யோனா 1:4-10

யோனா 1:4-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று. அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிப்போய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரை பண்ணினான். அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து: நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான். அவர்கள் யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நாம் அறியும்படிக்குச் சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள்; யோனாவின் பேருக்குச் சீட்டு விழுந்தது. அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும்; உன் தொழிலென்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நான் எபிரெயன்; சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான். அவன் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால், அந்த மனுஷர் மிகவும் பயந்து, அவனை நோக்கி: நீ ஏன் இதைச் செய்தாய் என்றார்கள்.

யோனா 1:4-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது யெகோவா கடலில் பெருங்காற்றை அனுப்பினார். கப்பல் உடைந்துபோகுமென பயப்படத்தக்கதான, ஒரு பெரும்புயல் கடலில் உண்டாயிற்று. கப்பலாட்கள் எல்லோரும் பயந்து, ஒவ்வொருவனும் தன்தன் தெய்வத்தை நோக்கிக் கதறினான். அத்துடன் அவர்கள் கப்பலின் பாரத்தைக் குறைப்பதற்காக, அதிலிருந்த சரக்குகள் எல்லாவற்றையும் கடலில் எறிந்தார்கள். ஆனால் யோனாவோ, கப்பலின் அடித்தளத்திற்குச் சென்று அங்கே படுத்து ஆழ்ந்த நித்திரையாயிருந்தான். அப்பொழுது மாலுமி அவனிடம் சென்று, “நீ எப்படி நித்திரை செய்யலாம்? எழுந்து நீயும் உன் தெய்வத்திடம் மன்றாடு; ஒருவேளை அவர் நம்மில் கவனம்கொண்டு, அழிவிலிருந்து நம்மைக் காப்பாற்றக்கூடும் என்றான்.” அப்பொழுது கப்பலாட்கள் ஒருவரையொருவர் நோக்கி, “வாருங்கள், இந்த பேராபத்திற்குக் காரணம் யார் என்று அறியச் சீட்டுப் போடுவோம் என்றார்கள்.” அவர்கள் சீட்டுப் போட்டபொழுது, அது யோனாவின் பெயருக்கு விழுந்தது. எனவே அவர்கள் அவனிடம், “இந்தக் கஷ்டங்களுக்கெல்லாம் காரணம் யார்? என்று இப்பொழுது நீ எங்களுக்குச் சொல்லவேண்டும். நீ என்ன வேலைசெய்கிறாய்? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உனது நாடு எது? நீ எந்த நாட்டைச் சேர்ந்தவன்?” எனக் கேட்டார்கள். அதற்கு அவன் அவர்களிடம், “நான் ஒரு எபிரெயன், கடலையும் நிலத்தையும் படைத்த பரலோகத்தின் இறைவனாகிய யெகோவாவை ஆராதிக்கிறவன்” எனப் பதிலளித்தான். அவன் தான் யெகோவாவைவிட்டு ஓடிப்போகிறவன் என்று ஏற்கெனவே அவர்களிடம் சொல்லியிருந்தான். எனவே அவர்கள் அதைப்பற்றி அறிந்ததால் மிகவும் பயந்து, நீ என்ன செய்துவிட்டாய்? என்று கேட்டார்கள்.

யோனா 1:4-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவா கடலின்மேல் பெருங்காற்றை அனுப்பினார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமளவிற்கு பெரிய கொந்தளிப்பு உண்டானது. அப்பொழுது கப்பற்காரர்கள் பயந்து, அவனவன் தன்தன் தெய்வங்களை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தைக் குறைப்பதற்காக கப்பலில் இருந்த சரக்குகளைக் கடலில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோ கப்பலின் கீழ்த்தளத்தில் இறங்கிப்போய்ப் படுத்துக்கொண்டு, ஆழ்ந்து தூங்கினான். அப்பொழுது மாலுமி அவனிடம் வந்து: நீ தூங்கிக் கொண்டிருக்கிறது என்ன? எழுந்திருந்து உன்னுடைய தெய்வத்தை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாமலிருக்க உன்னுடைய தெய்வம் ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான். அவர்கள் யாரால் இந்த ஆபத்து நமக்கு வந்ததென்று நாம் தெரிந்துகொள்ள சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள்; யோனாவின் பெயருக்குச் சீட்டு விழுந்தது. அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: யாரால் இந்த ஆபத்து நமக்கு வந்ததென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும்; உன் தொழில் என்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நான் எபிரெயன்; கடலையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தரிடம் பயபக்தியுள்ளவன் என்றான். அவன் யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து விலகி ஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால், அந்த மனிதர்கள் மிகவும் பயந்து, அவனை நோக்கி: நீ ஏன் இதைச் செய்தாய் என்றார்கள்.

யோனா 1:4-10 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆனால் கர்த்தர் கடலில் ஒரு பெரும் புயலை உருவாக்கினார். காற்றானது கடலைக் கொந்தளிக்கச் செய்தது. புயல் மிகவும் பலமாக வீச, படகு இரண்டு பகுதியாக உடைந்துவிடும் போலத் தோன்றியது. பணியாட்கள் படகை மூழ்குவதிலிருந்து காப்பாற்ற அதன் கனத்தைக் குறைக்க விரும்பினார்கள். எனவே அவர்கள் கடலுக்குள் சரக்குகளைத் தூக்கி எறிந்தனர். படகோட்டிகள் மிகவும் பயந்தார்கள். ஒவ்வொருவரும் தனது தேவனிடம் ஜெபம் செய்யத் தொடங்கினார்கள். யோனா படகின் கீழ்த்தளத்திற்குச் சென்று படுத்து தூங்கிக்கொண்டிருந்தான். படகின் தலைவன் யோனாவிடம், “எழுந்திரு! ஏன் தூங்கிக்கொண்டிருக்கிறாய்? உனது தேவனிடம் ஜெபம் செய். ஒரு வேளை உனது தேவன் உன் ஜெபத்தைக் கேட்டு நம்மைக் காப்பாற்றலாம்!” என்றான். பிறகு அவர்கள் ஒருவரோடு ஒருவர், “நாம் சீட்டுக் குலுக்கிப்போட்டு இத்துன்பம் வரக் காரணம் என்னவென்று பார்ப்போம்” என்று பேசிக்கொண்டார்கள். எனவே அவர்கள் சீட்டுப் போட்டார்கள். யோனாவால் இந்தத் துன்பம் வந்தது என்பதை அது காட்டியது. பிறகு அவர்கள் யோனவிடம், “உனது குற்றத்தால்தான் எங்களுக்கு இந்த பயங்கரமான துன்பம் ஏற்பட்டிருக்கிறது. எனவே நீ என்ன செய்திருக்கிறாய் என்று எங்களிடம் சொல். உனது தொழில் என்ன? நீ எங்கிருந்து வருகிறாய்? உனது நாடு எது? உனது மக்கள் யார்?” என்று கேட்டார்கள். யோனா அவர்களிடம், “நான் ஒரு எபிரேயன் (யூதன்). நான் பரலேகத்தின் தேவனாகிய கர்த்தரை ஆராதிக்கிறேன். அவரே கடலையும் நிலத்தையும் படைத்த தேவன்” என்றான். யோனா, தான் கர்த்தரிடமிருந்து ஓடி வந்ததாகச் சொன்னான். அவர்கள் அதனை அறிந்ததும் மிகவும் பயந்தார்கள். அவர்கள் யோனாவிடம் “உனது தேவனுக்கு எதிராக எந்த பயங்கரமான செயலைச் செய்தாய்?” என்று கேட்டார்கள்.