மத்தேயு 21:23-32

மத்தேயு 21:23-32 TCV

இயேசு ஆலய முற்றத்திற்குச் சென்று, அங்கே போதித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது தலைமை ஆசாரியர்களும் யூதரின் தலைவர்களும் அவரிடத்தில் வந்து அவரிடம், “எந்த அதிகாரத்தைக் கொண்டு, நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தது யார்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “நானும் உங்களிடத்தில் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் எனக்குப் பதில் சொன்னால், எந்த அதிகாரத்தைக் கொண்டு நான் இவற்றைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்வேன்” என்றார். “யோவானின் திருமுழுக்கு எங்கிருந்து வந்தது? அது பரலோகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா?” என்று கேட்டார். அவர்கள் இதைக்குறித்துத் தங்களுக்குள்ளே கலந்து பேசிக்கொண்டார்கள்: “அது பரலோகத்திலிருந்து வந்தது என்று நாம் சொன்னால், பின் ஏன் நீங்கள் யோவானை விசுவாசிக்கவில்லை? என்று கேட்பார். மனிதரிடமிருந்து என்று சொல்லவும், நமக்குப் பயமாயிருக்கிறது. ஏனெனில் மக்கள் எல்லோரும் யோவானை ஒரு இறைவாக்கினன் என்று ஏற்றுக்கொள்கிறார்கள்.” எனவே அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்கள். பின்பு இயேசு அவர்களிடம், “அப்படியானால், இந்தக் காரியங்களை எந்த அதிகாரத்தினால் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்றார். “பின்பு இயேசு, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். அவன் மூத்தவனிடம், ‘மகனே, நீ போய் இன்று திராட்சைத் தோட்டத்தில் வேலைசெய்’ என்றான். “அதற்கு அவன், ‘நான் போகமாட்டேன்’ என்றான், ஆனால் பிறகு தனது மனதை மாற்றிக்கொண்டு வேலைசெய்யப்போனான். “பின்பு அந்தத் தகப்பன் தனது மற்ற மகனிடம் போய், அதேவிதமாகச் சொன்னான். அதற்கு அவன், ‘அப்பா, நான் போகிறேன் என்றான்.’ ஆனால் அவன் போகவில்லை. “இவ்விருவரில், யார் தகப்பன் விரும்பியதைச் செய்தான்?” என்று கேட்டார். “மூத்த மகனே” என்று பதிலளித்தார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “ஆம் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், வரி வசூலிப்பவர்களும் வேசிகளும் உங்களுக்கு முன்னதாகவே இறைவனின் அரசிற்குள் செல்வார்கள். ஏனெனில் நீதியின் வழியை உங்களுக்குக் காட்டுவதற்கு, யோவான் உங்களிடம் வந்தான். நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை. ஆனால் வரி வசூலிப்பவர்களும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள். அதைக்கண்ட பின்பும், நீங்கள் மனந்திரும்பி அவனை விசுவாசிக்கவில்லை.