நீதிமொழி 18:1-9

நீதிமொழி 18:1-9 TCV

நட்புணர்வு இல்லாதவர்கள் சுயநலத்தையே தேடுகிறார்கள், அவர்கள் எல்லாவித சரியான நிதானிப்புகளையும் எதிர்த்து விவாதிக்கிறார்கள். மூடர்கள் விளங்கிக்கொள்வதில் மகிழ்ச்சி கொள்வதில்லை, ஆனால் தங்கள் சொந்த அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவதில் மட்டும் பெருமகிழ்ச்சியடைகிறார்கள். கொடுமை வரும்போது அவமதிப்பும் வரும், வெட்கத்துடன் அவமானமும் வரும். வாயின் வார்த்தைகள் ஆழமான கடல், ஆனால் ஞானத்தின் ஊற்று பாய்ந்தோடும் நீரோடை. கொடியவர்களுக்கு பாரபட்சம் காட்டுவதும், குற்றமில்லாதவர்களுக்கு நீதியை வழங்க மறுப்பதும் நல்லதல்ல. மதியீனர்கள் பேச ஆரம்பித்தால் வாக்குவாதம் பிறக்கும், அவர்களுடைய வாயே அடிவாங்க வைக்கும். மதியீனருடைய வாய் அவர்களுக்கு அழிவு; அவர்களுடைய உதடுகளோ அவர்களுடைய வாழ்விற்கு கண்ணி. புறங்கூறுகிறவர்களின் வார்த்தைகள் சுவையான உணவைப் போன்றவை; அவை மனிதருடைய உள்ளத்தின் ஆழத்தில் பதிந்துவிடும். தன்னுடைய வேலையில் சோம்பலாய் இருப்பவன் அழிப்பவனுக்குச் சகோதரன்.