யோனா 1:4-10

யோனா 1:4-10 TCV

அப்பொழுது யெகோவா கடலில் பெருங்காற்றை அனுப்பினார். கப்பல் உடைந்துபோகுமென பயப்படத்தக்கதான, ஒரு பெரும்புயல் கடலில் உண்டாயிற்று. கப்பலாட்கள் எல்லோரும் பயந்து, ஒவ்வொருவனும் தன்தன் தெய்வத்தை நோக்கிக் கதறினான். அத்துடன் அவர்கள் கப்பலின் பாரத்தைக் குறைப்பதற்காக, அதிலிருந்த சரக்குகள் எல்லாவற்றையும் கடலில் எறிந்தார்கள். ஆனால் யோனாவோ, கப்பலின் அடித்தளத்திற்குச் சென்று அங்கே படுத்து ஆழ்ந்த நித்திரையாயிருந்தான். அப்பொழுது மாலுமி அவனிடம் சென்று, “நீ எப்படி நித்திரை செய்யலாம்? எழுந்து நீயும் உன் தெய்வத்திடம் மன்றாடு; ஒருவேளை அவர் நம்மில் கவனம்கொண்டு, அழிவிலிருந்து நம்மைக் காப்பாற்றக்கூடும் என்றான்.” அப்பொழுது கப்பலாட்கள் ஒருவரையொருவர் நோக்கி, “வாருங்கள், இந்த பேராபத்திற்குக் காரணம் யார் என்று அறியச் சீட்டுப் போடுவோம் என்றார்கள்.” அவர்கள் சீட்டுப் போட்டபொழுது, அது யோனாவின் பெயருக்கு விழுந்தது. எனவே அவர்கள் அவனிடம், “இந்தக் கஷ்டங்களுக்கெல்லாம் காரணம் யார்? என்று இப்பொழுது நீ எங்களுக்குச் சொல்லவேண்டும். நீ என்ன வேலைசெய்கிறாய்? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உனது நாடு எது? நீ எந்த நாட்டைச் சேர்ந்தவன்?” எனக் கேட்டார்கள். அதற்கு அவன் அவர்களிடம், “நான் ஒரு எபிரெயன், கடலையும் நிலத்தையும் படைத்த பரலோகத்தின் இறைவனாகிய யெகோவாவை ஆராதிக்கிறவன்” எனப் பதிலளித்தான். அவன் தான் யெகோவாவைவிட்டு ஓடிப்போகிறவன் என்று ஏற்கெனவே அவர்களிடம் சொல்லியிருந்தான். எனவே அவர்கள் அதைப்பற்றி அறிந்ததால் மிகவும் பயந்து, நீ என்ன செய்துவிட்டாய்? என்று கேட்டார்கள்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோனா 1:4-10