உன்னதப்பாட்டு 2:5-13

உன்னதப்பாட்டு 2:5-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

திராட்சரசத்தால் என்னைத் தேற்றுங்கள், கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள்; நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன். அவர் இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது; அவர் வலதுகை என்னை அணைத்துக்கொள்ளுகிறது. எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும், நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன். இது என் நேசருடைய சத்தம்! இதோ, அவர் மலைகள்மேல் குதித்தும் மேடுகள்மேல் துள்ளியும் வருகிறார். என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார்; இதோ, அவர் எங்கள் மதிலுக்குப் புறம்பே நின்று பலகணி வழியாய்ப் பார்த்து, கிராதியின் வழியாய்த் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார். என் நேசர் என்னோடே பேசி: என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்துவா. இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது. பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது; குருவிகள் பாடுங்காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது. அத்திமரம் காய்காய்த்தது; திராட்சக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் பரிமளிக்கிறது; என் பிரியமே! என் ரூபவதியே! நீ எழுந்து வா.

உன்னதப்பாட்டு 2:5-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

உலர்ந்த திராட்சையினால் என்னைப் பெலப்படுத்துங்கள், ஆப்பிள் பழங்களினால் எனக்குப் புத்துயிர் கொடுங்கள், ஏனெனில் நான் காதலால் பலவீனமடைந்திருக்கிறேன். அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது, அவருடைய வலதுகை என்னை அணைத்துக்கொள்கிறது. எருசலேமின் மங்கையரே, கலைமான்கள்மேலும் வெளியின் பெண்மான்கள்மேலும் ஆணை! காதலைத் தட்டி எழுப்பவேண்டாம், அது தானே விரும்பும்வரை எழுப்பவேண்டாம். கேளுங்கள்! இதோ, என் காதலரின் குரல் கேட்கிறது! இதோ, என் காதலர் வந்துவிட்டார்! மலைகளைத் தாண்டியும், குன்றுகள்மேல் தாவியும் வருகிறார். என் காதலர் வெளிமானுக்கும், மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார். இதோ, அவர் எங்கள் மதிலுக்குப் பின்னே நிற்கிறார், ஜன்னல்களின் வழியாய்ப் பார்க்கிறார், கிராதியின் வழியாய் எட்டிப் பார்க்கிறார். என் காதலர் என்னோடு பேசி, “என் அன்பே, எழுந்திரு, என் அழகே, என்னோடு வா. இதோ பார், குளிர்க்காலம் முடிந்துவிட்டது; மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது. பூமியில் பூக்கள் பூக்கத் தொடங்கிவிட்டன; பறவைகள் பாடும் பருவம் வந்துவிட்டது, காட்டுப்புறா கூவும் சத்தமும் நம் நாட்டில் கேட்கிறது. அத்திமரத்தில் பழங்கள் பழுத்திருக்கின்றன; திராட்சைக்கொடிகள் பூத்து நறுமணம் வீசுகின்றன. என் அன்பே, எழுந்து வா; என் அழகே, என்னோடு வா” என்று சொல்கிறார்.

உன்னதப்பாட்டு 2:5-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

திராட்சைரசத்தால் என்னைத் தேற்றுங்கள், கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள்; நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன். அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது; அவருடைய வலதுகை என்னை அணைத்துக்கொள்கிறது. மணவாளன் எருசலேமின் இளம்பெண்களே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும், எழுப்பாமலும் இருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களுக்கு ஆணையிடுகிறேன். மணவாளி இது என் நேசருடைய சத்தம்! இதோ, அவர் மலைகளின்மேல் குதித்தும் மேடுகளின்மேல் துள்ளியும் வருகிறார். என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாக இருக்கிறார்; இதோ, அவர் எங்கள் மதிலுக்கு வெளியே நின்று சன்னல் வழியாகப் பார்த்து, தட்டியின் வழியாகத் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார். என் நேசர் என்னோடே பேசி: மணவாளன் என் பிரியமே! என் அழகு மிகுந்தவளே! எழுந்துவா. இதோ, மழைக்காலம் சென்றது, மழைபெய்து ஓய்ந்தது. பூமியிலே மலர்கள் காணப்படுகிறது; குருவிகள் பாடும் காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது. அத்திமரம் காய்காய்த்தது; திராட்சைக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் நறுமணத்தையும் கொடுக்கிறது; என் பிரியமே! என் அழகு மிகுந்தவளே! நீ எழுந்து வா.

உன்னதப்பாட்டு 2:5-13 பரிசுத்த பைபிள் (TAERV)

காய்ந்த திராட்சையினால் செய்யப்பட்ட பலகாரத்தால் என்னைப் பலப்படுத்துங்கள். கிச்சிலிப் பழங்களால் எனக்குப் புத்துணர்ச்சி ஊட்டுங்கள். ஏனென்றால் நான் நேசத்தினிமித்தம் பலவீனமாகியுள்ளேன். என் நேசரின் இடதுகை என் தலையின் கீழுள்ளது. அவரது வலது கை என்னை அணைத்துக்கொள்கிறது. எருசலேமின் பெண்களே, நான் தயாராகும்வரை, நீங்கள் என் அன்பை விழிக்கச் செய்யாமலும், அல்லது எழுப்பாமலும் இருக்க மான்கள் மீதும் காட்டு மான்கள் மீதும் வாக்குறுதி கொடுங்கள். நான் என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன். இங்கே அது வந்தது. மலைகளுக்கு மேல் துள்ளி வந்தது. குன்றுகளுக்குமேல் சறுக்கி வந்தது. என் நேசர் வெளிமான் அல்லது குட்டி மானைப் போன்றவர். அவர் எங்கள் சுவற்றுக்குப் பின்னால் நிற்பதையும், ஜன்னல் திரையின் வழியாகப் பார்ப்பதையும் நீங்கள் பார்க்கலாம். என் நேசர் என்னிடம், “எழுந்திரு என் அன்பே! என் அழகே! வெளியே போகலாம். பார், மழைக்காலம் போய்விட்டது. மழை வந்து போனது. பூமியில் பூக்கள் மலர்ந்துள்ளன. இது பாடுவதற்குரிய காலம். கவனி, புறாக்கள் திரும்பிவிட்டன. அத்தி மரங்களில் காய்கள் தோன்றியுள்ளன. திராட்சைக் கொடிகள் மணம் வீசுவதை நுகர்ந்துபார். எழுந்திரு என் அன்பே, அழகே, நாம் வெளியே போகலாம்.”