நீதிமொழிகள் 17:15-28
நீதிமொழிகள் 17:15-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
குற்றவாளியை விடுதலை செய்கிறதும் குற்றமற்றவரை தண்டனைக்கு உள்ளாக்குகிறதுமான இரண்டையும் யெகோவா அருவருக்கிறார். மூடர் கையில் பணம் இருந்து என்ன பயன்? ஞானத்தைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு மனமில்லையே. நண்பன் எக்காலத்திலும் அன்பாயிருக்கிறான்; இக்கட்டு காலத்தில் உதவி செய்யவே சகோதரன் பிறந்திருக்கிறான். மதியீனர் கடனுக்காக உத்திரவாதம் கொடுத்து, தன் அயலாரின் கடன்களுக்கான பாதுகாப்பு உறுதியளிக்கிறார்கள். வாக்குவாதத்தை விரும்புகிறவர்கள் பாவத்தை விரும்புகிறார்கள்; வாசலை உயர்த்திக் கட்டுகிறவர்கள் அழிவையே அழைக்கிறார்கள். தீமையான இருதயமுள்ளவர்கள் நன்மையைக் காண்பதில்லை; பொய் நாவுள்ளவர்கள் துன்பத்தில் வீழ்கிறார்கள். முட்டாளைப் பெற்றவருக்கு வருத்தம்; இறைவனற்ற மதியீனரின் பெற்றோருக்கு மகிழ்ச்சியில்லை. மகிழ்ச்சியான இருதயம் நல்ல மருந்து, ஆனால் நொறுங்கிய ஆவி எலும்புகளை உலரப்பண்ணுகிறது. கொடியவர்கள் இரகசியமாக இலஞ்சம் வாங்கி, நீதியின் வழியைப் புரட்டுகிறார்கள். பகுத்தறிவு உள்ளவர்கள் ஞானத்தில் கண்ணோக்கமாய் இருப்பார்கள்; ஆனால் மூடரின் கண்களோ பூமியின் கடைசிவரை அலைகிறது. மதிகெட்ட பிள்ளையால் தன் தந்தைக்குத் துன்பமும், தன்னைப் பெற்றவளுக்குக் கசப்பும் இருக்கும். குற்றமற்றவரைத் தண்டிப்பது நல்லதல்ல, உத்தமமான அதிகாரிகளை தண்டிப்பதும் நல்லதல்ல. அறிவுள்ளவர்கள் வார்த்தைகளை அடக்குகிறார்கள்; புரிந்துகொள்ளுதல் உள்ளவர்கள் சாந்தமாயிருக்கிறார்கள். அமைதியாக இருந்தால், மூடரும் ஞானமுள்ளவர் என்று எண்ணப்படுவர்; தன் நாவை அடக்கினால் புத்திமான்களாகவும் தோன்றுவார்கள்.
நீதிமொழிகள் 17:15-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இந்த இருவரும் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள். ஞானத்தை வாங்கும்படி மூடன் கையிலே பணம் என்னத்திற்கு? அதின்மேல் அவனுக்கு மனமில்லையே. நண்பன் எல்லாக் காலத்திலும் நேசிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான். புத்தியீனன் தன்னுடைய நண்பனுக்காக உறுதியளித்துப் பிணைப்படுகிறான். விவாதப்பிரியன் பாவப்பிரியன்; தன்னுடைய வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான். மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; பொய் நாவுள்ளவன் தீமையில் விழுவான். மதிகெட்ட மகனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலம் உண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை. மனமகிழ்ச்சி நல்ல மருந்து; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரச்செய்யும். துன்மார்க்கன், நீதியின் வழியைப்புரட்ட மடியிலுள்ள லஞ்சத்தை வாங்குகிறான். ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; மூடனுடைய கண்களோ பூமியின் கடைசி எல்லைகள்வரை செல்லும். மதிகெட்ட மகன் தன்னுடைய தகப்பனுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன். நீதிமானைத் தண்டிப்பதும், நியாயம்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல. அறிவாளி தன்னுடைய வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன். பேசாமலிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன்னுடைய உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.
நீதிமொழிகள் 17:15-28 பரிசுத்த பைபிள் (TAERV)
தவறே செய்யாதவர்களைத் தண்டிப்பதும், குற்றம் செய்தவர்களை தப்பவிடுவதுமான இரண்டு காரியங்களும் கர்த்தரால் வெறுக்கப்படும். அறிவற்றவனிடம் செல்வம் இருந்தால் அது பயனற்றது. ஏனென்றால் அவன் தன் செல்வத்தை அறிவைப் பெறுவதற்குப் பயன்படுத்தமாட்டான். ஒரு நண்பன் எப்பொழுதும் நேசிக்கிறான். உண்மையான சகோதரன் உனக்கு எப்பொழுதும் உதவுகிறான். துன்ப காலங்களிலும்கூட உதவி செய்கிறான். அடுத்தவன் கடனுக்கு தான் பொறுப்பாளியென அறிவற்றவனே வாக்குறுதி கொடுப்பான். வாதம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறவன், பாவம் செய்வதிலும் மகிழ்ச்சியடைகிறான். நீ உன்னையே பெருமைப்படுத்திப் பேசினால் நீயே துன்பங்களை வரவழைத்துக்கொள்கிறாய். தீயவன் நன்மை பெறமட்டான். பொய்யன் துன்பமடைவான். அறிவற்றவனின் தந்தை மிகவும் சோகம் அடைவான். அறிவற்றவனின் தந்தையால் மகிழ்ச்சியாக இருக்கமுடியாது. மகிழ்ச்சி என்பது நல்ல மருந்தைப் போன்றது. ஆனால் துக்கமோ நோயைப் போன்றது. தீயவன் மற்றவர்களை ஏமாற்றுவதற்காக இரகசியமாகப் பணத்தைப் பெறுகிறான். அறிவுள்ளவன் மிகச்சிறந்த செயல்களைச் செய்வதைப்பற்றியே எண்ணிக்கொண்டு இருப்பான். ஆனால் அறிவற்றவனோ தூரத்து இடங்களைப்பற்றியே கனவு காண்பான். ஒரு அறிவற்ற குமாரன் தந்தைக்குத் துக்கத்தைத் தருகிறான். அவன் தன்னைப் பெற்றெடுத்தத் தாய்க்கும் துன்பத்தைத் தருகிறான். தவறு செய்யாதவனைத் தண்டிப்பது தப்பாகும். தலைவர்கள் நேர்மையானவர்களாக இருக்கும்போது அவர்களைத் தண்டிப்பதும் தவறாகும். அறிவுள்ளவன் தன் வார்த்தைகளைக் கவனமாகக் கையாளுகிறான். அறிவுள்ளவன் எளிதில் கோபம் கொள்ளமாட்டான். அறிவற்றவனும் அமைதியாக இருந்தால் அறிவாளியைப்போன்று தோன்றுவான். அவன் எதையும் பேசாவிட்டால், ஜனங்கள் அவனை அறிவாளியாக நினைத்துக்கொள்வார்கள்.
நீதிமொழிகள் 17:15-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள். ஞானத்தைக் கொள்ளும்படி மூடன் கையிலே ரொக்கம் என்னத்திற்கு? அதின்மேல் அவனுக்கு மனமில்லையே. சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான். புத்தியீனன் தன் சிநேகிதனுக்கு முன்பாகக் கையடித்துக்கொடுத்துப் பிணைப்படுகிறான். வாதுப்பிரியன் பாதகப்பிரியன்; தன் வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான். மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான். மூடபுத்திரனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலமுண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை. மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும். துன்மார்க்கன், நீதியின் வழியைப்புரட்ட, மடியிலுள்ள பரிதானத்தை வாங்குகிறான். ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; மூடனுடைய கண்களோ பூமியின் கடையாந்தரங்களில் செல்லும். மூடபுத்திரன் தன் பிதாவுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன். நீதிமானை தண்டம் பிடிக்கிறதும், நியாயஞ்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல. அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன். பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.