தீத்து 1:1-7

தீத்து 1:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தேவனுடைய ஊழியக்காரனும், இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனுமாகிய பவுல், பொதுவான விசுவாசத்தின்படி உத்தம குமாரனாகிய தீத்துவுக்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக. பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம்பண்ணி, அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி, ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார். நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தாதீவிலே விட்டுவந்தேன். குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே ஏற்படுத்தலாம். ஏனெனில், கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய், குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடியாதவனும், இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும்

தீத்து 1:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பவுலாகிய நான் இறைவனின் ஊழியனாகவும், இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகவும் இருக்கிறேன். நான் இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுடைய விசுவாசத்திற்காகவும், இறை பக்திக்கு வழிநடத்தும் சத்தியத்தைப் பற்றிய அறிவிற்காகவுமே இந்த ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிறேன். இந்த விசுவாசமும் அறிவும் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்கிற எதிர்பார்ப்பில் தங்கியிருக்கிறது. பொய் சொல்லாத இறைவன் இந்த நித்திய வாழ்வை காலம் தொடங்கும் முன்னதாகவே வாக்குப்பண்ணினார். இப்பொழுது அவரால் நியமிக்கப்பட்ட காலத்தில், தம்முடைய வார்த்தையை வெளியரங்கமாக்கினார். நம்முடைய இரட்சகராகிய இறைவனுடைய கட்டளையினாலேயே என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பிரசங்கத்தின் மூலமாய் இது வெளியரங்கமாக்கப்பட்டது. பவுலாகிய நான் நமது பொதுவான விசுவாசத்தில் என் உண்மையுள்ள மகனான தீத்துவுக்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய இறைவனாலும், இரட்சகராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. கிரேத்தா தீவில் முடிவுபெறாதிருக்கிற வேலைகளை, ஒழுங்குபடுத்தி முடிப்பதற்காகவே நான் உன்னை அங்கு விட்டுவந்தேன். நான் உனக்குக் கூறியதுபோல, எல்லாப் பட்டணங்களிலும் நீ சபைத்தலைவர்களை நியமி. ஒரு சபைத்தலைவன் குற்றம் காணப்படாதவனாகவும், ஒரே மனைவியை மட்டும் உடைய கணவனாகவும் இருக்கவேண்டும். அவனுடைய பிள்ளைகளும் முரட்டுகுணமுடையவர்கள் என்றோ, கீழ்ப்படியாதவர்கள் என்றோ குற்றம் சாட்டப்படுகிறவர்களாய் இருக்கக்கூடாது. ஆனால் அவர்கள் விசுவாசிகளாய் இருக்கவேண்டும். ஏனெனில், ஒரு திருச்சபைக்குப் பொறுப்பாயிருக்கும் ஊழியன், இறைவனின் வேலை அவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு இருப்பதால், அவன் குற்றம் காணப்படாதவனாக இருக்கவேண்டும். அவன் கர்வம் பிடித்தவனாகவோ, முற்கோபம் உள்ளவனாகவோ, மதுபான வெறிக்கு அடிமையானவனாகவோ இருக்கக்கூடாது. அவன் வன்முறையில் ஈடுபடுகிறவனாகவோ, நேர்மையற்ற முறையில் இலாபம் ஈட்டுகிறவனாகவோ இருக்கக்கூடாது.

தீத்து 1:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தேவனுடைய ஊழியக்காரனும், இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனுமாகிய பவுல், பொதுவான விசுவாசத்தின்படி உத்தம மகனாகிய தீத்துவிற்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராக இருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக. பொய்யுரையாத தேவன் ஆரம்பகாலமுதல் நித்தியஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம் செய்து அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி, ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார். நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பர்களை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தா தீவிலே விட்டுவந்தேன். குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கர்களென்றும் அடங்காதவர்களென்றும் பெயரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவன் இருந்தால் அவனையே மூப்பராக ஏற்படுத்தலாம். ஏனென்றால், கண்காணியானவன் தேவனுடைய மேற்பார்வைக்காரனுக்குரியவிதமாக, குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடிக்காதவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்காதவனும்

தீத்து 1:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவனுடைய ஒரு ஊழியனும், இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனுமான பவுல் எழுதிக்கொள்வது: தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் விசுவாசத்துக்கு உதவும் பொருட்டு நான் அனுப்பப்பட்டேன். மக்கள் உண்மையை அறிந்துகொள்ள உதவுவதற்கே நான் அனுப்பப்பட்டேன். எவ்வாறு தேவனுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை அந்த உண்மை நமக்குக் காட்டுகிறது. அந்த விசுவாசமும் அறிவும் நித்திய வாழ்வுக்கான நம்பிக்கையின் மூலமே வருகின்றது. அவ்வாழ்க்கையை நமக்குத் தருவதாக தேவன் வாக்குறுதி அளித்திருக்கிறார். தேவன் பொய் சொல்வதில்லை. சரியான நேரத்தில் உலகம் அவ்வாழ்வை அறிந்துகொள்ளுமாறு தேவன் செய்தார். தேவன் தம் போதனைகள் மூலம் இதனைச் செய்தார். அப்பணியில் என்னை நம்பியிருக்கிறார். அவற்றை நான் போதித்து வருகிறேன். ஏனென்றால், நமது இரட்சகராக இருக்கிற தேவன் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். தீத்துவுக்கு எழுதிக்கொள்வது: நாம் ஒன்றாகப் பகிர்ந்துகொள்கிற விசுவாசத்தில் நீ எனக்கு உண்மையான குமாரனைப் போன்றவன். கிருபையும், சமாதானமும் பிதாவாகிய தேவனிடமிருந்தும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உண்டாவதாக. இன்னும் செய்யவேண்டிய பல செயல்களை நீ செய்யும்பொருட்டும் உன்னை நான் கிரேத்தாவில் ஏற்கெனவே உன்னிடம் சொன்னபடி ஒவ்வொரு நகரத்திலும் மூப்பர்களை நியமிக்கும் பொருட்டும் உன்னை அங்கே விட்டுவந்தேன். மூப்பராக இருக்கிறவன் எந்தத் தவறுகளையும் செய்யாத குற்றமற்றவனாக இருக்க வேண்டும். அவன் ஒரே ஒரு மனைவியை உடையவனாக இருக்க வேண்டும். அவனது பிள்ளைகள் விசுவாசிகளாக இருக்கவேண்டும். கொடுமைக்காரர்களாகவும், கீழ்ப்படியாதவர்களாகவும் அவர்கள் இருக்கக் கூடாது. ஒரு மூப்பர் தேவனுடைய பணியைக் கவனிக்கும் கடமையை உடையவர். எனவே, அவருக்குத் தவறு செய்தோம் என்ற குற்ற உணர்வு இருக்கக் கூடாது. தற்பெருமையும், சுயநலமும், முன் கோபமும் இல்லாதவராக இருக்கவேண்டும். அவர் குடிகாரனாக இருக்கக் கூடாது. சண்டைப் பிரியனாக இருக்கக் கூடாது. பிறரை ஏமாற்றிச் செல்வம் சேர்ப்பவராகவும் இருக்கக்கூடாது.