மாற்கு 8:1-10

மாற்கு 8:1-10 TCV

அந்நாட்களில், மக்கள் மீண்டும் ஒரு பெருங்கூட்டமாய் திரண்டிருந்தார்கள். அப்பொழுது சாப்பிட அவர்களிடம் ஒன்றும் இல்லாதிருந்ததினால், இயேசு தமது சீடரைத் தம்மிடமாய்க் கூப்பிட்டு, “நான் இந்த மக்களுக்காக பரிதாபப்படுகிறேன்; இவர்கள் என்னுடன் ஏற்கெனவே மூன்று நாட்கள் தங்கிவிட்டார்கள். சாப்பிடுவதற்கோ, அவர்களிடம் ஒன்றுமில்லை. பசியோடு நான் அவர்களை வீட்டிற்கு அனுப்பினால், வழியில் சோர்ந்து விழுவார்கள். ஏனெனில், சிலர் தூரத்திலிருந்து வந்திருக்கிறார்களே” என்றார். அவருடைய சீடர்கள் அதற்குப் பதிலாக, “அவர்களுக்குக் கொடுப்பதற்குப் போதுமான உணவை, சற்று தூரமான இந்த இடத்திலே எங்கே, யாரால் பெறமுடியும்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஏழு அப்பங்கள் இருக்கின்றன” என்று பதிலளித்தார்கள். இயேசு அங்கிருந்த மக்கள் கூட்டத்தைத் தரையில் உட்காரும்படி சொன்னார். பின்பு அவர் அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து நன்றி செலுத்தியபின், அவற்றைப் பிட்டு, அந்த மக்களுக்குக் கொடுக்கும்படி, தமது சீடர்களிடம் கொடுத்தார். அதை அவர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள். அவர்களிடம் சில மீன்களும் இருந்தன; அவற்றிற்காகவும் இயேசு நன்றி செலுத்தி, அவற்றையும் மக்களுக்குப் பகிர்ந்து கொடுக்கும்படி, சீடர்களுக்குச் சொன்னார். மக்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். அதற்குப் பின்பு மீதியான அப்பத் துண்டுகளைச் சீடர்கள் ஏழு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள். கிட்டத்தட்ட நாலாயிரம்பேர் அங்கிருந்தார்கள். இயேசு அவர்களை அனுப்பிவிட்டபின், தமது சீடர்களுடனேகூட படகில் ஏறி, தல்மனூத்தா பகுதிக்கு வந்தார்.