செப்பனியா 1:6-16

செப்பனியா 1:6-16 TCV

யெகோவாவைப் பின்பற்றுவதிலிருந்து பின்வாங்கியவர்களையும், யெகோவாவின் ஆசீர்வாதத்தைத் தேடாமலும், அவரிடமிருந்து ஆலோசனைக் கேட்டு அறியாமல் இருப்பவர்களையும் அகற்றுவேன். ஆண்டவராகிய யெகோவாவுக்கு முன்பாக மவுனமாயிருங்கள். ஏனெனில் யெகோவாவின் நாள் சமீபமாயுள்ளது. யெகோவா ஒரு பலியை ஆயத்தம் செய்திருக்கிறார். அவர் தாம் அழைத்திருக்கிறவர்களைப் பரிசுத்தப்படுத்தியிருக்கிறார். யெகோவாவினுடைய பலியின் நாளில், நான் பிரபுக்களையும், இளவரசர்களையும், பிற நாட்டவரின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுகிறவர்களையும் தண்டிப்பேன். அந்நாளில் போலியான தெய்வங்களை வணங்கி, அதன் வழிபாட்டில் பங்குகொள்கிறவர்களைத் தண்டிப்பேன். அவர்கள் தங்கள் தெய்வங்களின் கோயில்களை வன்முறையாலும் வஞ்சனையினாலும் நிரப்புகிறார்கள். யெகோவா அறிவிக்கிறதாவது: அந்த நாளில் எருசலேம் மதிலிலுள்ள மீன் வாசலில் இருந்து அழுகை கேட்கும். அந்த நகரத்தின் புதிய பகுதியிலிருந்து புலம்பலும், குன்றுகளிலிருந்து அது இடிந்துவிழும் சத்தமும் உண்டாகும். எருசலேமின் சந்தைப் பகுதியில் வாழும் மக்களே; அழுது புலம்புங்கள், உங்கள் வர்த்தகர் எல்லோரும் அழிந்துபோவார்கள். வெள்ளி வியாபாரிகள் யாவரும் பாழாய்ப் போவார்கள். அந்த வேளையில் நான் எருசலேமில் விளக்குகளைக்கொண்டு தேடுவேன். யெகோவா நன்மையோ தீமையோ ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லி, ஏனோ தானோ என்று இருப்பவர்களைத் தண்டிப்பேன். அவர்கள் திராட்சை மதுவின் மண்டியைப்போல் இருக்கிறார்கள். அவர்களுடைய செல்வம் சூறையாடப்படும், வீடுகள் உடைத்து அழிக்கப்படும். அவர்கள் வீடுகளைக் கட்டுவார்கள், அதில் அவர்கள் குடியிருக்கமாட்டார்கள், திராட்சைத் தோட்டத்தை நாட்டுவார்கள். அதன் திராட்சரசத்தைக் குடிக்கமாட்டார்கள். யெகோவாவின் பெரிய நாள் சமீபித்துள்ளது; அது மிக சமீபமாய் இருந்து விரைவாய் வருகிறது. கேளுங்கள்! யெகோவாவின் நாளில் ஏற்படும் அழுகை மிகவும் கசப்பாயிருக்கும். இராணுவவீரருங்கூட கூக்குரலிடுவார்கள். அந்த நாள் கடுங்கோபத்தின் நாள், துன்பமும் வேதனையும் நிறைந்த நாள், தொல்லையும் அழிவுமான நாள், அது இருளும் அந்தகாரமுமான நாள். மப்பும் மந்தாரமுமான நாள். அரணான நகரங்களுக்கு எதிராகவும், மூலைக் கோபுரங்களுக்கு எதிராகவும் எக்காள சத்தமும் போர் முரசும் எழுப்பப்படும் நாள்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த செப்பனியா 1:6-16