நீதிமொழி 20:1-15

நீதிமொழி 20:1-15 TCV

திராட்சைரசம் கேலிசெய்ய வைக்கும், மதுபானம் போதையை உண்டாக்கும்; அதினால் வழிதவறுகிறவர்கள் ஞானிகளல்ல. அரசனின் கடுங்கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்பைப் போலிருக்கிறது; அரசனைக் கோபமூட்டுகிறவர்கள் தங்கள் உயிரை இழப்பார்கள். சண்டையைத் தவிர்த்துக்கொள்வது மனிதனுக்கு மேன்மை; ஒவ்வொரு முட்டாளும் சண்டையிட விரைகின்றனர். சோம்பேறி ஏற்றகாலத்தில் நிலத்தை உழுவதில்லை; அதினால் அறுவடைக்காலத்தில் அவர்கள் கேட்டும் உணவு கிடைப்பதில்லை. மனிதருடைய இருதயத்தின் நோக்கங்கள் ஆழமான நீர்நிலைகள்; மெய்யறிவுள்ளவர்களே அதை வெளியே கொண்டுவருவார்கள். அநேகர் தங்களை நேர்மையான அன்புள்ளவர் என்று சொல்லிக்கொள்வார்கள்; ஆனால் ஒரு உண்மையுள்ள மனிதரை யாரால் கண்டுபிடிக்க முடியும்? நீதிமான்கள் குற்றமற்ற வாழ்க்கையை நடத்துகிறார்கள்; அவர்களுக்குப் பிற்பாடு அவர்களுடைய பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். நியாயத்தீர்ப்புக்காக அரசன் சிங்காசனத்தில் அமரும்போது, அவன் தன் கண்களினாலேயே தீமையான யாவையும் பிரித்துவிடுவான். “நான் எனது இருதயத்தைத் தூய்மையாக வைத்திருக்கிறேன்; நான் பாவமின்றி சுத்தமாய் இருக்கிறேன்” என யாரால் சொல்லமுடியும்? பொய்யான எடைக் கற்கள், சமமற்ற அளவைகள் ஆகிய இவ்விரண்டையும் யெகோவா அருவருக்கிறார். சிறுபிள்ளைகளானாலும், அவர்களுடைய நடத்தை தூய்மையும் நேர்மையுமானதா என்று அவர்களுடைய செயல்களை வைத்து சொல்லலாம். கேட்கும் காதுகள், பார்க்கும் கண்கள் ஆகிய இரண்டையும் யெகோவாவே உண்டாக்கியிருக்கிறார். தூக்கத்தை விரும்பாதே, நீ ஏழையாவாய்; விழிப்பாயிரு, அப்பொழுது திருப்தியான உணவைப் பெறுவாய். பொருட்களை வாங்குபவர்கள், “இது நல்லதல்ல, இது நல்லதல்ல!” எனச் சொல்கிறார்கள்; வாங்கிய பின்போ அவர்கள் போய் தான் வாங்கிய திறமையைப் பற்றிப் புகழ்கிறார்கள். தங்கமும் உண்டு, பவளங்களும் நிறைவாய்க் கிடைக்கும்; ஆனால் அறிவைப் பேசும் உதடுகளோ அரிதாய்க் கிடைக்கும் மாணிக்கக்கல்.