நெகேமியா 12:41-47

நெகேமியா 12:41-47 TCV

அத்துடன் ஆசாரியர்களான எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனனியா ஆகியோரும் தங்கள் எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு நின்றார்கள். மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் ஆகியோரும் நின்றார்கள். இந்தப் பாடகர் குழுக்கள் யெஷரகியாவின் தலைமையின்கீழ் பாடினார்கள். இறைவன் அவர்களுக்கு அதிக சந்தோஷத்தை அந்த நாளில் கொடுத்தபடியால், பெரும் பலிகளைச் செலுத்தி, சந்தோஷப்பட்டார்கள். பெண்களும் குழந்தைகளும்கூட சந்தோஷப்பட்டார்கள். எருசலேமிலிருந்து மகிழ்ச்சியின் சத்தம் வெகுதூரம்வரை கேட்கக் கூடியதாயிருந்தது. அந்நாட்களில் நன்கொடைகளுக்கும், முதற்பலன்களுக்கும், தசமபாகங்களுக்கும் உரிய களஞ்சியங்களுக்கு பொறுப்பாயிருக்கும்படி மனிதர் நியமிக்கப்பட்டார்கள். பட்டணத்தைச் சுற்றியுள்ள வயல்களிலிருந்து லேவியருக்கும் ஆசாரியருக்கும் கொடுக்கும்படி, மோசேயின் சட்டத்தில் கட்டளையிட்டிருந்தபடி பங்கைச் சேகரித்து களஞ்சியங்களுக்கு கொண்டுவர வேண்டியது அவர்களுடைய பொறுப்பாயிருந்தது. ஏனெனில் யூதா மக்கள் பணிசெய்யும் ஆசாரியர்களிலும், லேவியரிலும் மகிழ்ச்சியடைந்தனர். தாவீதும் அவனுடைய மகன் சாலொமோனும் கட்டளையிட்டபடி, பாடகரும் வாசல் காவலரும் தங்கள் இறைவனின் பணியையும், சுத்திகரிக்கும் பணியையும் செய்தார்கள். ஏனெனில், வெகுகாலத்துக்கு முன்பே தாவீது, ஆசாப் ஆகியோரின் காலத்தில், பாடகர்களுக்குத் தலைவர்கள் நியமிக்கப்பட்டு, இறைவனுக்கு நன்றியும் துதியும் செலுத்திவந்தார்கள். ஆகவே செருபாபேல், நெகேமியா ஆகியோரின் நாட்களில் இஸ்ரயேல் மக்கள் யாவரும், பாடகருக்கும், வாசல் காவலர்களுக்கும் அவர்களுடைய அன்றாடத் தேவைகளைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் மற்ற லேவியர்களுக்கும், அவர்களுக்கான உரிய பங்கை ஒதுக்கிவைத்தார்கள்; லேவியர்கள் அதிலிருந்து ஒரு பங்கை மற்ற ஆரோனின் சந்ததிகளுக்குக் கொடுத்தார்கள்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த நெகேமியா 12:41-47