யெகோவாவே, என் பெலனே, நான் உம்மை நேசிக்கிறேன். யெகோவா என் கன்மலை, என் கோட்டை, என்னை விடுவிக்கிறவர்; என் இறைவன் நான் தஞ்சம் அடையும் என் கன்மலை, என் கேடயம், என் மீட்பின் கொம்பு, என் அரணுமாயிருக்கிறார். துதிக்கப்படத்தக்கவரான யெகோவாவை நோக்கி நான் கூப்பிடுகிறேன்; என் பகைவரிடமிருந்து நான் காப்பாற்றப்படுகிறேன். மரணக் கயிறுகளால் நான் சிக்குண்டேன்; அழிவின் அலைகள் என்னை அமிழ்த்திவிட்டன. பிரேதக் குழியின் கயிறுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணத்தின் கண்ணிகள் என்னை எதிர்த்து வந்தன. என் துயரத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; என் இறைவனிடம் உதவிக்காகக் கதறினேன்; அவர் தமது ஆலயத்திலிருந்து என் குரலைக் கேட்டார்; என் அழுகுரல் அவருடைய செவிக்கு எட்டியது. பூமி நடுங்கி அதிர்ந்து, மலைகளின் அஸ்திபாரங்கள் அசைந்தன; யெகோவா கோபமடைந்ததால் அவை நடுங்கின. அவருடைய நாசியிலிருந்து புகை எழும்பிற்று; அவருடைய வாயிலிருந்து சுட்டெரிக்கும் நெருப்புப் புறப்பட்டது; நெருப்புத் தழல் அதிலிருந்து தெறித்தன. அவர் வானங்களைப் பிரித்து, கீழே இறங்கினார்; கார்மேகங்கள் அவருடைய பாதங்களின்கீழ் இருந்தன. அவர் கேருபீனின்மேல் ஏறிப் பறந்தார்; அவர் காற்றின் சிறகுகளைக்கொண்டு பறந்தார். அவர் இருளைத் தமது போர்வையாகவும், வானத்தின் இருண்ட மழைமேகங்களைத் தம்மைச் சுற்றிலும் கூடாரமாகவும் ஆக்கினார். அவருடைய சமுகத்தின் பிரகாசத்திலிருந்து மேகங்கள் முன்னோக்கிச் சென்றன; அவற்றுடன் பனிக்கட்டி மழையும் மின்னல் கீற்றுக்களும் சென்றன. யெகோவா வானத்திலிருந்து இடியை முழக்கினார்; மகா உன்னதமானவரின் குரல் எதிரொலித்தது. அவர் தமது அம்புகளை எய்து பகைவரைச் சிதறடித்தார்; மின்னல் கீற்றுக்களை அனுப்பி, அவர்களை முறியடித்தார். யெகோவாவே, உமது நாசியிலிருந்து வந்த மூச்சின் தாக்கத்தாலும் உமது கண்டிப்பினாலும் கடல்களின் அடிப்பரப்பு வெளிப்பட்டன; பூமியின் அஸ்திபாரங்கள் வெளியே தெரிந்தன. யெகோவா என்னை உயரத்திலிருந்து எட்டிப் பிடித்தார்; ஆழமான தண்ணீரிலிருந்து என்னை வெளியே தூக்கினார். அவர் சக்திவாய்ந்த என் பகைவனிடமிருந்தும் என்னிலும் அதிக பலமான எதிரிகளிடமிருந்தும் என்னைத் தப்புவித்தார். அவர்கள் என்னுடைய பேராபத்தின் நாளிலே, எனக்கெதிராய் எழுந்தார்கள்; ஆனால் யெகோவா என் ஆதரவாயிருந்தார். அவர் என்னை விசாலமான ஒரு இடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்; அவர் என்னில் பிரியமாய் இருந்தபடியால் என்னைத் தப்புவித்தார். யெகோவா என் நீதிக்கு ஏற்றபடி என்னை நடத்தியிருக்கிறார்; என் கைகளின் சுத்தத்திற்கு தக்கதாய், அவர் எனக்குப் பலனளித்திருக்கிறார். ஏனெனில் நான் யெகோவாவினுடைய வழிகளை கைக்கொண்டிருக்கிறேன்; என் இறைவனைவிட்டு விலகி நான் குற்றம் செய்யவில்லை. அவருடைய நீதிநெறிகள் அனைத்தும் எனக்கு முன்பாக இருக்கின்றன; அவருடைய விதிமுறைகளிலிருந்து நான் விலகவேயில்லை. நான் அவருக்கு முன்பாக குற்றமற்றவனாக இருந்து, பாவத்திலிருந்து என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன். யெகோவா என் நீதிக்கு ஏற்றவாறும், அவருடைய பார்வையில் என் கைகளின் தூய்மைக்கு ஏற்றவாறும் எனக்குப் பலனளித்திருக்கிறார்.
வாசிக்கவும் சங்கீதம் 18
கேளுங்கள் சங்கீதம் 18
பகிர்
அனைத்து மொழியாக்கங்களையும் ஒப்பிடவும்: சங்கீதம் 18:1-24
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்