உன்னதப்பாட்டு 2:5-13

உன்னதப்பாட்டு 2:5-13 TCV

உலர்ந்த திராட்சையினால் என்னைப் பெலப்படுத்துங்கள், ஆப்பிள் பழங்களினால் எனக்குப் புத்துயிர் கொடுங்கள், ஏனெனில் நான் காதலால் பலவீனமடைந்திருக்கிறேன். அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது, அவருடைய வலதுகை என்னை அணைத்துக்கொள்கிறது. எருசலேமின் மங்கையரே, கலைமான்கள்மேலும் வெளியின் பெண்மான்கள்மேலும் ஆணை! காதலைத் தட்டி எழுப்பவேண்டாம், அது தானே விரும்பும்வரை எழுப்பவேண்டாம். கேளுங்கள்! இதோ, என் காதலரின் குரல் கேட்கிறது! இதோ, என் காதலர் வந்துவிட்டார்! மலைகளைத் தாண்டியும், குன்றுகள்மேல் தாவியும் வருகிறார். என் காதலர் வெளிமானுக்கும், மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார். இதோ, அவர் எங்கள் மதிலுக்குப் பின்னே நிற்கிறார், ஜன்னல்களின் வழியாய்ப் பார்க்கிறார், கிராதியின் வழியாய் எட்டிப் பார்க்கிறார். என் காதலர் என்னோடு பேசி, “என் அன்பே, எழுந்திரு, என் அழகே, என்னோடு வா. இதோ பார், குளிர்க்காலம் முடிந்துவிட்டது; மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது. பூமியில் பூக்கள் பூக்கத் தொடங்கிவிட்டன; பறவைகள் பாடும் பருவம் வந்துவிட்டது, காட்டுப்புறா கூவும் சத்தமும் நம் நாட்டில் கேட்கிறது. அத்திமரத்தில் பழங்கள் பழுத்திருக்கின்றன; திராட்சைக்கொடிகள் பூத்து நறுமணம் வீசுகின்றன. என் அன்பே, எழுந்து வா; என் அழகே, என்னோடு வா” என்று சொல்கிறார்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த உன்னதப்பாட்டு 2:5-13