சங்கீதம் 37:1-40

சங்கீதம் 37:1-40 TCV

தீயவர்களைக் குறித்து பதற்றமடையாதே; அநியாயம் செய்பவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே. ஏனெனில் அவர்கள் புல்லைப்போல் விரைவாய் உலர்ந்து போவார்கள்; பச்சைத் தாவரத்தைப்போல் விரைவில் வாடிப்போவார்கள். யெகோவாவிடம் நம்பிக்கையாயிருந்து நன்மைசெய்; நாட்டில் குடியிருந்து, பாதுகாப்பாய் மேய்ச்சலில் மகிழ்ந்திரு. யெகோவாவிடம் மனமகிழ்ச்சியாயிரு, அப்பொழுது அவர் உன் இருதயத்தின் வாஞ்சைகளை உனக்குத் தருவார். யெகோவாவிடம் உன் வழியை ஒப்புவி; அவரில் நம்பிக்கையாயிரு, அப்பொழுது அவர் உனக்காக இவைகளைச் செய்வார். அவர் உன் நீதியை காலை வெளிச்சத்தைப் போலவும், உன் நியாயத்தை பட்டப்பகலைப் போலவும் ஒளிரச் செய்வார். யெகோவாவுக்கு முன்பாக அமைதியாய் இருந்து, அவருக்காகப் பொறுமையுடன் காத்திரு; மனிதர் தங்கள் வழிகளில் வெற்றி காணும்போதும் அவர்கள் தங்கள் பொல்லாத திட்டங்களைச் செயல்படுத்தும்போதும் நீ பதற்றமடையாதே. கோபத்தை அடக்கு, கடுங்கோபத்தை விட்டுவிலகு; பதற்றமடையாதே; அது உன்னைத் தீமைக்கு மட்டுமே வழிநடத்தும். ஏனெனில், தீயவர் முற்றிலும் அழிந்துபோவார்கள்; ஆனால் யெகோவாவிடம் எதிர்பார்ப்பாய் இருக்கிறவர்கள் நாட்டை உரிமையாக்கிக்கொள்வார்கள். இன்னும் சிறிது நேரத்தில் கொடியவர்கள் இல்லாமல் போவார்கள்; நீ அவர்களைத் தேடினாலும் அவர்கள் காணப்படமாட்டார்கள். ஆனால் சாந்தமுள்ளவர்கள், நாட்டை உரிமையாக்கிக்கொண்டு, சமாதானத்தின் செழிப்பை அனுபவிப்பார்கள். கொடியவர்கள் நீதிமான்களுக்கு விரோதமாகச் சதிசெய்து, அவர்களைப் பார்த்து பற்கடிக்கிறார்கள். ஆனால் யெகோவா கொடியவர்களைப் பார்த்து நகைக்கிறார்; அவர்களுடைய முடிவுகாலம் வருகிறதென அவர் அறிகிறார். ஏழைகளையும் எளியோரையும் வீழ்த்துவதற்கும், நேர்மையான வழியில் நடப்பவர்களை கொலைசெய்வதற்கும் கொடியவர்கள் வாளை உருவி வில்லை வளைக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய வாள்கள் அவர்களுடைய இருதயங்களையே ஊடுருவக்குத்தும்; அவர்களுடைய வில்லுகளும் முறிக்கப்படும். கொடியவர்களின் மிகுந்த செல்வத்தைப் பார்க்கிலும், நீதிமான்களிடம் இருக்கும் சிறிதளவே சிறந்தது. ஏனெனில் கொடியவர்களின் பலம் உடைக்கப்படும்; நீதிமான்களையோ யெகோவா தாங்குகிறார். குற்றமற்றவர்களின் நாட்களை யெகோவா அறிந்திருக்கிறார்; அவர்களுடைய உரிமைச்சொத்து என்றும் நிலைத்திருக்கும். அழிவு காலத்தில் அவர்கள் தளர்ந்து போகமாட்டார்கள்; பஞ்ச காலங்களிலும் நிறைவை அனுபவிப்பார்கள். ஆனால் கொடியவர்களோ அழிந்துபோவார்கள், யெகோவாவின் பகைவர்கள் வயலின் பூவைப்போல் இருந்தாலும், அவர்கள் எரிந்து புகையைப்போல் இல்லாது ஒழிவார்கள். கொடியவர்கள் கடன்வாங்கித் திருப்பிக்கொடுக்காமல் விட்டுவிடுகிறார்கள்; ஆனால் நீதிமான்கள் தாராள மனதுடன் கொடுக்கிறார்கள். யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்படுகிறவர்கள் நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்; அவரால் சபிக்கப்படுகிறவர்களோ அழிந்துபோவார்கள். ஒரு மனிதனுடைய வழியில் யெகோவா பிரியமாயிருந்தால், அவனுடைய காலடிகளை அவர் உறுதியாக்குகிறார். அவன் இடறினாலும் விழமாட்டான்; ஏனெனில், யெகோவா தமது கரத்தினால் அவனைத் தாங்கிப் பிடிக்கிறார். நான் வாலிபனாயிருந்தேன், இப்போது முதியவனாய் இருக்கிறேன்; ஆனால் நீதிமான்கள் கைவிடப்பட்டதையோ, அவர்களுடைய பிள்ளைகள் உணவுக்காக பிச்சையெடுத்ததையோ நான் ஒருபோதும் காணவில்லை. நீதிமான் எப்பொழுதும் தாராளமாய்க் கடன் கொடுக்கிறார்கள்; அவர்களுடைய பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். தீமையிலிருந்து விலகி நன்மையைச் செய்; அப்பொழுது நீ என்றென்றும் நிலைத்திருப்பாய். ஏனெனில் யெகோவா நியாயத்தில் பிரியப்படுகிறார்; தமக்கு உண்மையாய் இருப்பவர்களைக் கைவிடவுமாட்டார். அவர்கள் என்றென்றும் பாதுகாக்கப்படுவார்கள். ஆனால் கொடியவர்களின் சந்ததியோ அழிந்துபோம். நீதிமான்கள் நாட்டைத் தங்களுக்கு சொந்தமாக்கி, அதில் என்றும் குடியிருப்பார்கள். நீதிமான்களின் வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; அவர்களுடைய நாவு நியாயத்தைப் பேசும். இறைவனின் சட்டம் அவர்களுடைய இருதயத்தில் இருக்கிறது; அவர்களுடைய கால்கள் சறுக்குவதில்லை. நீதிமான்களைக் கொல்லும்படி, கொடியவர்கள் அவர்களைப் பிடிக்கப் பதுங்கிக் காத்திருக்கிறார்கள். ஆனால் யெகோவா, நீதிமான்களை கொடியவர்களின் கையில் விடுவதுமில்லை; நியாய்ந்தீர்க்கப்பட வரும்போது குற்றவாளிகளாக்க இடமளிப்பதுமில்லை. யெகோவாவை எதிர்பார்த்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள். நீ நாட்டை சொந்தமாக்கிக் கொள்ளும்படி, அவர் உன்னை உயர்த்துவார்; கொடியவர்கள் அழிந்துபோவார்கள், நீ அதைக் காண்பாய். கொடியவனும் ஈவு இரக்கமற்றவனுமான ஒருவனைக் கண்டேன்; அவன் ஒரு பச்சைமரம் தனக்கேற்ற மண்ணில் செழித்திருப்பதைப் போல வளர்ந்தான். ஆனால் அவன் விரைவாக ஒழிந்துபோனான்; நான் அவனைத் தேடியும்கூட அவனைக் காணவில்லை. குற்றமற்றவனைக் கவனித்துப்பார், நேர்மையானவனை நோக்கிப்பார்; சமாதானமாய் இருக்கிற மனிதனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. ஆனால் குற்றவாளிகள் அனைவரும் அழிக்கப்படுவார்கள்; கொடியவர்களுக்கு எதிர்காலம் இல்லாமல் போகும். நீதிமான்களின் இரட்சிப்பு யெகோவாவிடமிருந்து வரும்; கஷ்டமான காலத்தில் அவரே அவர்களின் அரணாய் இருக்கிறார். யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து அவர்களை விடுவிக்கிறார்; அவர்கள் யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைந்திருக்கிறபடியால், கொடியவர்களிடமிருந்து அவர்களை விடுவித்து இரட்சிக்கிறார்.