மத்தேயு 10
10
இயேசு பன்னிரண்டு சீடர்களை அனுப்புதல்
1இயேசு தமது பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடம் வரவழைத்து, அசுத்த ஆவிகளை விரட்டவும், எல்லா விதமான நோய்களையும், வியாதிகளையும் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்தார்.
2இவை அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின்#10:2 அப்போஸ்தலர்களின் என்பது திருத்தூதர்கள் எனப்படுவார்கள் பெயர்கள்:
முதலாவது, பேதுரு என அழைக்கப்பட்ட சீமோன், அவனுடைய சகோதரன் அந்திரேயா;
செபெதேயுவின் மகன் யாக்கோபு, அவனுடைய சகோதரன் யோவான்;
3பிலிப்பு, பர்தொலொமேயு;
தோமா, வரி வசூலிப்பவனான மத்தேயு,
அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு,#10:3 ததேயு என்னும் மறுபேருள்ள லெபேயு அல்லது யூதா எனப்படும்.
4கானானியனாகிய சீமோன்#10:4 சீமோன் அல்லது செலோத்தே என்றழைக்கப்பட்ட சீமோன் எனப்படும், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து ஆகியோரே.
5இயேசு இந்தப் பன்னிரண்டு பேருக்கும் இவ்வழிமுறைகளைச் சொல்லி அனுப்பினார்: “நீங்கள் யூதரல்லாதவர்களிடம் போகவேண்டாம், சமாரியர்களின் எந்த பட்டணத்திற்குள்ளும் செல்லவேண்டாம். 6இஸ்ரயேலின் வழிதவறிப்போன ஆடுகளிடத்திற்கே போங்கள். 7நீங்கள் போகும்போது, ‘பரலோக அரசு சமீபித்து வருகிறது’ என்ற செய்தியைப் பிரசங்கியுங்கள். 8நோயுற்றோரை குணமாக்குங்கள், இறந்தவர்களை எழுப்புங்கள், குஷ்டவியாதி உள்ளோரைச் சுத்தப்படுத்துங்கள், பிசாசுகளை விரட்டுங்கள். இலவசமாக நீங்கள் பெற்றீர்கள், இலவசமாகவே கொடுங்கள்.
9“நீங்கள் போகும்போது, எவ்வித தங்கம், வெள்ளி, செப்புக் காசுகளை உங்கள் மடிப்பையில் கொண்டுபோக வேண்டாம்; 10பயணத்திற்கென்று பையையோ, மாற்று உடையையோ, பாதரட்சைகளையோ, ஊன்றுகோலையோ கொண்டுபோக வேண்டாம்; ஏனெனில் வேலையாள் தன் உணவுக்குப் பாத்திரவானாயிருக்கிறான். 11நீங்கள் எந்தப் பட்டணத்திற்கோ கிராமத்திற்கோ சென்றாலும் அங்கே தகுதியுள்ள ஒருவனைத் தேடி, நீங்கள் அவ்விடத்தைவிட்டுப் புறப்படும்வரை அவனுடைய வீட்டிலேயே தங்கியிருங்கள். 12அந்த வீட்டிற்குள் செல்லும்போது, உங்கள் வாழ்த்துக்களை அறிவியுங்கள். 13அந்த வீடு தகுதியுள்ளதாக இருந்தால், உங்கள் சமாதானம் அவ்வீட்டில் தங்கட்டும்; இல்லையானால், உங்கள் சமாதானம் உங்களிடம் திரும்பிவரும். 14யாராவது உங்களை வரவேற்காமலோ, உங்கள் வார்த்தைக்குச் செவிகொடுக்காமலோ இருந்தால், நீங்கள் அந்த வீட்டையோ, பட்டணத்தையோ விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களிலுள்ள தூசியை உதறிவிடுங்கள். 15நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளில் அந்தப் பட்டணத்திற்கு நடக்கப்போவது, சோதோம், கொமோரா#10:15 இப்பட்டணங்களைப் பற்றி அறிய ஆதி. 19 பார்க்கவும் பட்டணங்களுக்கு நடக்கப்போவதைப் பார்க்கிலும் கடினமானதாயிருக்கும்.
16“ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல நான் உங்களை அனுப்புகிறேன். ஆகையால் பாம்புகளைப்போல புத்திக்கூர்மை உள்ளவர்களாயும், புறாக்களைப்போல் கபடற்றவர்களாயும் இருங்கள். 17மனிதரைக் குறித்து விழிப்பாயிருங்கள்; அவர்கள் உங்களைத் தங்கள் நீதிமன்றங்களில் ஒப்புக்கொடுத்து, தங்களுடைய ஜெப ஆலயங்களில் உங்களைச் சவுக்கால் அடிப்பார்கள். 18என் நிமித்தமாக ஆளுநர்களுக்கும், அரசர்களுக்கும் முன்பாக நீங்கள் கொண்டுபோகப்படுவீர்கள். அவர்களுக்கும், யூதரல்லாதவர்களுக்கும் முன்னால், நீங்கள் எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள். 19அவர்கள் உங்களைக் கைது செய்யும்போது, என்ன சொல்வது, எப்படிச் சொல்வது எனக் கவலைப்படாதிருங்கள். அந்த நேரத்தில், என்ன சொல்லவேண்டும் என்பது உங்களுக்குக் கொடுக்கப்படும். 20ஏனெனில் பேசுவது நீங்களாய் இருக்கமாட்டீர்கள். உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்கள் மூலமாகப் பேசுவார்.
21“சகோதரன் தன் சகோதரனைக் கொல்லும்படி காட்டிக்கொடுப்பான். தகப்பன் தனது பிள்ளையைக் கொல்லும்படி காட்டிக்கொடுப்பான். பிள்ளைகள் அவர்கள் பெற்றோருக்கு எதிராக எழும்பி, அவர்களை கொலைசெய்வார்கள். 22என் நிமித்தமாக எல்லோரும் உங்களை வெறுப்பார்கள். ஆனால் முடிவுவரை பொறுமையாய் இருப்பவனே இரட்சிக்கப்படுவான். 23நீங்கள் ஒரு இடத்தில் துன்புறுத்தப்படுகையில், மற்றொரு இடத்திற்குத் தப்பியோடுங்கள். ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், மானிடமகனாகிய நான் வருவதற்கு முன்னால், நீங்கள் இஸ்ரயேலின் பட்டணங்கள் முழுவதையும் சுற்றி முடிக்கமாட்டீர்கள், என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
24“ஒரு மாணவன் ஆசிரியரைவிட மேலானவன் அல்ல. ஒரு வேலைக்காரன் தன் எஜமானைவிட மேலானவன் அல்ல. 25ஒரு மாணவன் தனது ஆசிரியரைப் போலவும், வேலைக்காரன் தனது எஜமானைப் போலவும் இருந்தால், அதுவே போதுமானது. ஒரு வீட்டின் தலைவன் பெயல்செபூல் என அழைக்கப்பட்டால், அவன் குடும்பத்தார் அதைவிட எவ்வளவு அதிகமாக அழைக்கப்படுவார்கள்!
26“எனவே, அவ்வாறு பயமுறுத்துகிறவர்களுக்குப் பயப்படவேண்டாம். மறைத்தது எதுவும் வெளியாக்கப்படாமல் போவதில்லை, ஒளித்து வைக்கப்படுவது எதுவும் வெளியே தெரியவராமல் போவதுமில்லை. 27நான் உங்களுக்கு இருளிலே சொன்னவற்றை, பகல் வெளிச்சத்தில் சொல்லுங்கள்; உங்கள் காதில் மெதுவாய் சொன்னதை, வீட்டின் கூரையின் மேலிருந்து அறிவியுங்கள். 28உடலைக் கொல்லுகிறவர்களுக்கு பயப்படவேண்டாம். அவர்களால் ஆத்துமாவைக் கொல்ல முடியாதே. உடலையும், ஆத்துமாவையும் நரகத்தில் அழிக்க வல்லமையுள்ள இறைவனுக்கு மட்டுமே பயப்படுங்கள். 29இரண்டு சிட்டுக் குருவிகள் ஒரு காசுக்கு விற்கப்படுவதில்லையா? ஆனால் அவற்றில் ஒன்றேனும் உங்கள் பிதாவின் அனுமதி இல்லாமல் நிலத்திலே விழுவதில்லை. 30உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன. 31எனவே பயப்படவேண்டாம்; நீங்கள் அநேக சிட்டுக் குருவிகளைப் பார்க்கிலும் அதிக மதிப்புடையவர்கள்.
32“மனிதருக்கு முன்பாக என்னை யார் ஏற்றுக்கொள்கிறார்களோ, பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் முன்பாக நானும் அவர்களை ஏற்றுக்கொள்வேன். 33மனிதருக்கு முன்பாக யார் என்னை மறுதலிக்கிறார்களோ, பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக நானும் அவர்களை மறுதலிப்பேன்.
34“பூமியில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்தேன் என நீங்கள் நினைக்கவேண்டாம். நான் சமாதானத்தை அல்ல, ஒரு போர்வாளைக் கொண்டுவருவதற்காகவே வந்தேன்.
35“எப்படியெனில், ‘மகனுக்கும் தகப்பனுக்கும்,
மகளுக்கும் தாய்க்கும்,
மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்;
36ஒருவருடைய எதிரிகள் அவரது வீட்டாரே ஆவர்.’#10:36 மீகா 7:6
37“தம் தகப்பனையோ, தாயையோ என்னைவிட அதிகமாக நேசிக்கிறவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல; தம் மகனையோ மகளையோ, என்னைவிட அதிகமாக நேசிக்கிறவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல; 38தம் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல. 39தம் வாழ்வைக் காக்கிறவர்கள், அதை இழந்துபோவார்கள். தம் வாழ்வை எனக்காக இழக்கிறவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள்.
40“உங்களை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்னையும் ஏற்றுக்கொள்கிறார்கள். என்னை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்னை அனுப்பியவரையும் ஏற்றுக்கொள்கிறார்கள். 41ஒருவர் இறைவாக்கினராய் இருப்பதனால், அவரை இறைவாக்கினர் என்று யாராவது ஏற்றுக்கொண்டால், ஏற்றுக்கொண்டவர்கள் இறைவாக்கினருக்குரிய வெகுமதியைப் பெறுவார்கள். ஒருவர் நீதிமான் என்பதால் யாராவது அவரை ஏற்றுக்கொண்டால், ஏற்றுக்கொண்டவர்கள் நீதிமானுக்குரிய வெகுமதியைப் பெறுவார்கள். 42இந்தச் சிறியவர்களான எனது சீடர்களுக்கு யாராவது ஒரு குவளை குளிர்ந்த நீரைக் கொடுத்தால், கொடுத்தவர்கள் தமக்குரிய வெகுமதியை நிச்சயமாய் பெற்றுக்கொள்ளாமல் போகமாட்டார்கள் என்று உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
மத்தேயு 10: TCV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.