நீதிமொழி 17:15-28

நீதிமொழி 17:15-28 TCV

குற்றவாளியை விடுதலை செய்கிறதும் குற்றமற்றவரை தண்டனைக்கு உள்ளாக்குகிறதுமான இரண்டையும் யெகோவா அருவருக்கிறார். மூடர் கையில் பணம் இருந்து என்ன பயன்? ஞானத்தைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு மனமில்லையே. நண்பன் எக்காலத்திலும் அன்பாயிருக்கிறான்; இக்கட்டு காலத்தில் உதவி செய்யவே சகோதரன் பிறந்திருக்கிறான். மதியீனர் கடனுக்காக உத்திரவாதம் கொடுத்து, தன் அயலாரின் கடன்களுக்கான பாதுகாப்பு உறுதியளிக்கிறார்கள். வாக்குவாதத்தை விரும்புகிறவர்கள் பாவத்தை விரும்புகிறார்கள்; வாசலை உயர்த்திக் கட்டுகிறவர்கள் அழிவையே அழைக்கிறார்கள். தீமையான இருதயமுள்ளவர்கள் நன்மையைக் காண்பதில்லை; பொய் நாவுள்ளவர்கள் துன்பத்தில் வீழ்கிறார்கள். முட்டாளைப் பெற்றவருக்கு வருத்தம்; இறைவனற்ற மதியீனரின் பெற்றோருக்கு மகிழ்ச்சியில்லை. மகிழ்ச்சியான இருதயம் நல்ல மருந்து, ஆனால் நொறுங்கிய ஆவி எலும்புகளை உலரப்பண்ணுகிறது. கொடியவர்கள் இரகசியமாக இலஞ்சம் வாங்கி, நீதியின் வழியைப் புரட்டுகிறார்கள். பகுத்தறிவு உள்ளவர்கள் ஞானத்தில் கண்ணோக்கமாய் இருப்பார்கள்; ஆனால் மூடரின் கண்களோ பூமியின் கடைசிவரை அலைகிறது. மதிகெட்ட பிள்ளையால் தன் தந்தைக்குத் துன்பமும், தன்னைப் பெற்றவளுக்குக் கசப்பும் இருக்கும். குற்றமற்றவரைத் தண்டிப்பது நல்லதல்ல, உத்தமமான அதிகாரிகளை தண்டிப்பதும் நல்லதல்ல. அறிவுள்ளவர்கள் வார்த்தைகளை அடக்குகிறார்கள்; புரிந்துகொள்ளுதல் உள்ளவர்கள் சாந்தமாயிருக்கிறார்கள். அமைதியாக இருந்தால், மூடரும் ஞானமுள்ளவர் என்று எண்ணப்படுவர்; தன் நாவை அடக்கினால் புத்திமான்களாகவும் தோன்றுவார்கள்.