25:1-14

எரேமியா 25:1-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் நாலாம் வருஷத்துக்குச் சரியான, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அரசாண்ட முதலாம் வருஷத்திலே யூதாவின் ஜனம் அனைத்தையும் குறித்து எரேமியாவுக்கு உண்டான வார்த்தை: அதைத் தீர்க்கதரிசியாகிய எரேமியா யூதாவின் ஜனம் அனைத்துக்கும்; எருசலேமின் குடிகள் எல்லாருக்கும் அறிவிக்கிறதற்காக அவர்களை நோக்கி: ஆமோனின் குமாரனாகிய யோசியாவின் பதின்மூன்றாம் வருஷம் துவக்கி இந்நாள்மட்டும் சென்ற இந்த இருபத்துமூன்று வருஷமாகக் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாயிற்று; அதை நான் உங்களுக்கு ஏற்கெனவே சொல்லிக்கொண்டுவந்தும் நீங்கள் கேளாமற்போனீர்கள். கர்த்தர் உங்களிடத்திற்குத் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய சகல ஊழியக்காரரையும் ஏற்கெனவே அனுப்பிக்கொண்டேயிருந்தும், நீங்கள் கேளாமலும், கேட்கும்படிக்கு உங்கள் செவிகளைச் சாயாமலும் போனீர்கள். அவர்களைக்கொண்டு அவர்: உங்களில் அவனவன் தன்தன் பொல்லாதவழியையும், உங்கள் கிரியைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திரும்பி, கர்த்தர் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் கொடுத்த தேசத்தில் சதாகாலமும் குடியிருந்து, அந்நிய தேவர்களைப் பின்பற்றாமலும், அவைகளுக்கு ஆராதனைசெய்யாமலும், அவைகளைப் பணியாமலுமிருந்து, நான் உங்களுக்குத் தீமைசெய்யாதபடிக்கு உங்கள் கைகளின் செய்கைகளால் எனக்குக் கோபமுண்டாக்காமலும் இருங்கள் என்று சொல்லியனுப்பினேன். நீங்களோ, உங்களுக்குத் தீமையாக உங்கள் கைகளின் செய்கைகளாலே எனக்குக் கோபமூட்டும்படிக்கு, என் சொல்லைக் கேளாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியினால், இதோ, நான் வடக்கேயிருக்கிற சகல வம்சங்களையும், என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவையும் அழைத்தனுப்பி, அவர்களை இந்த தேசத்துக்கு விரோதமாகவும், இதின் குடிகளுக்கு விரோதமாகவும், சுற்றிலுமிருக்கிற இந்த எல்லா ஜாதிகளுக்கும் விரோதமாகவும் வரப்பண்ணி, அவைகளைச் சங்காரத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவைகளைப் பாழாகவும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல் போடுதலாகவும், நித்திய வனாந்தரங்களாகவும் செய்வேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மகிழ்ச்சியின் சத்தத்தையும், சந்தோஷத்தின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டியின் சத்தத்தையும், ஏந்திரத்தின் சத்தத்தையும் விளக்கின் வெளிச்சத்தையும் அவர்களிலிருந்து நீங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். இந்த தேசமெல்லாம் வனாந்தரமும் பாழுமாகும்; இந்த ஜாதிகளோ, எழுபது வருஷமாகப் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பார்கள். எழுபது வருஷம் நிறைவேறின பின்பு, நான் பாபிலோன் ராஜாவினிடத்திலும், அந்த ஜாதியினிடத்திலும், கல்தேயருடைய தேசத்தினிடத்திலும், அவர்களுடைய அக்கிரமத்தை விசாரித்து, அதை நித்திய பாழிடமாக்கி, நான் அந்த தேசத்துக்கு விரோதமாய் உரைத்த என் வார்த்தைகளையெல்லாம், எரேமியா சகல ஜாதிகளுக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொன்னதும், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதுமான யாவையும் அதின்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அநேகம் ஜாதிகளும் பெரிய ராஜாக்களும் அவர்களை அடிமைகொள்வார்கள்; நான் அவர்களுக்கு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாகவும், அவர்கள் கைகளின் செய்கைகளுக்குத்தக்கதாகவும் பதில் அளிப்பேன் என்கிறார்.

எரேமியா 25:1-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யூதாவின் அரசன் யோசியாவின் மகன் யோயாக்கீம் அரசாண்ட நான்காம் வருடத்தில், யூதா மக்கள் எல்லோரையும் குறித்து எரேமியாவுக்கு வார்த்தை வந்தது. இது பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாரின் ஆட்சியின் முதலாம் வருடமாகும். இறைவாக்கினன் எரேமியா, எல்லா யூதா மக்களுக்கும், எருசலேமில் வாழும் எல்லோருக்கும் சொன்னதாவது: யூதாவின் அரசன், ஆமோனின் மகன் யோசியா அரசாண்ட பதிமூன்றாம் வருடத்திலிருந்து, இந்நாள்வரை இந்த இருபத்துமூன்று வருடங்களாக யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. அதைக்குறித்து நான் மீண்டும், மீண்டும் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் அவற்றிக்குச் செவிகொடுக்கவில்லை. மேலும் யெகோவா இறைவாக்கினர்களான எல்லா ஊழியக்காரரையும் மீண்டும், மீண்டும் உங்களிடம் அனுப்பியும், நீங்கள் செவிகொடுக்கவோ, கவனிக்கவோ இல்லை. அவர்கள் உங்களிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தீமையான வழியிலிருந்தும், தீமையான உங்கள் வழக்கங்களிலிருந்தும் திரும்புங்கள், அப்பொழுது நீங்கள் உங்கள் முற்பிதாக்களுக்கு என்றென்றைக்குமென யெகோவா கொடுத்த நாட்டில் வாழலாம். நீங்கள் அந்நிய தெய்வங்களுக்குப் பணிவிடை செய்யவோ, அவைகளை வணங்குவதற்காக அவைகளைப் பின்பற்றவோ வேண்டாம். உங்கள் கைகளினால் செய்தவற்றால் எனக்குக் கோபமூட்ட வேண்டாம். அப்பொழுது நான் உங்களுக்குத் தீமைசெய்யமாட்டேன்” என்று உங்களுக்குச் சொல்லியிருந்தார்கள். “ஆனால் நீங்களோ எனக்குச் செவிகொடுக்கவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார். “உங்கள் கைகள் செய்தவற்றைக் கொண்டு எனக்குக் கோபமூட்டியிருக்கிறீர்கள். நீங்களே உங்கள்மேல் தீங்கைக் கொண்டுவந்திருக்கிறீர்கள்.” சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “என் வார்த்தைகளுக்கு நீங்கள் செவிகொடுக்காதபடியால், நான் வடக்கேயிருக்கும் எல்லா மக்கள் கூட்டங்களையும், என் பணியாளனாகிய பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரையும் வரவழைப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அவர்களை இந்த நாட்டிற்கும், அதன் குடிகளுக்கும், அவர்களைச் சுற்றியுள்ள எல்லா மக்கள்கூட்டங்களுக்கும் விரோதமாகவே நான் கொண்டுவருவேன். நான் அவர்களை முழுவதும் அழித்து, அவர்களை வெறுப்புக்குரியவர்களாகவும், பழிப்புக்குரியவர்களாகவும், நித்திய அழிவுக்குரியவர்களாகவும் ஆக்குவேன். நான் அவர்களிடமிருந்து ஆனந்த சத்தத்தையும், மகிழ்ச்சியையும் நீக்கிவிடுவேன். மணமகனின் குரலையும், மணமகளின் குரலையும் நீக்கிவிடுவேன். இயந்திரங்களின் சத்தத்தையும் விளக்கின் வெளிச்சத்தையும் எடுத்துப்போடுவேன். இந்த நாடு முழுவதும் கைவிடப்பட்ட பாழ்நிலமாகும். இந்த நாடுகள் பாபிலோன் அரசனுக்கு எழுபது வருடங்களுக்குப் பணிசெய்வார்கள். “ஆனால் எழுபது வருடங்கள் நிறைவேறிய பின்னரோ, பாபிலோன் அரசனையும், அவர்களுடைய நாட்டையும், கல்தேயருடைய தேசத்தையும் அவர்களுடைய குற்றத்திற்காகத் தண்டிப்பேன். அவர்களுடைய நாட்டையும் என்றென்றும் பாழாக்குவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அந்த நாட்டிற்கு எதிராய் நான் பேசிய எல்லாவற்றையும் அதன்மேல் கொண்டுவருவேன். இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள யாவற்றையும், எல்லா நாடுகளுக்கும் விரோதமாக எரேமியாவினால் இறைவாக்காகக் கூறப்பட்டவற்றையும் கொண்டுவருவேன். அவர்களும் அநேக நாட்டினராலும், பெரிய அரசர்களாலும் அடிமைகளாக்கப்படுவார்கள். இவ்வாறு அவர்களின் செயல்களுக்கு ஏற்றதாகவும், அவர்களின் கைகளின் வேலைக்கு ஏற்றதாகவும் நான் அவர்களுக்குப் பதில் செய்வேன்.”

எரேமியா 25:1-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் அரசாட்சியின் நான்காம் வருடத்திற்குச் சரியான, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அரசாண்ட முதலாம் வருடத்தில் யூதாவின் மக்கள் அனைவரையும் குறித்து எரேமியாவுக்கு உண்டான வார்த்தை; அதைத் தீர்க்கதரிசியாகிய எரேமியா யூதாவின் மக்கள் அனைத்திற்கும்; எருசலேமின் குடிமக்கள் எல்லோருக்கும் அறிவிக்கிறதற்காக அவர்களை நோக்கி: ஆமோனின் மகனாகிய யோசியாவின் அரசாட்சியின் பதின்மூன்றாம் வருடம் துவங்கி இந்நாள்வரை சென்ற இந்த இருபத்துமூன்று வருடங்களாகக் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டானது; அதை நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிக்கொண்டுவந்தும் நீங்கள் கேளாமற்போனீர்கள். யெகோவா உங்களிடத்திற்குத் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய எல்லா ஊழியக்காரரையும் ஏற்கனவே அனுப்பிக்கொண்டேயிருந்தும், நீங்கள் கேளாமலும், கவனிக்காமலும், கீழ்ப்படியாமலும் போனீர்கள். அவர்களைக்கொண்டு அவர்: உங்களில் அவனவன் தன்தன் பொல்லாதவழியையும், உங்கள் செயல்களின் பொல்லாப்பையும் விட்டுத் திரும்பி, யெகோவா உங்களுக்கும் உங்கள் முற்பிதாக்களுக்கும் கொடுத்த தேசத்தில் சதாகாலமும் குடியிருந்து, அந்நிய தெய்வங்களைப் பின்பற்றாமலும், அவைகளுக்கு ஆராதனைசெய்யாமலும், அவைகளைப் பணியாமலுமிருந்து, நான் உங்களுக்குத் தீமைசெய்யாதபடிக்கு உங்கள் கைகளின் செய்கைகளால் எனக்குக் கோபமுண்டாக்காமலும் இருங்கள் என்று சொல்லியனுப்பினேன். நீங்களோ, உங்களுக்குத் தீமையாக உங்கள் கைகளின் செய்கைகளால் எனக்குக் கோபமூட்டுவதற்கு, என் சொல்லைக் கேளாமற்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான். நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியால், இதோ, நான் வடக்கேயிருக்கிற எல்லா வம்சங்களையும், என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவையும் அழைத்தனுப்பி, அவர்களை இந்தத் தேசத்திற்கு விரோதமாகவும், இதின் குடிமக்களுக்கு விரோதமாகவும், சுற்றிலுமிருக்கிற இந்த எல்லா மக்களுக்கும் விரோதமாகவும் வரச்செய்து, அவைகளை அழிவுக்கு ஒப்புக்கொடுத்து, அவைகளைப் பாழாகவும் இகழ்ச்சிக்குறியாகிய பழி போடுதலாகவும், நிலையான வனாந்திரங்களாகவும் செய்வேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். மகிழ்ச்சியின் சத்தத்தையும், சந்தோஷத்தின் சத்தத்தையும், மணமகனின் சத்தத்தையும், மணமகளின் சத்தத்தையும், எந்திரத்தின் சத்தத்தையும் விளக்கின் வெளிச்சத்தையும் அவர்களிலிருந்து நீங்கச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார். இந்த தேசமெல்லாம் வனாந்திரமும் பாழுமாகும்; இந்த மக்களோ, எழுபது வருடங்களாகப் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பார்கள். எழுபது வருடங்கள் முடிந்த பின்பு, நான் பாபிலோன் ராஜாவிடத்திலும், அந்த மக்களிடத்திலும், கல்தேயருடைய தேசத்தினிடத்திலும், அவர்களுடைய அக்கிரமத்தை விசாரித்து, அதை நிலையான பாழிடமாக்கி, நான் அந்தத் தேசத்திற்கு விரோதமாக சொன்ன என் வார்த்தைகளையெல்லாம், எரேமியா எல்லா மக்களுக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொன்னதும், இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறதுமான யாவையும் அதின்மேல் வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார். அநேக தேசங்களும் பெரிய ராஜாக்களும் அவர்களை அடிமைப்படுத்துவார்கள்; நான் அவர்களுக்கு அவர்கள் செயல்களுக்குத்தகுந்ததாகவும், அவர்கள் கைகளின் செய்கைகளுக்குத்தகுந்ததாகவும் பதில் அளிப்பேன் என்கிறார்.

எரேமியா 25:1-14 பரிசுத்த பைபிள் (TAERV)

யூதாவின் ஜனங்களைக் குறித்து எரேமியாவிற்கு வந்த வார்த்தை இதுதான். யூதாவின் ராஜாவாக யோயாக்கீம் ஆண்ட நான்காவது ஆண்டில் இந்த வார்த்தை வந்தது. யோயாக்கீம் யோசியாவின் குமாரன். அவன் ராஜாவாகிய நான்காவது ஆண்டு, பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு முதல் ஆண்டாக இருந்தது. எருசலேமிலுள்ள அனைத்து ஜனங்களிடமும் யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களிடமும் எரேமியா தீர்க்கதரிசி பேசிய செய்தி இதுதான். கடந்த 23 ஆண்டுகளாக நான் மீண்டும், மீண்டும் கர்த்தருடைய வார்த்தைகளைக் கொடுத்திருக்கிறேன். ஆமோனின் குமாரனான யோசியா யூதாவில் ராஜாவாக 13 ஆண்டுகளானதை தொடர்ந்து நானும் தீர்க்கதரிசியாக இருக்கிறேன். அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை உங்களுக்கு கர்த்தரிடமிருந்து செய்தியை நான் சொல்லி வருகிறேன். ஆனால் நீங்கள் கவனிக்கவில்லை. கர்த்தர் அவரது வேலைக்காரராகிய தீர்க்கதரிசிகளை உங்களிடம் மீண்டும், மீண்டும் அனுப்பிக்கொண்டே இருக்கிறார். ஆனால் நீங்கள் அவர்களை கவனிக்கவில்லை. நீங்கள் அவர்களிடம் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. அத்தீர்க்கதரிசிகள், “உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள். அத்தீயச் செயல்களைச் செய்வதை நிறுத்துங்கள்! நீங்கள் மாறினால், பிறகு, கர்த்தர் உங்களுக்கும் உங்கள் முற்பிதாக்களுக்கும் நீண்ட காலத்திற்கு முன்பே கொடுத்த நாட்டிற்குத் திரும்பி வருவீர்கள். அவர் அந்த நாட்டை நீங்கள் என்றென்றும் வாழும்படி தந்தார். அந்நிய தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம். அவர்களைத் தொழுதுகொள்ளவோ அவர்களுக்கு சேவைசெய்யவோ வேண்டாம். யாரோ ஒருவர் செய்த விக்கிரகங்களைத் தொழுதுகொள்ள வேண்டாம். அது உங்கள் மீது எனக்குக் கோபத்தை மட்டும் ஊட்டும். இவ்வாறு செய்வது உங்களை மட்டுமே பாதிக்கும்.” “ஆனால் நீங்கள் என்னை கவனிக்கவில்லை” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “யாரோ ஒருவரால் செய்யப்பட்ட விக்கிரகங்களை நீங்கள் தொழுதுகொண்டீர்கள். அது என்னைக் கோபங்கொள்ளச் செய்தது. அது உங்களையே பாதித்தது.” எனவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்வது இதுதான்: “நீங்கள் எனது வார்த்தைகளை கவனித்துக்கொள்ளவில்லை. எனவே நான் வடக்கில் உள்ள அனைத்து கோத்திரங்களையும் அனுப்புவேன்” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் விரைவில் பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரை அனுப்புவேன். அவன் எனது தாசன். நான் அவர்களை யூதா நாட்டிற்கும் யூதாவின் ஜனங்களுக்கும் எதிராக அனுப்புவேன். உங்களைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளுக்கும் எதிராக அவர்களைக் கொண்டு வருவேன். அந்நாடுகளை எல்லாம் நான் அழிப்பேன். அந்நாடுகளை நான் என்றென்றும் வனாந்தரமாகும்படிச் செய்வேன். அந்நாடுகளை எல்லாம் ஜனங்களை பார்த்து அவை எவ்வாறு அழிக்கப்பட்டன என்று இகழ்ச்சியாக பிரமித்துப் பேசிக்கொள்வார்கள். அவ்விடங்களில் உள்ள மகிழ்ச்சியான மற்றும் சந்தோஷமான ஓசைகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவேன். அங்கு இனிமேல் மணமகள் மற்றும் மணமகன்களின் மகிழ்ச்சி ஆராவாரம் இருக்காது. ஜனங்கள் உணவுப் பொருளை அரைக்கும் ஒலியை எடுத்துவிடுவேன். விளக்கு ஒளியையும் நான் எடுத்துவிடுவேன். அந்த இடம் முழுவதும் காலியான வனாந்தரம்போன்று ஆகும். அந்த ஜனங்கள் அனைவரும் பாபிலோன் ராஜாவுக்கு 70 ஆண்டுகளுக்கு அடிமைகளாக இருப்பார்கள். “ஆனால் 70 ஆண்டுகள் ஆனதும் நான் பாபிலோன் ராஜாவைத் தண்டிப்பேன். நான் பாபிலோன் நாட்டையும் தண்டிப்பேன்.” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் பாபிலோனியர் நாட்டை அவர்களது பாவங்களுக்காகத் தண்டிப்பேன். நான் அந்த நாட்டினை என்றென்றும் வனாந்தரமாக்குவேன். நான் பாபிலோனுக்குப் பல தீமைகள் வரும் என்று சொல்லி இருந்தேன். அவை அனைத்தும் ஏற்படும். எரேமியா அந்த அயல் நாடுகளைப்பற்றி தீர்க்கதரிசனம் சொன்னான். அந்த எச்சரிக்கைகள் எல்லாம் இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. ஆம். பாபிலோனில் உள்ள ஜனங்கள் பல நாடுகளுக்கும் பல பெரிய ராஜாக்களுக்கும் சேவை செய்வார்கள். அவர்கள் செய்யப் போகும் அனைத்துச் செயல்களுக்கும் உரிய தண்டனையை நான் கொடுப்பேன்.”