நீதிமொழி 4
4
ஞானமே மேலானது
1பிள்ளைகளே, தகப்பனின் அறிவுரைகளைக் கேளுங்கள்;
கவனமாயிருந்து புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
2நான் உங்களுக்கு நல்ல ஆலோசனையைத் தருகிறேன்,
எனவே நீங்கள் எனது போதனைகளைக் கைவிடாதிருங்கள்.
3நான் எனது தகப்பனுக்குச் செல்ல மகனாய்,
என் தாய்க்கு அருமையான ஒரே பிள்ளையாய் வளர்ந்து வந்தேன்.
4அப்பொழுது என் தகப்பன் எனக்குப் போதித்துச் சொன்னதாவது:
“நான் சொல்லும் வார்த்தைகளை உன் இருதயத்தில் வைத்துக்கொள்;
நீ என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது நீ வாழ்வாய்.
5ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் பெற்றுக்கொள்;
எனது வார்த்தைகளை மறக்காமலும் அவற்றைவிட்டு விலகாமலும் இரு.
6நீ ஞானத்தை விட்டுவிடாதே, அது உன்னைப் பாதுகாக்கும்;
அதை நேசி, அது உன்னை காத்துக்கொள்ளும்.
7ஞானத்தைப் பெற்றுக்கொள்வதே ஞானத்தின் ஆரம்பம்;
உன்னிடம் உள்ளதையெல்லாம் செலவழிக்க வேண்டியதானாலும் புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்.
8நீ அதை மதித்து நட, அது உன்னை மேன்மைப்படுத்தும்;
நீ அதை அணைத்துக்கொள், அப்பொழுது அது உன்னைக் கனப்படுத்தும்.
9அது உன் தலையில் அழகான மலர் முடியைச் சூட்டும்,
அது உனக்கு சிறப்புமிக்க மகுடத்தைக் கொடுக்கும்.”
10என் மகனே, கேள், நான் சொல்வதை ஏற்றுக்கொள்;
அப்பொழுது உன் வாழ்நாட்கள் நீடித்திருக்கும்.
11நான் ஞானத்தின் வழியை உனக்குக் காட்டி,
நேரான பாதையில் உன்னை வழிநடத்துகிறேன்.
12நீ நடக்கும்போது, உன் கால்கள் தடுமாறாது;
நீ ஓடும்போது இடறி விழமாட்டாய்.
13அறிவுரைகளைப் பற்றிக்கொள், அவற்றை விட்டுவிடாதே;
அதை நன்றாகக் காத்துக்கொள், அதுவே உன் வாழ்வு.
14கொடியவர்களின் பாதையில் அடியெடுத்து வைக்காதே;
தீய மனிதர்களின் வழியில் நீ நடக்காதே.
15அதைத் தவிர்த்துவிடு, அதில் பயணம் செய்யாதே;
அதைவிட்டுத் திரும்பி உன் வழியே செல்.
16ஏனெனில் தீமைசெய்யும்வரை அவர்கள் உறங்கமாட்டார்கள்;
யாரையாவது விழப்பண்ணும்வரை அவர்கள் நித்திரை செய்யமாட்டார்கள்.
17அவர்கள் கொடுமையின் உணவைச் சாப்பிட்டு,
வன்முறையின் மதுவைக் குடிக்கிறார்கள்.
18நீதிமான்களின் பாதை நடுப்பகல் வரைக்கும்
மேன்மேலும் பிரகாசிக்கிற சூரியப் பிரகாசத்தைப் போன்றது.
19ஆனால் கொடியவர்களின் வழியோ காரிருளைப் போன்றது;
அவர்கள் தங்களை இடறப்பண்ணுவது எது என்பதை அறியார்கள்.
20என் மகனே, நான் சொல்வதைக் கவனி;
நான் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவிகொடு.
21அவற்றை உன் பார்வையிலிருந்து விலகவிடாதே,
அவற்றை உன் இருதயத்திற்குள் வைத்துக்கொள்;
22அவற்றைக் கண்டுபிடிப்பவர்களுக்கு அவை வாழ்வாக இருக்கும்;
அவை மனிதரின் முழு உடலுக்கும் நலனளிக்கும்.
23எல்லாவற்றிற்கும் மேலாக, உன் இருதயத்தைக் காத்துக்கொள்,
அதிலிருந்து நீ செய்யும் எல்லாமே உனது வாழ்வின் ஊற்றாகப் புறப்பட்டு வரும்.
24வஞ்சகத்தை உன் வாயிலிருந்து அகற்று,
சீர்கேடான பேச்சுக்களை உன் உதடுகளிலிருந்து தூரமாய் விலக்கு.
25உன் கண்கள் நேராய் பார்க்கட்டும்;
உனக்கு முன்பாக இருப்பதில் உன் பார்வையை செலுத்து.
26உன் பாதங்களுக்கு ஒழுங்கான பாதைகளை அமைத்துக்கொள்;
அப்பொழுது உன் வழிகளெல்லாம் உறுதியாயிருக்கும்.
27நீ இடது பக்கமோ, வலதுபக்கமோ விலகாதே;
உன் கால்களைத் தீமையிலிருந்து விலக்கிக்கொள்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
நீதிமொழி 4: TCV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.