சங்கீதம் 18:1-24
சங்கீதம் 18:1-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவாவே, என் பெலனே, நான் உம்மை நேசிக்கிறேன். யெகோவா என் கன்மலை, என் கோட்டை, என்னை விடுவிக்கிறவர்; என் இறைவன் நான் தஞ்சம் அடையும் என் கன்மலை, என் கேடயம், என் மீட்பின் கொம்பு, என் அரணுமாயிருக்கிறார். துதிக்கப்படத்தக்கவரான யெகோவாவை நோக்கி நான் கூப்பிடுகிறேன்; என் பகைவரிடமிருந்து நான் காப்பாற்றப்படுகிறேன். மரணக் கயிறுகளால் நான் சிக்குண்டேன்; அழிவின் அலைகள் என்னை அமிழ்த்திவிட்டன. பிரேதக் குழியின் கயிறுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணத்தின் கண்ணிகள் என்னை எதிர்த்து வந்தன. என் துயரத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; என் இறைவனிடம் உதவிக்காகக் கதறினேன்; அவர் தமது ஆலயத்திலிருந்து என் குரலைக் கேட்டார்; என் அழுகுரல் அவருடைய செவிக்கு எட்டியது. பூமி நடுங்கி அதிர்ந்து, மலைகளின் அஸ்திபாரங்கள் அசைந்தன; யெகோவா கோபமடைந்ததால் அவை நடுங்கின. அவருடைய நாசியிலிருந்து புகை எழும்பிற்று; அவருடைய வாயிலிருந்து சுட்டெரிக்கும் நெருப்புப் புறப்பட்டது; நெருப்புத் தழல் அதிலிருந்து தெறித்தன. அவர் வானங்களைப் பிரித்து, கீழே இறங்கினார்; கார்மேகங்கள் அவருடைய பாதங்களின்கீழ் இருந்தன. அவர் கேருபீனின்மேல் ஏறிப் பறந்தார்; அவர் காற்றின் சிறகுகளைக்கொண்டு பறந்தார். அவர் இருளைத் தமது போர்வையாகவும், வானத்தின் இருண்ட மழைமேகங்களைத் தம்மைச் சுற்றிலும் கூடாரமாகவும் ஆக்கினார். அவருடைய சமுகத்தின் பிரகாசத்திலிருந்து மேகங்கள் முன்னோக்கிச் சென்றன; அவற்றுடன் பனிக்கட்டி மழையும் மின்னல் கீற்றுக்களும் சென்றன. யெகோவா வானத்திலிருந்து இடியை முழக்கினார்; மகா உன்னதமானவரின் குரல் எதிரொலித்தது. அவர் தமது அம்புகளை எய்து பகைவரைச் சிதறடித்தார்; மின்னல் கீற்றுக்களை அனுப்பி, அவர்களை முறியடித்தார். யெகோவாவே, உமது நாசியிலிருந்து வந்த மூச்சின் தாக்கத்தாலும் உமது கண்டிப்பினாலும் கடல்களின் அடிப்பரப்பு வெளிப்பட்டன; பூமியின் அஸ்திபாரங்கள் வெளியே தெரிந்தன. யெகோவா என்னை உயரத்திலிருந்து எட்டிப் பிடித்தார்; ஆழமான தண்ணீரிலிருந்து என்னை வெளியே தூக்கினார். அவர் சக்திவாய்ந்த என் பகைவனிடமிருந்தும் என்னிலும் அதிக பலமான எதிரிகளிடமிருந்தும் என்னைத் தப்புவித்தார். அவர்கள் என்னுடைய பேராபத்தின் நாளிலே, எனக்கெதிராய் எழுந்தார்கள்; ஆனால் யெகோவா என் ஆதரவாயிருந்தார். அவர் என்னை விசாலமான ஒரு இடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்; அவர் என்னில் பிரியமாய் இருந்தபடியால் என்னைத் தப்புவித்தார். யெகோவா என் நீதிக்கு ஏற்றபடி என்னை நடத்தியிருக்கிறார்; என் கைகளின் சுத்தத்திற்கு தக்கதாய், அவர் எனக்குப் பலனளித்திருக்கிறார். ஏனெனில் நான் யெகோவாவினுடைய வழிகளை கைக்கொண்டிருக்கிறேன்; என் இறைவனைவிட்டு விலகி நான் குற்றம் செய்யவில்லை. அவருடைய நீதிநெறிகள் அனைத்தும் எனக்கு முன்பாக இருக்கின்றன; அவருடைய விதிமுறைகளிலிருந்து நான் விலகவேயில்லை. நான் அவருக்கு முன்பாக குற்றமற்றவனாக இருந்து, பாவத்திலிருந்து என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன். யெகோவா என் நீதிக்கு ஏற்றவாறும், அவருடைய பார்வையில் என் கைகளின் தூய்மைக்கு ஏற்றவாறும் எனக்குப் பலனளித்திருக்கிறார்.
சங்கீதம் 18:1-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
என் பெலனாகிய யெகோவாவே, உம்மில் அன்புகூருவேன். யெகோவா என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் கோபுரமும், என் கேடகமும், என் இரட்சிப்பின் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாக இருக்கிறார். துதிக்குப் பாத்திரராகிய யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என்னுடைய எதிரிகளுக்கு நீங்கலாகிப் பாதுகாக்கப்படுவேன். மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டன; மாபெரும் அலைகள் என்னைப் பயப்படுத்தினது. பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன. எனக்கு உண்டான நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன், என் தேவனை நோக்கி சத்தமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என்னுடைய சத்தத்தைக் கேட்டார், என்னுடைய கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் காதுகளில் விழுந்தது. அவர் கோபங்கொண்டபடியால் பூமி அசைந்து அதிர்ந்தது, மலைகளின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தன. அவர் மூக்கிலிருந்து புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து எரியும் நெருப்பு புறப்பட்டது; அதனால் தழல் மூண்டது. வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது. கேருபீன்மேல் ஏறி வேகமாகச் சென்றார்; காற்றின் இறக்கைகளைக் கொண்டு பறந்தார். இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; தண்ணீர் நிறைந்த கறுத்த மழைமேகங்களையும் தம்மை சூழ்ந்திருக்கும் கூடாரமாக்கினார். அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள், கல்மழையும் நெருப்புத்தழலையும் பொழிந்தன. யெகோவா வானங்களிலே குமுறினார், உன்னதமான தேவனானவர் தமது சத்தத்தைத் தொனிக்கச்செய்தார்; கல்மழையும் நெருப்புத்தழலும் பொழிந்தன. தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களைப் பயன்படுத்தி, அவர்களைக் கலங்கச்செய்தார். அப்பொழுது யெகோவாவே, உம்முடைய கண்டிப்பினாலும் உம்முடைய மூக்கின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் ஆழங்கள் தென்பட்டன, உலகின் அஸ்திபாரங்கள் வெளிப்பட்டன. உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரிலிருந்து என்னைத் தூக்கிவிட்டார். என்னிலும் பலவான்களாக இருந்த என்னுடைய பலத்த எதிரிகளுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார். என்னுடைய ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; யெகோவாவோ எனக்கு ஆதரவாக இருந்தார். என்மேல் அவர் பிரியமாக இருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார். யெகோவா என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்குப் பதிலளித்தார்; என்னுடைய கைகளின் சுத்தத்திற்குத்தகுந்தபடி எனக்குச் சரிக்கட்டினார். ஏனெனில் யெகோவாவுடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனைவிட்டுத் துன்மார்க்கமாக விலகினதில்லை. அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக இருக்கின்றன; அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை. உன்னத தேவனுக்கு முன்பாக நான் உத்தமனாக இருந்து, என்னுடைய பாவத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன். ஆகையால் யெகோவா என்னுடைய நீதிக்குத் தகுந்ததாகவும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என்னுடைய கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார்.
சங்கீதம் 18:1-24 பரிசுத்த பைபிள் (TAERV)
“எனது பெலனாகிய கர்த்தாவே, நான் உம்மை நேசிக்கிறேன்!” கர்த்தர் என் பாறையாகவும், கோட்டையாகவும், எனக்குப் பாதுகாப்பான இடமாகவும் இருக்கிறார். பாதுகாப்பிற்காக ஓடும் பாறையாக என் தேவன் இருக்கிறார். தேவன் எனக்குக் கேடகம். அவரது வல்லமை என்னைக் காப்பாற்றும். உயர்ந்த மலைகளில் மறைவிடமாக கர்த்தர் எனக்கு விளங்குகிறார். எனது விரோதிகள் என்னை காயப்படுத்த முயன்றனர். ஆனால் நான் கர்த்தருடைய உதவியை நாடினேன், நான் என் பகைவரிடமிருந்து காப்பாற்றப்பட்டேன். என் பகைவர்கள் என்னைக் கொல்ல முயன்றுகொண்டிருந்தார்கள்! மரணத்தின் கயிறுகள் என்னைச் சூழ்ந்திருந்தன. மரணத்தின் இடங்களுக்கு என்னைக் கொண்டு செல்லும் பெருவெள்ளத்தில் நான் அகப்பட்டேன். கல்லறையின் கயிறுகள் என்னைச் சுற்றிலுமிருந்தன. மரணக் கண்ணிகள் என் முன் கிடந்தன. நெருக்கத்தில் கர்த்தருடைய உதவியை நாடினேன். ஆம், என் தேவனை நான் கூப்பிட்டேன். தேவன் அவரது ஆலயத்தில் இருந்தார். என் குரலைக் கேட்டார். என் அபயக் குரல் அவர் காதில் விழுந்தது. பூமி அதிர்ந்து நடுங்கிற்று. விண்ணின் அஸ்திபாரங்கள் அதிர்ந்தன. ஏனெனில் கர்த்தர் கோபமாயிருந்தார்! தேவனுடைய மூக்கில் புகை கிளம்பிற்று. தேவனுடைய வாயில் நெருப்புக்கொழுந்துகள் தோன்றின. அவரிடமிருந்து எரியும் ஜூவாலைகள் பறந்தன. கர்த்தர் வானத்தைக் கிழித்துக் கீழிறங்கினார்! திரண்ட காரிருளின் மேல் நின்றார்! கர்த்தர் காற்றின் மேல் எழுந்து பறக்கும் கேருபீன்கள் மேலேறிப் பறந்துக்கொண்டிருந்தார். அவரைச் சுற்றி கூடாரம்போல் சூழ்ந்திருந்த கருமேகங்களுக்குள் கர்த்தர் மறைந்திருந்தார். இடி மேகங்களினுள் அவர் ஒளிந்திருந்தார். அப்போது தேவனுடைய பிரகாசிக்கும் ஒளி மேகங்களைக் கிழித்து வெளிவந்தது. புயலும் மின்னலும் தோன்றின. கர்த்தர் வானத்திலிருந்து இடி இடித்தார். உன்னதமான தேவன் அவரது குரலைக் கேட்கச் செய்தார். கல்மழையும், மின்னல் ஒளியும் தோன்றின. கர்த்தர் அம்புகளைச் செலுத்திப் பகைவரைச் சிதறடித்தார். கர்த்தர் மின்னலை அனுப்பினார் ஜனங்கள் குழப்பத்தில் சிதறடிக்கப்பட்டனர். கர்த்தாவே, நீர் வல்லமையாகப் பேசினீர், உமது வாயிலிருந்து வல்லமையுள்ள காற்று வீசிற்று, தண்ணீரானது பின்னே தள்ளப்பட்டது. கடலின் அடிப்பகுதியைப் பார்க்க முடிந்தது. பூமியின் அஸ்திபாரங்கள் எங்கள் கண்களுக்குப் புலப்பட்டன. கர்த்தர் மேலிருந்து கீழிறங்கி என்னைக் காப்பாற்றினார். கர்த்தர் என்னைப் பிடித்து ஆழமான தண்ணீரிலிருந்து வெளியே எடுத்தார். எனது பகைவர்கள் என்னிலும் பலவான்கள். அவர்கள் என்னைப் பகைத்தார்கள். என்னைக் காட்டிலும் என் பகைவர்கள் பலசாலிகள். எனவே தேவன் என்னைக் காப்பாற்றினார். நான் தொல்லையில் சிக்குண்டபோது என் பகைவர்கள் என்னைத் தாக்கினார்கள். ஆனால் கர்த்தரோ எனக்கு ஆதரவளித்தார். கர்த்தர் என்னை நேசிக்கிறார், எனவே என்னைக் காப்பாற்றினார். என்னைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார். நான் ஒன்றும் அறியாதவன் எனவே கர்த்தர் எனக்குரிய பலனைத் தருவார். நான் தவறேதும் செய்யவில்லை, எனவே எனக்காக அவர் நன்மைகளைச் செய்வார். ஏனெனில் நான் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தேன். என் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்யவில்லை. கர்த்தருடைய முடிவுகளை நான் நினைவு கூர்ந்தேன். அவர் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தேன்! அவருக்கு முன் என்னைத் தூய்மையாகவும் களங்கமின்றியும் வைத்துக்கொண்டேன். அதனால் கர்த்தர் எனக்கு வெகுமதி கொடுப்பார். ஏனெனில் நான் கபடமற்றவன். தேவனுடைய பார்வையில் நான் தவறிழைக்கவில்லை. அவர் எனக்கு நன்மைகள் செய்வார்.
சங்கீதம் 18:1-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன். கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார். துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன். மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக் கொண்டது; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது. பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று. அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் பர்வதங்களின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது. அவர் நாசியிலிருந்து புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து பட்சிக்கிற அக்கினி புறப்பட்டது; அதனால் தழல் மூண்டது. வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது. கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார்; காற்றின் செட்டைகளைக் கொண்டு பறந்தார். இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; கரும்புனல்களையும், ஆகாயத்துக் கார்மேகங்களையும் தம்மைச்சூழக் கூடாரமாக்கினார். அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள் பறந்து விலகிற்று, கல்மழையும், நெருப்புத்தழலும் விழுந்தது. கர்த்தர் வானங்களிலே குமுறினார், உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார்; கல்மழையும், நெருப்புத்தழலும் விழுந்தது. தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார். அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிதத்தினாலும் உம்முடைய நாசியின் சுவாசக்காற்றினாலும், தண்ணீர்களின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது. உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார். என்னிலும் அதிக பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும், என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார். என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார். அவர் விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்மேல் பிரியமாயிருந்தபடியால், என்னைத் தப்புவித்தார். கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார். கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனுக்குத் துரோகம் பண்ணினதில்லை. அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை. அவர் முன்பாக நான் மனவுண்மையாயிருந்து, என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக் கொண்டேன். ஆகையால் கர்த்தர் என் நீதிக்கும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என் கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாக எனக்குப் பலனளித்தார்.