தீத்து 1:1-7

தீத்து 1:1-7 TCV

பவுலாகிய நான் இறைவனின் ஊழியனாகவும், இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகவும் இருக்கிறேன். நான் இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுடைய விசுவாசத்திற்காகவும், இறை பக்திக்கு வழிநடத்தும் சத்தியத்தைப் பற்றிய அறிவிற்காகவுமே இந்த ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிறேன். இந்த விசுவாசமும் அறிவும் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்கிற எதிர்பார்ப்பில் தங்கியிருக்கிறது. பொய் சொல்லாத இறைவன் இந்த நித்திய வாழ்வை காலம் தொடங்கும் முன்னதாகவே வாக்குப்பண்ணினார். இப்பொழுது அவரால் நியமிக்கப்பட்ட காலத்தில், தம்முடைய வார்த்தையை வெளியரங்கமாக்கினார். நம்முடைய இரட்சகராகிய இறைவனுடைய கட்டளையினாலேயே என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பிரசங்கத்தின் மூலமாய் இது வெளியரங்கமாக்கப்பட்டது. பவுலாகிய நான் நமது பொதுவான விசுவாசத்தில் என் உண்மையுள்ள மகனான தீத்துவுக்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய இறைவனாலும், இரட்சகராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. கிரேத்தா தீவில் முடிவுபெறாதிருக்கிற வேலைகளை, ஒழுங்குபடுத்தி முடிப்பதற்காகவே நான் உன்னை அங்கு விட்டுவந்தேன். நான் உனக்குக் கூறியதுபோல, எல்லாப் பட்டணங்களிலும் நீ சபைத்தலைவர்களை நியமி. ஒரு சபைத்தலைவன் குற்றம் காணப்படாதவனாகவும், ஒரே மனைவியை மட்டும் உடைய கணவனாகவும் இருக்கவேண்டும். அவனுடைய பிள்ளைகளும் முரட்டுகுணமுடையவர்கள் என்றோ, கீழ்ப்படியாதவர்கள் என்றோ குற்றம் சாட்டப்படுகிறவர்களாய் இருக்கக்கூடாது. ஆனால் அவர்கள் விசுவாசிகளாய் இருக்கவேண்டும். ஏனெனில், ஒரு திருச்சபைக்குப் பொறுப்பாயிருக்கும் ஊழியன், இறைவனின் வேலை அவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு இருப்பதால், அவன் குற்றம் காணப்படாதவனாக இருக்கவேண்டும். அவன் கர்வம் பிடித்தவனாகவோ, முற்கோபம் உள்ளவனாகவோ, மதுபான வெறிக்கு அடிமையானவனாகவோ இருக்கக்கூடாது. அவன் வன்முறையில் ஈடுபடுகிறவனாகவோ, நேர்மையற்ற முறையில் இலாபம் ஈட்டுகிறவனாகவோ இருக்கக்கூடாது.

தீத்து 1:1-7 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்