நெகேமியா 12:41-47

நெகேமியா 12:41-47 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பூரிகைகளைப் பிடிக்கிற எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனானியா என்கிற ஆசாரியர்களும், மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் என்பவர்களும் நின்றோம்; பாடகரும், அவர்கள் விசாரிப்புக்காரனாகிய யெஷரகியாவும் சத்தமாய்ப் பாடினார்கள். அந்நாளிலே மிகுதியான பலிகளைச் செலுத்தி, தேவன் தங்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதினால் மகிழ்ச்சியாயிருந்தார்கள்; ஸ்திரீகளும் பிள்ளைகளுங்கூடக் களிகூர்ந்தார்கள்; எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது. அன்றையதினம் பொக்கிஷங்களையும், படைப்புகளையும், முதல் கனிகளையும், தசமபாகங்களையும் வைக்கும் அறைகளின்மேல், ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் நியாயப்பிரமாணத்தின்படியே வரவேண்டிய பட்டணங்களுடைய நிலங்களின் பங்குகளை அவைகளில் சேர்க்கும்படிக்கு, சில மனுஷர் விசாரிப்புக்காரராக வைக்கப்பட்டார்கள்; ஊழியஞ்செய்து நிற்கிற ஆசாரியர்மேலும் லேவியர்மேலும் யூதா மனிதர் சந்தோஷமாயிருந்தார்கள். பாடகரும், வாசல் காவலாளரும், தாவீதும் அவன் குமாரனாகிய சாலொமோனும் கற்பித்தபடியே தங்கள் தேவனுடைய காவலையும், சுத்திகரிப்பின் காவலையும் காத்தார்கள். தாவீதும் ஆசாப்பும் இருந்த பூர்வநாட்களில் பாடகரின் தலைவரும் வைக்கப்பட்டு, தேவனுக்குத் துதியும் தோத்திரங்களும் செலுத்துகிற சங்கீதங்கள் திட்டம்பண்ணப்பட்டிருந்தது. ஆகையால் செருபாபேலின் நாட்களிலும், நெகேமியாவின் நாட்களிலும், இஸ்ரவேலர் எல்லாரும் பாடகருக்கும் வாசல் காவலாளருக்கும் அன்றாடகத் திட்டமாகிய பங்குகளைக் கொடுத்தார்கள்; அவர்கள் லேவியருக்கென்று பிரதிஷ்டைபண்ணிக்கொடுத்தார்கள்; லேவியர் ஆரோனின் புத்திரருக்கென்று அவர்கள் பங்கைப் பிரதிஷ்டைபண்ணிக்கொடுத்தார்கள்.

நெகேமியா 12:41-47 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அத்துடன் ஆசாரியர்களான எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனனியா ஆகியோரும் தங்கள் எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு நின்றார்கள். மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் ஆகியோரும் நின்றார்கள். இந்தப் பாடகர் குழுக்கள் யெஷரகியாவின் தலைமையின்கீழ் பாடினார்கள். இறைவன் அவர்களுக்கு அதிக சந்தோஷத்தை அந்த நாளில் கொடுத்தபடியால், பெரும் பலிகளைச் செலுத்தி, சந்தோஷப்பட்டார்கள். பெண்களும் குழந்தைகளும்கூட சந்தோஷப்பட்டார்கள். எருசலேமிலிருந்து மகிழ்ச்சியின் சத்தம் வெகுதூரம்வரை கேட்கக் கூடியதாயிருந்தது. அந்நாட்களில் நன்கொடைகளுக்கும், முதற்பலன்களுக்கும், தசமபாகங்களுக்கும் உரிய களஞ்சியங்களுக்கு பொறுப்பாயிருக்கும்படி மனிதர் நியமிக்கப்பட்டார்கள். பட்டணத்தைச் சுற்றியுள்ள வயல்களிலிருந்து லேவியருக்கும் ஆசாரியருக்கும் கொடுக்கும்படி, மோசேயின் சட்டத்தில் கட்டளையிட்டிருந்தபடி பங்கைச் சேகரித்து களஞ்சியங்களுக்கு கொண்டுவர வேண்டியது அவர்களுடைய பொறுப்பாயிருந்தது. ஏனெனில் யூதா மக்கள் பணிசெய்யும் ஆசாரியர்களிலும், லேவியரிலும் மகிழ்ச்சியடைந்தனர். தாவீதும் அவனுடைய மகன் சாலொமோனும் கட்டளையிட்டபடி, பாடகரும் வாசல் காவலரும் தங்கள் இறைவனின் பணியையும், சுத்திகரிக்கும் பணியையும் செய்தார்கள். ஏனெனில், வெகுகாலத்துக்கு முன்பே தாவீது, ஆசாப் ஆகியோரின் காலத்தில், பாடகர்களுக்குத் தலைவர்கள் நியமிக்கப்பட்டு, இறைவனுக்கு நன்றியும் துதியும் செலுத்திவந்தார்கள். ஆகவே செருபாபேல், நெகேமியா ஆகியோரின் நாட்களில் இஸ்ரயேல் மக்கள் யாவரும், பாடகருக்கும், வாசல் காவலர்களுக்கும் அவர்களுடைய அன்றாடத் தேவைகளைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் மற்ற லேவியர்களுக்கும், அவர்களுக்கான உரிய பங்கை ஒதுக்கிவைத்தார்கள்; லேவியர்கள் அதிலிருந்து ஒரு பங்கை மற்ற ஆரோனின் சந்ததிகளுக்குக் கொடுத்தார்கள்.

நெகேமியா 12:41-47 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பூரிகைகளைப் பிடிக்கிற எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனனியா என்கிற ஆசாரியர்களும், மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் என்பவர்களும் நின்றோம்; பாடகர்களும், அவர்களை நடத்துகிறவனாகிய யெஷரகியாவும் சத்தமாகப் பாடினார்கள். அந்த நாளிலே அதிகமான பலிகளைச் செலுத்தி, தேவன் தங்களுக்குப் பெரிய சந்தோஷத்தை உண்டாக்கியதால் மகிழ்ச்சியாக இருந்தார்கள்; பெண்களும் பிள்ளைகளும்கூடக் களிகூர்ந்தார்கள்; எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது. அன்றையதினம் பொக்கிஷங்களையும், படைப்புகளையும், முதற்பழங்களையும், தசமபாகங்களையும் வைக்கும் அறைகளின்மேல், ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் நியாயப்பிரமாணத்தின்முறையில் வரவேண்டிய பட்டணங்களுடைய நிலங்களின் பங்குகளை அவைகளில் சேர்ப்பதற்கு, சில மனிதர்கள் பொறுப்பாளர்களாக வைக்கப்பட்டார்கள்; ஊழியஞ்செய்து நிற்கிற ஆசாரியர்கள்மேலும் லேவியர்கள்மேலும் யூதா மனிதர்கள் சந்தோஷமாக இருந்தார்கள். பாடகர்களும், வாசல் காவலாளர்களும், தாவீதும் அவன் மகனாகிய சாலொமோனும் கற்பித்தபடி தங்கள் தேவனுடைய காவலையும், சுத்திகரிப்பின் காவலையும் காத்தார்கள். தாவீதும் ஆசாப்பும் இருந்த பூர்வநாட்களில் பாடகர்களின் தலைவர்களும் வைக்கப்பட்டு, தேவனுக்குத் துதியும் ஸ்தோத்திரங்களும் செலுத்துகிற சங்கீதங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆகையால் செருபாபேலின் நாட்களிலும், நெகேமியாவின் நாட்களிலும், இஸ்ரவேலர்கள் எல்லோரும் பாடகர்களுக்கும் வாசல் காவலாளர்களுக்கும் அனுதின ஒழுங்கின்படி வேலைளைக் கொடுத்தார்கள்; அவர்கள் லேவியர்களுக்கென்று பிரதிஷ்டை செய்துகொடுத்தார்கள்; லேவியர்கள் ஆரோனின் சந்ததிக்கென்று அவர்கள் வேலைகளைப் பிரதிஷ்டை செய்துகொடுத்தார்கள்.

நெகேமியா 12:41-47 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு இந்த ஆசாரியர்கள் ஆலயத்திலுள்ள தங்களது இடங்களில் நின்றார்கள். எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனானியா, இந்த ஆசாரியர்கள் தங்களுடன் எக்காளங்களை வைத்திருந்தனர். பிறகு ஆலயத்தில் இந்த ஆசாரியர்கள் தங்கள் இடங்களில் நின்றார்கள்: மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர். பிறகு இரண்டு பாடகர் குழுக்களும் யெஷரகியாவின் தலைமையில் பாட ஆரம்பித்தனர். எனவே அந்தச் சிறப்பு நாளில் ஆசாரியர்கள் ஏராளமான பலிகளைச் செலுத்தினார்கள். ஒவ்வொருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். தேவன் ஒவ்வொருவரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருந்தார். பெண்களும் குழந்தைகளுங்கூட மகிழ்ச்சியோடு இருந்தார்கள். எருசலேமில் இருந்து வருகின்ற மகிழ்ச்சிகரமான ஓசைகளை தொலைதூரத்தில் உள்ள ஜனங்களால் கூட கேட்க முடிந்தது. அந்த நாளில் சேமிப்பு அறைகளுக்கான பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். ஜனங்கள் தங்களது முதல் பழங்களையும், விளைச்சலில் பத்தில் ஒரு பங்கையும் கொண்டு வந்தனர். எனவே அதற்கு பொறுப்பானவர்கள் அப்பொருட்களை சேமிப்பு அறைகளில் வைத்தனர். ஆசாரியர்களும் லேவியர்களும் தங்கள் கடமையில் சரியாக இருப்பதைப் பார்த்து யூத ஜனங்கள் மகிழ்ச்சியடைந்தனர். எனவே அவர்கள் சேமிப்பு அறைகளில் வைப்பதற்குப் பலவற்றைக் கொண்டுவந்தனர். ஆசாரியர்களும் லேவியர்களும் தங்கள் தேவனுக்குச் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்தனர். அவர்கள் ஜனங்களை சுத்தமாக்கும் சடங்குகளைச் செய்தனர். பாடகர்களும் வாசல் காவலர்களும் தங்கள் பங்கைச் செய்தனர். அவர்கள் தாவீதும் சாலொமோனும் கட்டளையிட்டபடியே செய்தனர். (நீண்ட காலத்துக்கு முன்னால், தாவீதின் காலத்தில் ஆசாப் இயக்குநராக இருந்தான். அவனிடம் ஏராளமான துதிப் பாடல்கள் மற்றும் தேவனுக்கு நன்றி உரைக்கும் பாடல்களும் இருந்தன.) எனவே செருபாபேலின் காலத்திலும் நெகேமியாவின் காலத்திலும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பாடகர்களுக்கும், வாசல் காவலர்களுக்கும் ஒவ்வொரு நாளும் உதவிசெய்து வந்தனர். ஜனங்கள் மற்ற லேவியர்களுக்குக் கொடுக்கவேண்டியதைக் கொடுக்க ஏற்பாடுச்செய்தனர். லேவியர்கள் ஆரோனின் (ஆசாரியர்) சந்ததிக்கென்று உரிய பங்கைக் கொடுக்க ஏற்பாடு செய்தனர்.