மாற்கு 8:1-10

மாற்கு 8:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அந்நாட்களில், மக்கள் மீண்டும் ஒரு பெருங்கூட்டமாய் திரண்டிருந்தார்கள். அப்பொழுது சாப்பிட அவர்களிடம் ஒன்றும் இல்லாதிருந்ததினால், இயேசு தமது சீடரைத் தம்மிடமாய்க் கூப்பிட்டு, “நான் இந்த மக்களுக்காக பரிதாபப்படுகிறேன்; இவர்கள் என்னுடன் ஏற்கெனவே மூன்று நாட்கள் தங்கிவிட்டார்கள். சாப்பிடுவதற்கோ, அவர்களிடம் ஒன்றுமில்லை. பசியோடு நான் அவர்களை வீட்டிற்கு அனுப்பினால், வழியில் சோர்ந்து விழுவார்கள். ஏனெனில், சிலர் தூரத்திலிருந்து வந்திருக்கிறார்களே” என்றார். அவருடைய சீடர்கள் அதற்குப் பதிலாக, “அவர்களுக்குக் கொடுப்பதற்குப் போதுமான உணவை, சற்று தூரமான இந்த இடத்திலே எங்கே, யாரால் பெறமுடியும்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஏழு அப்பங்கள் இருக்கின்றன” என்று பதிலளித்தார்கள். இயேசு அங்கிருந்த மக்கள் கூட்டத்தைத் தரையில் உட்காரும்படி சொன்னார். பின்பு அவர் அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து நன்றி செலுத்தியபின், அவற்றைப் பிட்டு, அந்த மக்களுக்குக் கொடுக்கும்படி, தமது சீடர்களிடம் கொடுத்தார். அதை அவர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள். அவர்களிடம் சில மீன்களும் இருந்தன; அவற்றிற்காகவும் இயேசு நன்றி செலுத்தி, அவற்றையும் மக்களுக்குப் பகிர்ந்து கொடுக்கும்படி, சீடர்களுக்குச் சொன்னார். மக்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். அதற்குப் பின்பு மீதியான அப்பத் துண்டுகளைச் சீடர்கள் ஏழு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள். கிட்டத்தட்ட நாலாயிரம்பேர் அங்கிருந்தார்கள். இயேசு அவர்களை அனுப்பிவிட்டபின், தமது சீடர்களுடனேகூட படகில் ஏறி, தல்மனூத்தா பகுதிக்கு வந்தார்.

மாற்கு 8:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அந்த நாட்களிலே அநேக மக்கள் கூடிவந்திருக்கும்போது, அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாததினால், இயேசு தம்முடைய சீடர்களை அழைத்து: மக்களுக்காகப் பரிதாபப்படுகிறேன், இவர்கள் இப்பொழுது என்னிடம் தங்கியிருந்த மூன்றுநாட்களாகச் சாப்பிட ஒன்றுமில்லாமல் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்திருப்பதினால், நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பிவிட்டால், போகும் வழியில் சோர்ந்துபோவார்களே என்றார். அதற்கு அவருடைய சீடர்கள்: இந்த வனாந்திரத்திலே ஒருவன் எங்கே இருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனை மக்களுக்குக் கொடுத்து திருப்தியாக்கமுடியும் என்றார்கள். அதற்கு அவர்: உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கிறது என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்கள் இருக்கிறது என்றார்கள். அப்பொழுது அவர் மக்களைத் தரையிலே பந்தி உட்காரக் கட்டளையிட்டு, அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாற சீடர்களிடம் கொடுத்தார்; அவர்கள் மக்களுக்குப் பரிமாறினார்கள். சில சிறிய மீன்களும் அவர்களிடம் இருந்தது; அவர் அவைகளையும் ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறச் சொன்னார். அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியானார்கள்; மீதியான அப்பங்களை ஏழுகூடை நிறைய எடுத்தார்கள். சாப்பிட்டவர்கள் ஏறக்குறைய நான்காயிரம்பேராக இருந்தார்கள். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார். உடனே அவர் தம்முடைய சீடர்களோடு படகில் ஏறி, தல்மனூத்தாவின் எல்லைகளுக்கு வந்தார்.

மாற்கு 8:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

மற்றொருமுறை இயேசுவுடன் ஏராளமான மக்கள் இருந்தனர். மக்களுக்கு உண்ண உணவில்லாமல் இருந்தது. ஆகையால் இயேசு தன்னிடம் சீஷர்களை அழைத்தார். “நான் இம்மக்களுக்காகப் பெரிதும் வருந்துகிறேன். அவர்கள் என்னோடு மூன்று நாட்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போது உணவில்லை. அவர்களைப் பசியோடு வீட்டுக்கு அனுப்ப நான் விரும்பவில்லை. அவர்கள் உண்ணாமல் போனால், வழியில் சோர்வடைந்து விடலாம். சிலர் இங்கிருந்து வெகு தூரத்துக்குச் செல்ல வேண்டும்” என்றார். இயேசுவின் சீஷர்களோ, “நாம் எந்த ஊருக்கும் அருகில் இல்லை. இங்குள்ள அனைவருக்கும் உணவளிக்க நாம் எங்கிருந்து உணவுகளைப் பெறுவது?” என்று கேட்டனர். “உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன?” என்று இயேசு கேட்டார். “எங்களிடம் ஏழு அப்பங்கள் மட்டுமே உள்ளன” என்று சீஷர்கள் கூறினர். இயேசு அந்த மக்களைத் தரையில் உட்காரச் சொன்னர். பிறகு அவர் ஏழு அப்பங்களையும் எடுத்து தேவனுக்கு நன்றி சொன்னார். இயேசு அப்பங்களைப் பங்குவைத்து சீஷர்களிடம் கொடுத்தார். அவற்றை மக்களுக்குக் கொடுக்குமாறு இயேசு கேட்டுக்கொண்டார். சீஷர்கள் அவர் சொன்னபடி செய்தனர். அச்சீஷர்கள் சில மீன்களையும் வைத்திருந்தனர். அவற்றையும் இயேசு வாங்கிப் பிரார்த்தனை செய்து, மக்களுக்குக் கொடுக்கும்படி சீஷர்களிடம் கூறினார். அனைத்து மக்களும் திருப்தியாக உண்டனர். பிறகு மீதியான உணவுப் பொருட்களை ஏழு கூடைகள் நிறையச் சேர்த்தனர். அங்கே ஏறக்குறைய 4,000 ஆண்கள் இருந்தனர். அவர்கள் உண்ட பின்னர், வீட்டிற்கு அனுப்பி வைத்தார். பிறகு இயேசு ஒரு படகில் ஏறி தன் சீஷர்களோடு தல்மனூத்தா பகுதிக்குச் சென்றார்.

மாற்கு 8:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அந்த நாட்களிலே திரளான ஜனங்கள் கூடிவந்திருக்கையில், அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாதபோது, இயேசு தம்முடைய சீஷரை அழைத்து: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் இப்பொழுது என்னிடத்தில் தங்கியிருந்த மூன்றுநாளாய்ச் சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள். இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்தவர்களாகையால், நான் இவர்களைப் பட்டினியாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் சோர்ந்துபோவார்களே என்றார். அதற்கு அவருடைய சீஷர்கள்: இந்த வனாந்தரத்திலே ஒருவன் எங்கேயிருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனைபேர்களைத் திருப்தியாக்கக்கூடும் என்றார்கள். அதற்கு அவர்: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்கள் உண்டு என்றார்கள். அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையிலே பந்தியிருக்கக் கட்டளையிட்டு, இந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்; அவர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள். சில சிறுமீன்களும் அவர்களிடத்தில் இருந்தது; அவர் அவைகளையும் ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறும்படி சொன்னார். அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழுகூடை நிறைய எடுத்தார்கள். சாப்பிட்டவர்கள் ஏறக்குறைய நாலாயிரம்பேராயிருந்தார்கள். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார். உடனே அவர் தம்முடைய சீஷரோடேகூடப் படவில் ஏறி, தல்மனூத்தாவின் எல்லைகளில் வந்தார்.