எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 25:1-14

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 25:1-14 TAERV

யூதாவின் ஜனங்களைக் குறித்து எரேமியாவிற்கு வந்த வார்த்தை இதுதான். யூதாவின் ராஜாவாக யோயாக்கீம் ஆண்ட நான்காவது ஆண்டில் இந்த வார்த்தை வந்தது. யோயாக்கீம் யோசியாவின் குமாரன். அவன் ராஜாவாகிய நான்காவது ஆண்டு, பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு முதல் ஆண்டாக இருந்தது. எருசலேமிலுள்ள அனைத்து ஜனங்களிடமும் யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களிடமும் எரேமியா தீர்க்கதரிசி பேசிய செய்தி இதுதான். கடந்த 23 ஆண்டுகளாக நான் மீண்டும், மீண்டும் கர்த்தருடைய வார்த்தைகளைக் கொடுத்திருக்கிறேன். ஆமோனின் குமாரனான யோசியா யூதாவில் ராஜாவாக 13 ஆண்டுகளானதை தொடர்ந்து நானும் தீர்க்கதரிசியாக இருக்கிறேன். அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை உங்களுக்கு கர்த்தரிடமிருந்து செய்தியை நான் சொல்லி வருகிறேன். ஆனால் நீங்கள் கவனிக்கவில்லை. கர்த்தர் அவரது வேலைக்காரராகிய தீர்க்கதரிசிகளை உங்களிடம் மீண்டும், மீண்டும் அனுப்பிக்கொண்டே இருக்கிறார். ஆனால் நீங்கள் அவர்களை கவனிக்கவில்லை. நீங்கள் அவர்களிடம் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. அத்தீர்க்கதரிசிகள், “உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள். அத்தீயச் செயல்களைச் செய்வதை நிறுத்துங்கள்! நீங்கள் மாறினால், பிறகு, கர்த்தர் உங்களுக்கும் உங்கள் முற்பிதாக்களுக்கும் நீண்ட காலத்திற்கு முன்பே கொடுத்த நாட்டிற்குத் திரும்பி வருவீர்கள். அவர் அந்த நாட்டை நீங்கள் என்றென்றும் வாழும்படி தந்தார். அந்நிய தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம். அவர்களைத் தொழுதுகொள்ளவோ அவர்களுக்கு சேவைசெய்யவோ வேண்டாம். யாரோ ஒருவர் செய்த விக்கிரகங்களைத் தொழுதுகொள்ள வேண்டாம். அது உங்கள் மீது எனக்குக் கோபத்தை மட்டும் ஊட்டும். இவ்வாறு செய்வது உங்களை மட்டுமே பாதிக்கும்.” “ஆனால் நீங்கள் என்னை கவனிக்கவில்லை” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “யாரோ ஒருவரால் செய்யப்பட்ட விக்கிரகங்களை நீங்கள் தொழுதுகொண்டீர்கள். அது என்னைக் கோபங்கொள்ளச் செய்தது. அது உங்களையே பாதித்தது.” எனவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்வது இதுதான்: “நீங்கள் எனது வார்த்தைகளை கவனித்துக்கொள்ளவில்லை. எனவே நான் வடக்கில் உள்ள அனைத்து கோத்திரங்களையும் அனுப்புவேன்” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் விரைவில் பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரை அனுப்புவேன். அவன் எனது தாசன். நான் அவர்களை யூதா நாட்டிற்கும் யூதாவின் ஜனங்களுக்கும் எதிராக அனுப்புவேன். உங்களைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளுக்கும் எதிராக அவர்களைக் கொண்டு வருவேன். அந்நாடுகளை எல்லாம் நான் அழிப்பேன். அந்நாடுகளை நான் என்றென்றும் வனாந்தரமாகும்படிச் செய்வேன். அந்நாடுகளை எல்லாம் ஜனங்களை பார்த்து அவை எவ்வாறு அழிக்கப்பட்டன என்று இகழ்ச்சியாக பிரமித்துப் பேசிக்கொள்வார்கள். அவ்விடங்களில் உள்ள மகிழ்ச்சியான மற்றும் சந்தோஷமான ஓசைகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவேன். அங்கு இனிமேல் மணமகள் மற்றும் மணமகன்களின் மகிழ்ச்சி ஆராவாரம் இருக்காது. ஜனங்கள் உணவுப் பொருளை அரைக்கும் ஒலியை எடுத்துவிடுவேன். விளக்கு ஒளியையும் நான் எடுத்துவிடுவேன். அந்த இடம் முழுவதும் காலியான வனாந்தரம்போன்று ஆகும். அந்த ஜனங்கள் அனைவரும் பாபிலோன் ராஜாவுக்கு 70 ஆண்டுகளுக்கு அடிமைகளாக இருப்பார்கள். “ஆனால் 70 ஆண்டுகள் ஆனதும் நான் பாபிலோன் ராஜாவைத் தண்டிப்பேன். நான் பாபிலோன் நாட்டையும் தண்டிப்பேன்.” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் பாபிலோனியர் நாட்டை அவர்களது பாவங்களுக்காகத் தண்டிப்பேன். நான் அந்த நாட்டினை என்றென்றும் வனாந்தரமாக்குவேன். நான் பாபிலோனுக்குப் பல தீமைகள் வரும் என்று சொல்லி இருந்தேன். அவை அனைத்தும் ஏற்படும். எரேமியா அந்த அயல் நாடுகளைப்பற்றி தீர்க்கதரிசனம் சொன்னான். அந்த எச்சரிக்கைகள் எல்லாம் இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. ஆம். பாபிலோனில் உள்ள ஜனங்கள் பல நாடுகளுக்கும் பல பெரிய ராஜாக்களுக்கும் சேவை செய்வார்கள். அவர்கள் செய்யப் போகும் அனைத்துச் செயல்களுக்கும் உரிய தண்டனையை நான் கொடுப்பேன்.”