நீதிமொழிகள் 20:1-15
நீதிமொழிகள் 20:1-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
திராட்சரசம் பரியாசஞ்செய்யும்; மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல. ராஜாவின் உறுக்குதல் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனைக் கோபப்படுத்துகிறவன் தன் பிராணனுக்கே துரோகஞ்செய்கிறான். வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான். சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான்; அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது. மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான். மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்? நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப்பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள். நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா தன் கண்களினால் சகல பொல்லாப்பையும் சிதறப்பண்ணுகிறான். என் இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என் பாவமறத் துப்புரவானேன் என்று சொல்லத்தக்கவன் யார்? வெவ்வேறான நிறைகல்லும், வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் கர்த்தருக்கு அருவருப்பானவைகள். பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும். கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார். தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண்விழித்திரு, அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தியாவாய். கொள்ளுகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்; போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான். பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; அறிவுள்ள உதடுகளோ விலையுயர்ந்த இரத்தினம்.
நீதிமொழிகள் 20:1-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
திராட்சைரசம் கேலிசெய்ய வைக்கும், மதுபானம் போதையை உண்டாக்கும்; அதினால் வழிதவறுகிறவர்கள் ஞானிகளல்ல. அரசனின் கடுங்கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்பைப் போலிருக்கிறது; அரசனைக் கோபமூட்டுகிறவர்கள் தங்கள் உயிரை இழப்பார்கள். சண்டையைத் தவிர்த்துக்கொள்வது மனிதனுக்கு மேன்மை; ஒவ்வொரு முட்டாளும் சண்டையிட விரைகின்றனர். சோம்பேறி ஏற்றகாலத்தில் நிலத்தை உழுவதில்லை; அதினால் அறுவடைக்காலத்தில் அவர்கள் கேட்டும் உணவு கிடைப்பதில்லை. மனிதருடைய இருதயத்தின் நோக்கங்கள் ஆழமான நீர்நிலைகள்; மெய்யறிவுள்ளவர்களே அதை வெளியே கொண்டுவருவார்கள். அநேகர் தங்களை நேர்மையான அன்புள்ளவர் என்று சொல்லிக்கொள்வார்கள்; ஆனால் ஒரு உண்மையுள்ள மனிதரை யாரால் கண்டுபிடிக்க முடியும்? நீதிமான்கள் குற்றமற்ற வாழ்க்கையை நடத்துகிறார்கள்; அவர்களுக்குப் பிற்பாடு அவர்களுடைய பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். நியாயத்தீர்ப்புக்காக அரசன் சிங்காசனத்தில் அமரும்போது, அவன் தன் கண்களினாலேயே தீமையான யாவையும் பிரித்துவிடுவான். “நான் எனது இருதயத்தைத் தூய்மையாக வைத்திருக்கிறேன்; நான் பாவமின்றி சுத்தமாய் இருக்கிறேன்” என யாரால் சொல்லமுடியும்? பொய்யான எடைக் கற்கள், சமமற்ற அளவைகள் ஆகிய இவ்விரண்டையும் யெகோவா அருவருக்கிறார். சிறுபிள்ளைகளானாலும், அவர்களுடைய நடத்தை தூய்மையும் நேர்மையுமானதா என்று அவர்களுடைய செயல்களை வைத்து சொல்லலாம். கேட்கும் காதுகள், பார்க்கும் கண்கள் ஆகிய இரண்டையும் யெகோவாவே உண்டாக்கியிருக்கிறார். தூக்கத்தை விரும்பாதே, நீ ஏழையாவாய்; விழிப்பாயிரு, அப்பொழுது திருப்தியான உணவைப் பெறுவாய். பொருட்களை வாங்குபவர்கள், “இது நல்லதல்ல, இது நல்லதல்ல!” எனச் சொல்கிறார்கள்; வாங்கிய பின்போ அவர்கள் போய் தான் வாங்கிய திறமையைப் பற்றிப் புகழ்கிறார்கள். தங்கமும் உண்டு, பவளங்களும் நிறைவாய்க் கிடைக்கும்; ஆனால் அறிவைப் பேசும் உதடுகளோ அரிதாய்க் கிடைக்கும் மாணிக்கக்கல்.
நீதிமொழிகள் 20:1-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
திராட்சைரசம் பரியாசம்செய்யும்; மதுபானம் கூச்சலிடும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல. ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமம்; அவனைக் கோபப்படுத்துகிறவன் தன்னுடைய உயிருக்கே துரோகம்செய்கிறான். வழக்குக்கு விலகுவது மனிதனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான். சோம்பேறி குளிருகிறது என்று உழமாட்டான்; அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றும் கிடைக்காது. மனிதனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போல இருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான். மனிதர்கள் பெரும்பாலும் தங்களுடைய தாராள குணத்தை பிரபலப்படுத்துவார்கள்; உண்மையான மனிதனைக் கண்டுபிடிப்பவன் யார்? நீதிமான் தன்னுடைய உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப்பிறகு அவனுடைய பிள்ளைகளும் பாக்கியவான்களாக இருப்பார்கள். நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா தன்னுடைய கண்களினால் எல்லாத் தீங்கையும் சிதறச்செய்கிறான். என்னுடைய இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என்னுடைய பாவம் நீங்க சுத்தமானேன் என்று சொல்லக்கூடியவன் யார்? வெவ்வேறான நிறைகல்லும், வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள். பிள்ளையானாலும், அதின் செயல்கள் சுத்தமோ செம்மையோ என்பது, அதின் செயலினால் வெளிப்படும். கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இந்த இரண்டையும் யெகோவா உண்டாக்கினார். தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண்விழித்திரு, அப்பொழுது உணவினால் திருப்தியாவாய். வாங்குகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்; போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான். பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; அறிவுள்ள உதடுகளோ விலை உயர்ந்த இரத்தினம்.
நீதிமொழிகள் 20:1-15 பரிசுத்த பைபிள் (TAERV)
திராட்சைரசமும் மதுவும் ஜனங்களின் சுயக் கட்டுப்பாட்டைக் குலைத்துவிடுகிறது. அவர்கள் சத்தமிட்டு ஆரவாரம் செய்வார்கள். அவர்கள் போதை ஏறி முட்டாள்தனமான செயல்களைச் செய்வார்கள். ஒரு ராஜாவின் கோபமானது சிங்கத்தின் கெர்ச்சினையைப் போன்றது. நீ ஒரு ராஜாவைக் கோபப்படுத்தினால் உன் வாழ்வை இழந்துவிடுவாய். எந்த முட்டாளும் ஒரு வாதத்தைத் தொடங்கலாம். எனவே வாதம்செய்ய மறுப்பவனை நீ மதிக்க வேண்டும். ஒரு சோம்பேறி விதைகளை விதைக்கவும் சோம்பேறித்தனமாயிருக்கிறான். அதனால், அறுவடைக் காலத்தில் உணவை எதிர்ப்பார்த்தாலும் அவன் எதையும் பெறுவதில்லை. நல்ல அறிவுரையானது ஆழமான கிணற்றிலிருந்து பெறும் தண்ணீரைப் போன்றது. அதனால் ஒரு அறிவாளி அடுத்தவனிடமிருந்து கற்றுக்கொள்ள கடுமையாக முயற்சிப்பான். பலர் தம்மை உண்மையுள்ளவர்களாகவும் அன்புள்ளவர்களாகவும் கூறிக்கொள்வார்கள். ஆனால் உண்மையிலேயே அப்படிப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது அரிது. நல்லவன் நல்ல வாழ்க்கையை வாழ்கின்றான். அவன் பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுகின்றனர். ஒரு ராஜா நியாயந்தீர்க்க ஆசனத்தில் உட்காரும்போது அவன் தன் கண்களால் சகல தீமைகளையும் கவனிக்க முடியும். ஒருவன் உண்மையாகவே, தான் செய்கிறவைகளைத் தன்னாலியன்றவரை நன்றாகச் செய்கிறேன் என்று சொல்லமுடியுமா? ஒருவன் பாவம் இல்லாதவன் என்று உண்மையில் சொல்லமுடியுமா? முடியாது. தவறான அளவுக் கருவிகளையும் எடைக் கற்களையும் பயன்படுத்தி மற்றவர்களை ஏமாற்றுகிறவர்களை கர்த்தர் வெறுக்கிறார். ஒரு குழந்தைகூடத் தனது செயலால் நல்லதா கெட்டதா என்று வெளிப்படுத்த முடியும். அது நல்லதா நேர்மையானதா என்பதை நீ கவனித்தால் அறிந்துகொள்ள முடியும். பார்ப்பதற்குக் கண்களையும் கேட்பதற்குக் காதுகளையும் கர்த்தர் நமக்காகப் படைத்துள்ளார். நீ தூக்கத்தை நேசித்தால், நீ ஏழையாகிவிடுவாய். உனது நேரத்தை உழைப்பதில் செலவிடு. உனக்கு உணவு ஏராளமாகக் கிடைக்கும். உன்னிடமிருந்து எதையாவது வாங்கியவன், “இது நன்றாயில்லை. இதன் விலை அதிகம்” என்கிறான். பிறகு வேறு ஆட்களிடம் போய் தான் நல்ல வியாபாரம் செய்ததாகச் சொல்லிக்கொள்வான். தங்கமும் வெள்ளியும் ஒருவனைப் பணக்காரன் ஆக்கும். ஆனால் எதைப்பற்றிப் பேசுகிறோமோ, அதை முழுக்க அறிந்துள்ள ஒருவனின் மதிப்பு மிகவும் பெரியது.