நீதிமொழிகள் 18:1-9

நீதிமொழிகள் 18:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நட்புணர்வு இல்லாதவர்கள் சுயநலத்தையே தேடுகிறார்கள், அவர்கள் எல்லாவித சரியான நிதானிப்புகளையும் எதிர்த்து விவாதிக்கிறார்கள். மூடர்கள் விளங்கிக்கொள்வதில் மகிழ்ச்சி கொள்வதில்லை, ஆனால் தங்கள் சொந்த அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவதில் மட்டும் பெருமகிழ்ச்சியடைகிறார்கள். கொடுமை வரும்போது அவமதிப்பும் வரும், வெட்கத்துடன் அவமானமும் வரும். வாயின் வார்த்தைகள் ஆழமான கடல், ஆனால் ஞானத்தின் ஊற்று பாய்ந்தோடும் நீரோடை. கொடியவர்களுக்கு பாரபட்சம் காட்டுவதும், குற்றமில்லாதவர்களுக்கு நீதியை வழங்க மறுப்பதும் நல்லதல்ல. மதியீனர்கள் பேச ஆரம்பித்தால் வாக்குவாதம் பிறக்கும், அவர்களுடைய வாயே அடிவாங்க வைக்கும். மதியீனருடைய வாய் அவர்களுக்கு அழிவு; அவர்களுடைய உதடுகளோ அவர்களுடைய வாழ்விற்கு கண்ணி. புறங்கூறுகிறவர்களின் வார்த்தைகள் சுவையான உணவைப் போன்றவை; அவை மனிதருடைய உள்ளத்தின் ஆழத்தில் பதிந்துவிடும். தன்னுடைய வேலையில் சோம்பலாய் இருப்பவன் அழிப்பவனுக்குச் சகோதரன்.

நீதிமொழிகள் 18:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பிரிந்து போகிறவன் தன்னுடைய ஆசையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக் கொள்ளுகிறான். மூடன் ஞானத்தில் பிரியம்கொள்ளாமல், தன்னுடைய மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான். துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடு இகழ்ச்சியும் வரும். மனிதனுடைய வாய்மொழிகள் ஆழமான தண்ணீர்போல இருக்கும்; ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போல இருக்கும். வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, துன்மார்க்கனுக்கு பாரபட்சம் செய்வது நல்லதல்ல. மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவனுடைய வாய் அடிகளை வரவழைக்கும். மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவனுடைய உதடுகள் அவனுடைய ஆத்துமாவுக்குக் கண்ணி. கோள்சொல்கிறவனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும். தன்னுடைய வேலையில் அசதியாக இருப்பவன் அனைத்தையும் அழிப்பவனுக்குச் சகோதரன்.

நீதிமொழிகள் 18:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

சிலர் மற்றவர்களைச் சுற்றி இருப்பதை விரும்பமாட்டார்கள். அவர்கள் தாம் செய்ய விரும்புவதையே செய்வார்கள். யாரேனும் இவர்களுக்கு அறிவுரை சொல்லப்போனால், அது இவர்களைக் கோபமடையச் செய்யும். மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதை அறிவற்றவர்கள் விரும்பமாட்டார்கள். அவர்கள் தம் சொந்த எண்ணங்களைச் சொல்வதையே விரும்புகின்றனர். ஜனங்கள் தீயவர்களை விரும்பமாட்டார்கள். ஜனங்கள் அந்த அறிவற்றவர்களைக் கேலிச்செய்வார்கள். ஞானமுள்ளவனின் வார்த்தைகள் ஆழமான ஞானக் கிணற்றிலிருந்து வெளியேறும் நீரோட்டத்தைப் போன்றது. ஜனங்களை நியாயந்தீர்ப்பதில் நேர்மையாக இரு. நீ குற்றம் செய்தவர்களை விட்டுவிடுவாயானால் அது நல்லவர்களுக்கு நன்மை செய்ததாக இராது. அறிவற்றவன் தான் பேசும் வார்த்தைகளாலேயே துன்பத்தை அடைகிறான். அவனது வார்த்தைகள் சண்டையை மூட்டும். அறிவற்றவன் பேசும்போது, அவன் தன்னையே அழித்துக்கொள்வான். அவனது சொந்த வார்த்தையே அவனை ஆபத்துக்குள்ளாக்கும். ஜனங்கள் எப்பொழுதும் வம்புகளை விரும்பிக் கேட்பார்கள். இது அவர்களுக்கு நல்ல உணவு வயிற்றுக்குள் போவதைப் போன்றிருக்கும். ஒருவன் கெட்ட செயல்களைச் செய்வது, பொருட்களை அழிப்பது போன்றதாகும்.

நீதிமொழிகள் 18:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பிரிந்து போகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக் கொள்ளுகிறான். மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல், தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான். துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடே நிந்தையும் வரும். மனுஷனுடைய வாய்மொழிகள் ஆழமான ஜலம்போலிருக்கும்; ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போலிருக்கும். வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, துன்மார்க்கனுக்கு முகதாட்சிணியம்பண்ணுவது நல்லதல்ல. மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அடிகளை வரவழைக்கும். மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவன் உதடுகள் அவன் ஆத்துமாவுக்குக் கண்ணி. கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும். தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன்.