சங்கீதம் 37:1-40

சங்கீதம் 37:1-40 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே. அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள். கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். உன் நீதியை வெளிச்சத்தைப்போலவும், உன் நியாயத்தைப்பட்டப் பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார். கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன் மேலும் எரிச்சலாகாதே. கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம். பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள். இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன் பேரில் பற்கடிக்கிறான். ஆண்டவர் அவனைப்பார்த்து நகைக்கிறார்; அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார். சிறுமையும் எளிமையுமானவனை மடிவிக்கவும், செம்மை மார்க்கத்தாரை விழப்பண்ணவும், துன்மார்க்கர் பட்டயத்தை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள். ஆனாலும் அவர்கள் பட்டயம் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போம்; அவர்கள் வில்லுகள் முறியும். அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப் பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது. துன்மார்க்கருடைய புயங்கள் முறியும்; நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார். உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும். அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப் போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள். துன்மார்க்கரோ அழிந்துபோவார்கள், கர்த்தருடைய சத்துருக்கள் ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப்போல் புகைந்துபோவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்துபோவார்கள். துன்மார்க்கன் கடன்வாங்கிச் செலுத்தாமற்போகிறான்; நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான். அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுப்புண்டுபோவார்கள். நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார். நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை. அவன் நித்தம் இரங்கிக் கடன் கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும். தீமையை விட்டு விலகி, நன்மை செய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய். கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோம். நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள். நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும். அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை. துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான். கர்த்தரோ அவனை இவன் கையில் விடுவதில்லை; அவன் நியாயம் விசாரிக்கப்படுகையில், அவனை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை. நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டு போவதை நீ காண்பாய். கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன். அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான். ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள், அவன் இல்லை; அவனைத் தேடினேன், அவன் காணப்படவில்லை. நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம். அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு. நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம். கர்த்தர் அவர்களுக்கு உதவி செய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார்.

சங்கீதம் 37:1-40 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

தீயவர்களைக் குறித்து பதற்றமடையாதே; அநியாயம் செய்பவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே. ஏனெனில் அவர்கள் புல்லைப்போல் விரைவாய் உலர்ந்து போவார்கள்; பச்சைத் தாவரத்தைப்போல் விரைவில் வாடிப்போவார்கள். யெகோவாவிடம் நம்பிக்கையாயிருந்து நன்மைசெய்; நாட்டில் குடியிருந்து, பாதுகாப்பாய் மேய்ச்சலில் மகிழ்ந்திரு. யெகோவாவிடம் மனமகிழ்ச்சியாயிரு, அப்பொழுது அவர் உன் இருதயத்தின் வாஞ்சைகளை உனக்குத் தருவார். யெகோவாவிடம் உன் வழியை ஒப்புவி; அவரில் நம்பிக்கையாயிரு, அப்பொழுது அவர் உனக்காக இவைகளைச் செய்வார். அவர் உன் நீதியை காலை வெளிச்சத்தைப் போலவும், உன் நியாயத்தை பட்டப்பகலைப் போலவும் ஒளிரச் செய்வார். யெகோவாவுக்கு முன்பாக அமைதியாய் இருந்து, அவருக்காகப் பொறுமையுடன் காத்திரு; மனிதர் தங்கள் வழிகளில் வெற்றி காணும்போதும் அவர்கள் தங்கள் பொல்லாத திட்டங்களைச் செயல்படுத்தும்போதும் நீ பதற்றமடையாதே. கோபத்தை அடக்கு, கடுங்கோபத்தை விட்டுவிலகு; பதற்றமடையாதே; அது உன்னைத் தீமைக்கு மட்டுமே வழிநடத்தும். ஏனெனில், தீயவர் முற்றிலும் அழிந்துபோவார்கள்; ஆனால் யெகோவாவிடம் எதிர்பார்ப்பாய் இருக்கிறவர்கள் நாட்டை உரிமையாக்கிக்கொள்வார்கள். இன்னும் சிறிது நேரத்தில் கொடியவர்கள் இல்லாமல் போவார்கள்; நீ அவர்களைத் தேடினாலும் அவர்கள் காணப்படமாட்டார்கள். ஆனால் சாந்தமுள்ளவர்கள், நாட்டை உரிமையாக்கிக்கொண்டு, சமாதானத்தின் செழிப்பை அனுபவிப்பார்கள். கொடியவர்கள் நீதிமான்களுக்கு விரோதமாகச் சதிசெய்து, அவர்களைப் பார்த்து பற்கடிக்கிறார்கள். ஆனால் யெகோவா கொடியவர்களைப் பார்த்து நகைக்கிறார்; அவர்களுடைய முடிவுகாலம் வருகிறதென அவர் அறிகிறார். ஏழைகளையும் எளியோரையும் வீழ்த்துவதற்கும், நேர்மையான வழியில் நடப்பவர்களை கொலைசெய்வதற்கும் கொடியவர்கள் வாளை உருவி வில்லை வளைக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய வாள்கள் அவர்களுடைய இருதயங்களையே ஊடுருவக்குத்தும்; அவர்களுடைய வில்லுகளும் முறிக்கப்படும். கொடியவர்களின் மிகுந்த செல்வத்தைப் பார்க்கிலும், நீதிமான்களிடம் இருக்கும் சிறிதளவே சிறந்தது. ஏனெனில் கொடியவர்களின் பலம் உடைக்கப்படும்; நீதிமான்களையோ யெகோவா தாங்குகிறார். குற்றமற்றவர்களின் நாட்களை யெகோவா அறிந்திருக்கிறார்; அவர்களுடைய உரிமைச்சொத்து என்றும் நிலைத்திருக்கும். அழிவு காலத்தில் அவர்கள் தளர்ந்து போகமாட்டார்கள்; பஞ்ச காலங்களிலும் நிறைவை அனுபவிப்பார்கள். ஆனால் கொடியவர்களோ அழிந்துபோவார்கள், யெகோவாவின் பகைவர்கள் வயலின் பூவைப்போல் இருந்தாலும், அவர்கள் எரிந்து புகையைப்போல் இல்லாது ஒழிவார்கள். கொடியவர்கள் கடன்வாங்கித் திருப்பிக்கொடுக்காமல் விட்டுவிடுகிறார்கள்; ஆனால் நீதிமான்கள் தாராள மனதுடன் கொடுக்கிறார்கள். யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்படுகிறவர்கள் நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்; அவரால் சபிக்கப்படுகிறவர்களோ அழிந்துபோவார்கள். ஒரு மனிதனுடைய வழியில் யெகோவா பிரியமாயிருந்தால், அவனுடைய காலடிகளை அவர் உறுதியாக்குகிறார். அவன் இடறினாலும் விழமாட்டான்; ஏனெனில், யெகோவா தமது கரத்தினால் அவனைத் தாங்கிப் பிடிக்கிறார். நான் வாலிபனாயிருந்தேன், இப்போது முதியவனாய் இருக்கிறேன்; ஆனால் நீதிமான்கள் கைவிடப்பட்டதையோ, அவர்களுடைய பிள்ளைகள் உணவுக்காக பிச்சையெடுத்ததையோ நான் ஒருபோதும் காணவில்லை. நீதிமான் எப்பொழுதும் தாராளமாய்க் கடன் கொடுக்கிறார்கள்; அவர்களுடைய பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். தீமையிலிருந்து விலகி நன்மையைச் செய்; அப்பொழுது நீ என்றென்றும் நிலைத்திருப்பாய். ஏனெனில் யெகோவா நியாயத்தில் பிரியப்படுகிறார்; தமக்கு உண்மையாய் இருப்பவர்களைக் கைவிடவுமாட்டார். அவர்கள் என்றென்றும் பாதுகாக்கப்படுவார்கள். ஆனால் கொடியவர்களின் சந்ததியோ அழிந்துபோம். நீதிமான்கள் நாட்டைத் தங்களுக்கு சொந்தமாக்கி, அதில் என்றும் குடியிருப்பார்கள். நீதிமான்களின் வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; அவர்களுடைய நாவு நியாயத்தைப் பேசும். இறைவனின் சட்டம் அவர்களுடைய இருதயத்தில் இருக்கிறது; அவர்களுடைய கால்கள் சறுக்குவதில்லை. நீதிமான்களைக் கொல்லும்படி, கொடியவர்கள் அவர்களைப் பிடிக்கப் பதுங்கிக் காத்திருக்கிறார்கள். ஆனால் யெகோவா, நீதிமான்களை கொடியவர்களின் கையில் விடுவதுமில்லை; நியாய்ந்தீர்க்கப்பட வரும்போது குற்றவாளிகளாக்க இடமளிப்பதுமில்லை. யெகோவாவை எதிர்பார்த்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள். நீ நாட்டை சொந்தமாக்கிக் கொள்ளும்படி, அவர் உன்னை உயர்த்துவார்; கொடியவர்கள் அழிந்துபோவார்கள், நீ அதைக் காண்பாய். கொடியவனும் ஈவு இரக்கமற்றவனுமான ஒருவனைக் கண்டேன்; அவன் ஒரு பச்சைமரம் தனக்கேற்ற மண்ணில் செழித்திருப்பதைப் போல வளர்ந்தான். ஆனால் அவன் விரைவாக ஒழிந்துபோனான்; நான் அவனைத் தேடியும்கூட அவனைக் காணவில்லை. குற்றமற்றவனைக் கவனித்துப்பார், நேர்மையானவனை நோக்கிப்பார்; சமாதானமாய் இருக்கிற மனிதனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. ஆனால் குற்றவாளிகள் அனைவரும் அழிக்கப்படுவார்கள்; கொடியவர்களுக்கு எதிர்காலம் இல்லாமல் போகும். நீதிமான்களின் இரட்சிப்பு யெகோவாவிடமிருந்து வரும்; கஷ்டமான காலத்தில் அவரே அவர்களின் அரணாய் இருக்கிறார். யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து அவர்களை விடுவிக்கிறார்; அவர்கள் யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைந்திருக்கிறபடியால், கொடியவர்களிடமிருந்து அவர்களை விடுவித்து இரட்சிக்கிறார்.

சங்கீதம் 37:1-40 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே. அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுக்கப்பட்டு, பச்சைத்தாவரத்தைப்போல் வாடிப்போவார்கள். யெகோவாவை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். யெகோவாவிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். உன் வழியைக் யெகோவாவுக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கச்செய்வார். உன் நீதியை வெளிச்சத்தைப் போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கச்செய்வார். யெகோவாவை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன் மேலும் தீவினைகளைச் செய்கிற மனிதன் மேலும் எரிச்சலாகாதே. கோபத்தை தள்ளி, கடுங்கோபத்தை விட்டுவிடு; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம். பொல்லாதவர்கள் அறுக்கப்பட்டுபோவார்கள்; யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். இன்னும் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இருக்கமாட்டான்; அவன் நிலையை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாகத் தீங்கு நினைத்து, அவன்மேல் பல்லைக் கடிக்கிறான். ஆண்டவர் அவனைப் பார்த்து நகைக்கிறார்; அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார். சிறுமையும் எளிமையுமானவனை வீழ்த்தவும், செம்மை மார்க்கத்தாரை விழசெய்யவும், துன்மார்க்கர்கள் வாளை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள். ஆனாலும் அவர்கள் வாள் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போகும்; அவர்கள் வில்லுகள் முறியும். அநேக துன்மார்க்கர்களுக்கு இருக்கிற திரளான செல்வத்தைவிட, நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது. துன்மார்க்கருடைய கரங்கள் முறியும்; நீதிமான்களையோ யெகோவா தாங்குகிறார். உத்தமர்களின் நாட்களைக் யெகோவா அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும். அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள். துன்மார்க்கர்களோ அழிந்துபோவார்கள், யெகோவாவுடைய எதிரிகள் ஆட்டுக்குட்டிகளின் கொழுப்பைப்போல புகைந்து போவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்து போவார்கள். துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற் போகிறான்; நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான். அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுக்கப்பட்டுபோவார்கள். நல்ல மனிதனுடைய நடைகள் யெகோவாவால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். அவன் விழுந்தாலும் தள்ளப்பட்டு போவதில்லை; யெகோவா தமது கையினால் அவனைத் தாங்குகிறார். நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்திற்கு பிச்சை எடுக்கிறதையும் நான் காணவில்லை. அவன் எப்பொழுதும் இரங்கிக் கடன் கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும். தீமையை விட்டு விலகி, நன்மை செய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய். யெகோவா நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கர்களுடைய சந்ததியோ அறுக்கப்பட்டுபோகும். நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே குடியிருப்பார்கள். நீதிமானுடைய வாய் ஞானத்தை சொல்லி, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும். அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை. துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான். யெகோவாவோ அவனை இவன் கையில் விடுவதில்லை; அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது, அவனை தண்டனைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை. நீ யெகோவாவுக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர்கள் அறுக்கப்பட்டுபோவதை நீ காண்பாய். கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன் அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான். ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள், அவன் இல்லை; நான் மறுபடியும் போனேன், அவன் காணப்படவில்லை. நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனிதனுடைய முடிவு சமாதானம். அக்கிரமக்காரர் ஒன்றாக அழிக்கப்படுவார்கள்; அறுக்கப்பட்டுபோவதே துன்மார்க்கர்களின் முடிவு. நீதிமான்களுடைய இரட்சிப்பு யெகோவாவால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம். யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கர்களுடைய கைக்குத் தப்புவித்து காப்பாற்றுவார்.

சங்கீதம் 37:1-40 பரிசுத்த பைபிள் (TAERV)

தீயோரைக் கண்டு கலங்காதே, தீய காரியங்களைச் செய்வோரைக்கண்டு பொறாமைகொள்ளாதே. விரைவில் வாடி மடிந்துபோகும் புல்லைப்போன்று தீயோர் காணப்படுகிறார்கள். கர்த்தரை நம்பி நல்லவற்றைச் செய்தால், பூமி கொடுக்கும் பல நற்பலன்களை நீங்கள் அனுபவித்து வாழுவீர்கள். கர்த்தருக்குச் சேவைசெய்வதில் மகிழுங்கள். அவர் உங்களுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பார். கர்த்தரைச் சார்ந்திருங்கள், அவரை நம்புங்கள், செய்யவேண்டியதை அவர் செய்வார். நண்பகல் சூரியனைப்போன்று உன்னுடைய நற்குணத்தையும் நீதியையும் பிரகாசிக்க செய்வாராக. கர்த்தரை நம்பு, அவர் உதவிக்காகக் காத்திரு. தீயோர் வெற்றியடையும்போது கலங்காதே. தீய ஜனங்கள் கொடிய திட்டங்களை வகுக்கும்போதும், அதில் அவர்கள் வெற்றியடையும்போதும் கலங்காதே. கோபமடையாதே! மனக்குழப்பமடையாதே. தீய காரியங்களைச் செய்ய முடிவெடுக்குமளவிற்கு நீ கலக்கமடையாதே! ஏனெனில் தீயோர் அழிக்கப்படுவார்கள். ஆனால் கர்த்தருடைய உதவியை நாடும் ஜனங்கள் தேவன் வாக்களித்த தேசத்தைப் பெறுவார்கள். இன்னும் சில காலத்திற்குப்பின் தீயோர் இரார். அந்த ஜனங்களைத் தேடிப் பார்க்கையில் அவர்கள் அழிந்துபோயிருப்பார்கள். தேவன் வாக்களித்த தேசத்தை தாழ்மையான ஜனங்கள் பெறுவார்கள். அவர்கள் சமாதானத்தை அனுபவிப்பார்கள். தீயோர் நல்லோருக்கெதிராக தீய காரியங்களைத் திட்டமிடுவார்கள். நல்லோரை நோக்கிப் பற்கடித்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். ஆனால் நம் ஆண்டவர் அத்தீயோரைக் கண்டு நகைப்பார். அவர்களுக்கு நேரிடவிருப்பதை அவர் காண்கிறார். தீயோர் வாளை எடுக்கிறார்கள், வில்லைக் குறிபார்க்கிறார்கள், இயலாத ஏழைகளையும், நேர்மையானவர்களையும் கொல்ல விரும்புகிறார்கள். அவர்கள் வில் முறியும். அவர்கள் வாள்கள் அவர்கள் இதயங்களையே துளைக்கும். ஒரு கூட்டம் தீயோரைக்காட்டிலும் நல்லோர் சிலரே சிறந்தோராவர். ஏனெனில் தீயோர் அழிக்கப்படுவார்கள். கர்த்தர் நல்லோரைத் தாங்குகிறார். தூய்மையுள்ளோரின் வாழ்நாள் முழுவதையும் கர்த்தர் பாதுகாக்கிறார். கர்த்தர் அவர்களுக்குத் தரும் பரிசு என்றென்றும் தொடரும். தொல்லை நெருங்குகையில் நல்லோர் அழிக்கப்படுவதில்லை. பஞ்ச காலத்தில் நல்லோருக்கு மிகுதியான உணவு கிடைக்கும். ஆனால் தீயோர் கர்த்தருடைய பகைவர்கள். அவர்களின் பள்ளத்தாக்குகள் வறண்டு எரிந்து போகும். அவர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள். தீய மனிதன் பணத்தைக் கடனாகப் பெற்றுத் திரும்பச் செலுத்துவதில்லை. ஆனால் ஒரு நல்ல மனிதன் பிறருக்குத் தாராளமாகக் கொடுக்கிறான். நல்லவன் ஒருவன் பிறரை ஆசீர்வதித்தால் தேவன் வாக்களித்த நிலத்தை அவர்கள் பெறுவார்கள். ஆனால் அவன் தீமை நிகழும்படி கேட்டால் அந்த ஜனங்கள் அழிக்கப்படுவார்கள். ஒரு வீரன் கவனமாக நடப்பதற்கு கர்த்தர் உதவுகிறார். அவன் விழாதபடி கர்த்தர் வழி நடத்துகிறார். வீரன் ஓடி பகைவனை எதிர்த்தால் கர்த்தர் வீரனின் கைகளைப் பிடித்து அவன் விழாதபடி தாங்கிக் கொள்கிறார். நான் இளைஞனாக இருந்தேன். இப்போது வயது முதிர்ந்தவன். நல்லோரை தேவன் கைவிடுவிடுவதை நான் பார்த்ததில்லை. நல்லோரின் பிள்ளைகள் உணவிற்காக பிச்சையெடுப்பதை நான் பார்த்ததில்லை. ஒரு நல்ல மனிதன் பிறருக்குத் தாராளமாகக் கொடுக்கிறான். நல்ல மனிதனின் பிள்ளைகள் ஆசீர்வாதமாக இருப்பார்கள். தீமை செய்ய மறுத்து நல்லவற்றையே நீ செய்தால் என்றென்றும் நீ வாழ்வாய். கர்த்தர் நீதியை விரும்புகிறார். அவரைப் பின்பற்றுவோரை உதவியின்றிக் கைவிட்டதில்லை. கர்த்தர் அவரைப் பின்பற்றுவோரை எப்போதும் பாதுகாக்கிறார். ஆனால் கெட்ட ஜனங்களை அவர் அழித்துவிடுவார். தேவன் வாக்களித்த தேசத்தை நல்லோர் பெறுவார்கள். அங்கு அவர்கள் எந்நாளும் வாழ்வார்கள். ஒரு நல்ல மனிதன் நல்ல போதனையை கொடுக்கிறான். அவன் முடிவுகள் ஒவ்வொருவருக்கும் நியாயமுள்ளவைகள். கர்த்தருடைய போதனைகள் அவன் இருதயத்தில் இருக்கும். அவன் நல்வழியில் வாழ்வதை விட்டு விலகான். தீயோர் நல்லோரைத் துன்புறுத்தும் வழிகளை நாடுவார்கள். தீயோர் நல்லோரைக் கொல்ல முனைவார்கள். அவர்கள் அவ்வாறு செயல்பட தேவன் விடார். நல்லோர் தீயோரென நியாயந்தீர்க்கப்பட கர்த்தர் விடார். கர்த்தருடைய உதவிக்காகக் காத்திருங்கள், கர்த்தரைப் பின்பற்றுங்கள். தீயோர் அழிக்கப்படுவார்கள். ஆனால் கர்த்தர் உனக்கு முக்கியத்துவமளிப்பார், தேவன் வாக்களித்த தேசத்தை நீ பெறுவாய். வல்லமைமிக்க தீயோரை நான் கண்டேன். அவன் பசுமையான, வலிய மரத்தைப் போலிருந்தான். ஆனால் அவன் மடிந்தான், அவனை நான் தேடியபோது அவன் காணப்படவில்லை. தூய்மையாகவும், உண்மையாகவும் இருங்கள். ஏனெனில் அது சமாதானத்தைத் தரும். சமாதானத்தை விரும்பும் ஜனங்களுக்கு பல சந்ததியினர் இருப்பார்கள். சட்டத்தை மீறுகிற ஜனங்கள் அழிக்கப்படுவார்கள். அவர்களின் சந்ததி நாட்டை விட்டு வெளியேற நேரிடும். கர்த்தர் நல்லோரை மீட்கிறார். நல்லோர் வேதனைப்படும்போது கர்த்தர் அவர்களின் பெலனாவார். கர்த்தர் நல்லோருக்கு உதவிசெய்து அவர்களைப் பாதுகாக்கிறார். நல்லோர் கர்த்தரைச் சார்ந்திருப்பார்கள். அவர் அவர்களைத் தீயோரிடமிருந்து காக்கிறார்.