மத்தேயு 21:23-32

மத்தேயு 21:23-32 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு ஆலய முற்றத்திற்குச் சென்று, அங்கே போதித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது தலைமை ஆசாரியர்களும் யூதரின் தலைவர்களும் அவரிடத்தில் வந்து அவரிடம், “எந்த அதிகாரத்தைக் கொண்டு, நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தது யார்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “நானும் உங்களிடத்தில் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் எனக்குப் பதில் சொன்னால், எந்த அதிகாரத்தைக் கொண்டு நான் இவற்றைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்வேன்” என்றார். “யோவானின் திருமுழுக்கு எங்கிருந்து வந்தது? அது பரலோகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா?” என்று கேட்டார். அவர்கள் இதைக்குறித்துத் தங்களுக்குள்ளே கலந்து பேசிக்கொண்டார்கள்: “அது பரலோகத்திலிருந்து வந்தது என்று நாம் சொன்னால், பின் ஏன் நீங்கள் யோவானை விசுவாசிக்கவில்லை? என்று கேட்பார். மனிதரிடமிருந்து என்று சொல்லவும், நமக்குப் பயமாயிருக்கிறது. ஏனெனில் மக்கள் எல்லோரும் யோவானை ஒரு இறைவாக்கினன் என்று ஏற்றுக்கொள்கிறார்கள்.” எனவே அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்கள். பின்பு இயேசு அவர்களிடம், “அப்படியானால், இந்தக் காரியங்களை எந்த அதிகாரத்தினால் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்றார். “பின்பு இயேசு, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். அவன் மூத்தவனிடம், ‘மகனே, நீ போய் இன்று திராட்சைத் தோட்டத்தில் வேலைசெய்’ என்றான். “அதற்கு அவன், ‘நான் போகமாட்டேன்’ என்றான், ஆனால் பிறகு தனது மனதை மாற்றிக்கொண்டு வேலைசெய்யப்போனான். “பின்பு அந்தத் தகப்பன் தனது மற்ற மகனிடம் போய், அதேவிதமாகச் சொன்னான். அதற்கு அவன், ‘அப்பா, நான் போகிறேன் என்றான்.’ ஆனால் அவன் போகவில்லை. “இவ்விருவரில், யார் தகப்பன் விரும்பியதைச் செய்தான்?” என்று கேட்டார். “மூத்த மகனே” என்று பதிலளித்தார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “ஆம் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், வரி வசூலிப்பவர்களும் வேசிகளும் உங்களுக்கு முன்னதாகவே இறைவனின் அரசிற்குள் செல்வார்கள். ஏனெனில் நீதியின் வழியை உங்களுக்குக் காட்டுவதற்கு, யோவான் உங்களிடம் வந்தான். நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை. ஆனால் வரி வசூலிப்பவர்களும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள். அதைக்கண்ட பின்பும், நீங்கள் மனந்திரும்பி அவனை விசுவாசிக்கவில்லை.

மத்தேயு 21:23-32 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர் தேவாலயத்தில் வந்து, உபதேசம்பண்ணும்போது, பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக: நானும் உங்களிடம் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நானும் எந்த அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன். யோவான் கொடுத்த ஞானஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனிதர்களால் உண்டாயிற்றோ? யாரால் உண்டானது? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னே ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்; மனிதர்களால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், மக்களுக்குப் பயப்படுகிறோம், எல்லோரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று, தங்களுக்குள்ளே ஆலோசனைசெய்து, இயேசுவிற்கு மறுமொழியாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது, அவர்: நானும் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்வதில்லை என்றார். ஆனாலும், உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சைத்தோட்டத்தில் வேலைசெய் என்றான். அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆனாலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப்போனான். இளையவனிடத்திலும் அவன் வந்து, அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை. இவ்விருவரில் எவன் தகப்பனுடைய விருப்பத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன்தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: வரி வசூலிப்பவர்களும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாக உங்களிடம் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; வரி வசூலிப்பவர்களும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாவது மனஸ்தாபப்படவில்லை என்றார்.

மத்தேயு 21:23-32 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு தேவாலயத்திற்குச் சென்றார். அவர் அங்கே போதனை செய்துகொண்டிருந்தபொழுது, தலைமை ஆசாரியர்களும், மூத்த தலைவர்களும் அவரிடம் வந்தனர். அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குச் சொல், இவைகளைச் செய்ய உனக்கு என்ன அதிகாரம் உள்ளது? உனக்கு யார் இந்த அதிகாரத்தைக் கொடுத்தது?” என்று வினவினார்கள். இயேசு அவர்களுக்கு, “நானும் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் எனக்குப் பதில் சொன்னால், நானும் இவைகளைச் செய்ய என்ன அதிகாரம் பெற்றிருக்கிறேன் என்பதைக் கூறுகிறேன். யோவான் மக்களுக்கு கொடுத்த ஞானஸ்நானம் தேவனால் வந்ததா, அல்லது மனிதரால் வந்ததா? சொல்லுங்கள்” என்று மறு மொழி உரைத்தார். தலைமை ஆசாரியர்களும் தலைவர்களும் இயேசுவின் கேள்வியைக் குறித்து விவாதித்தனர். அவர்கள் தங்களுக்குள், “‘யோவானின் ஞானஸ்நானம் தேவனால் ஆனது’ என்று நாம் கூறுவோமானால், இயேசு நம்மைப் பார்த்து, ‘பின் ஏன் நீங்கள் யோவானை நம்பவில்லை?’ என்று கேட்பார். மாறாக ‘அது மனிதனால் ஆனது’ என்றால் மக்கள் நம்மீது கோபம் கொள்வார்கள். ஏனென்றால் மக்கள் அனைவரும் யோவானை ஒரு தீர்க்கதரிசி என்று நம்புகிறார்கள்” என்று கூறிக் கொண்டார்கள். எனவே அவர்கள் இயேசுவிடம், “யோவானின் அதிகாரம் எங்கிருந்து வந்தது என்பது எங்களுக்குத் தெரியாது” என்று கூறினார்கள். பின்பு இயேசு, “அப்படியெனில் இவைகளைச் செய்வதற்கு எனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதையும் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்று கூறினார். “ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். அவன் தனது முதல் மகனிடம் சென்று, ‘மகனே இன்று என் திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்றான். “அதற்கு அவன், ‘போக முடியாது’ என்று பதிலளித்தான். ஆனால் பின்னர், அவனே தான் போய் வேலை செய்ய வேண்டும் என நினைத்தான். அவ்வாறே செய்தான். “பின்னர், அத்தந்தை தனது மற்றொரு மகனிடம் சென்றான். அவனிடம், ‘மகனே, இன்றைக்கு எனது திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்றான். அதற்கு அவனது குமாரன், ‘சரி தந்தையே, நான் போய் வேலை செய்கிறேன்’ என்றான். ஆனால், அவன் வேலைக்குச் செல்லவில்லை. “இரண்டு குமாரர்களில் யார் தனது தந்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்தான்?” என்று இயேசு கேட்டார். யூதத் தலைவர்கள், “மூத்த குமாரன்” என்று பதில் சொன்னார்கள். அப்போது இயேசு, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், வரி வசூலிப்பவர்களும், வேசிகளும், தீயவர்கள் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். ஆனால் அவர்கள் உங்களுக்கு முன்னரே பரலோக இராஜ்யத்திற்குள் நுழைவார்கள். வாழ்க்கையின் சரியான பாதையை உங்களுக்குக் காட்டுவதற்காக யோவான் வந்தான். ஆனால், நீங்கள் யோவானை நம்பவில்லை. வரி வசூலிப்பவர்களும் வேசிகளும் யோவானை நம்பினார்கள். அவர்கள் யோவான் மீது நம்பிக்கை வைத்ததை நீங்கள் கண்டீர்கள். ஆனாலும் நீங்கள் மனந்திருந்தி யோவானை நம்பவில்லை” என்றார்.

மத்தேயு 21:23-32 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர் தேவாலயத்தில் வந்து, உபதேசம்பண்ணுகையில், பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள். இயேசு பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன். யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? யாரால் உண்டாயிற்று? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்; மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படுகிறோம், எல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று, தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி, இயேசுவுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது, அவர்: நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார். ஆயினும், உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான். அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆகிலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப்போனான். இளையவனிடத்திலும் அவன் வந்து, அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை. இவ்விருவரில் எவன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன்தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; ஆயக்காரரும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாகிலும் மனஸ்தாபப்படவில்லை என்றார்.