நெகேமியாவின் புத்தகம் 12:41-47

நெகேமியாவின் புத்தகம் 12:41-47 TAERV

பிறகு இந்த ஆசாரியர்கள் ஆலயத்திலுள்ள தங்களது இடங்களில் நின்றார்கள். எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனானியா, இந்த ஆசாரியர்கள் தங்களுடன் எக்காளங்களை வைத்திருந்தனர். பிறகு ஆலயத்தில் இந்த ஆசாரியர்கள் தங்கள் இடங்களில் நின்றார்கள்: மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர். பிறகு இரண்டு பாடகர் குழுக்களும் யெஷரகியாவின் தலைமையில் பாட ஆரம்பித்தனர். எனவே அந்தச் சிறப்பு நாளில் ஆசாரியர்கள் ஏராளமான பலிகளைச் செலுத்தினார்கள். ஒவ்வொருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். தேவன் ஒவ்வொருவரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருந்தார். பெண்களும் குழந்தைகளுங்கூட மகிழ்ச்சியோடு இருந்தார்கள். எருசலேமில் இருந்து வருகின்ற மகிழ்ச்சிகரமான ஓசைகளை தொலைதூரத்தில் உள்ள ஜனங்களால் கூட கேட்க முடிந்தது. அந்த நாளில் சேமிப்பு அறைகளுக்கான பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். ஜனங்கள் தங்களது முதல் பழங்களையும், விளைச்சலில் பத்தில் ஒரு பங்கையும் கொண்டு வந்தனர். எனவே அதற்கு பொறுப்பானவர்கள் அப்பொருட்களை சேமிப்பு அறைகளில் வைத்தனர். ஆசாரியர்களும் லேவியர்களும் தங்கள் கடமையில் சரியாக இருப்பதைப் பார்த்து யூத ஜனங்கள் மகிழ்ச்சியடைந்தனர். எனவே அவர்கள் சேமிப்பு அறைகளில் வைப்பதற்குப் பலவற்றைக் கொண்டுவந்தனர். ஆசாரியர்களும் லேவியர்களும் தங்கள் தேவனுக்குச் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்தனர். அவர்கள் ஜனங்களை சுத்தமாக்கும் சடங்குகளைச் செய்தனர். பாடகர்களும் வாசல் காவலர்களும் தங்கள் பங்கைச் செய்தனர். அவர்கள் தாவீதும் சாலொமோனும் கட்டளையிட்டபடியே செய்தனர். (நீண்ட காலத்துக்கு முன்னால், தாவீதின் காலத்தில் ஆசாப் இயக்குநராக இருந்தான். அவனிடம் ஏராளமான துதிப் பாடல்கள் மற்றும் தேவனுக்கு நன்றி உரைக்கும் பாடல்களும் இருந்தன.) எனவே செருபாபேலின் காலத்திலும் நெகேமியாவின் காலத்திலும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பாடகர்களுக்கும், வாசல் காவலர்களுக்கும் ஒவ்வொரு நாளும் உதவிசெய்து வந்தனர். ஜனங்கள் மற்ற லேவியர்களுக்குக் கொடுக்கவேண்டியதைக் கொடுக்க ஏற்பாடுச்செய்தனர். லேவியர்கள் ஆரோனின் (ஆசாரியர்) சந்ததிக்கென்று உரிய பங்கைக் கொடுக்க ஏற்பாடு செய்தனர்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த நெகேமியாவின் புத்தகம் 12:41-47