ரோமர் 8:1-10

ரோமர் 8:1-10 TCV

ஆகவே, இப்பொழுது கிறிஸ்து இயேசுவில் இருக்கிறவர்களுக்கு தண்டனைத்தீர்ப்பு இல்லவேயில்லை. ஏனெனில் கிறிஸ்து இயேசுவின் மூலமாக, வாழ்வைக் கொடுக்கும் பரிசுத்த ஆவியானவரின் சட்டமானது, பாவ சட்டத்திலிருந்தும் மரண சட்டத்திலிருந்தும் என்னை விடுதலையாக்கிற்று. மோசேயின் சட்டம் நமது மாம்ச இயல்பின் காரணமாக பலவீனமடைந்ததினால், எந்த வேலையைச் செய்துமுடிக்க வல்லமையற்றுப் போயிற்றோ, அதை இறைவனே செய்து முடித்தார். எப்படியென்றால் பாவநிவாரண பலியாக இறைவன் தனது சொந்த மகனை ஒரு பாவ மனிதனின் சாயலில் அனுப்பி, பாவம் உள்ள மனிதனிலிருந்த பாவத்தின் ஆற்றலை இல்லாதொழித்தார். மாம்ச இயல்பின்படி வாழாமல், ஆவியானவரின் வழிநடத்துதலில் வாழும் நம்மில், மோசேயின் சட்டத்தின் நியாயமான கட்டளைகளை நிறைவேற்றும்படியே இப்படிச் செய்தார். மாம்ச இயல்பின்படி வாழ்கிறவர்கள், தங்கள் மனங்களை அந்த இயல்பின் ஆசைகளிலேயே பதித்திருக்கிறார்கள்; ஆனால் பரிசுத்த ஆவியானவருடைய இயல்பின்படி வாழ்கிறவர்களோ, ஆவியானவர் விரும்பும் காரியங்களிலேயே தங்கள் மனதைப் பதித்திருக்கிறார்கள். மாம்ச இயல்புக்குக் கட்டுப்பட்டுள்ள மனமோ மரணம். பரிசுத்த ஆவியானவரின் கட்டுப்பாட்டிற்கு அடங்கிய மனமோ வாழ்வையும் சமாதானத்தையும் கொடுக்கிறது. மாம்ச இயல்புக்குக் கட்டுப்பட்டுள்ள மனம் இறைவனுடன் பகைமை கொண்டுள்ளது. அது இறைவனின் சட்டத்திற்கு அடங்கி நடப்பதில்லை. அதற்கு அப்படி அடங்கி நடக்கவும் முடியாது. மாம்ச இயல்புக்குக் கட்டுப்பட்டு இருக்கிறவர்களால் இறைவனைப் பிரியப்படுத்தமுடியாது. ஆனால் நீங்களோ, மாம்ச இயல்பின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவர்கள் அல்ல. ஆனால் பரிசுத்த ஆவியானவர் உங்களில் குடியிருந்தால், நீங்கள் ஆவியானவரின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவர்களே. யாராவது கிறிஸ்து இயேசுவின் பரிசுத்த ஆவியானவர் இல்லாதவர்களாயிருந்தால், அவர்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்கள் அல்ல. கிறிஸ்து உங்களில் இருந்தால், உங்கள் உடல் பாவத்தின் நிமித்தம் மரித்திருந்தாலும், உங்கள் ஆவியோ, நீதியின் நிமித்தம் உயிர்பெற்றிருக்கிறது.